Tuesday, June 10, 2014

பொலிஸ் சேவைக்கு இடைஞ்சல் விளைவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்!

நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தும்போது பிரதேச அரசியல்வாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகவும், ஆயினும் அவர்களுக்கு ஏற்றாற் போல பொலிஸார் நடந்து கொள்ளாதுவிடுவதனால் பொலிஸாருக்கு பல்வேறு வகையிலும் இடைஞ்சல் விளைவிப்பதாகவும், அதனால் அவ்வாறு செயற்படுகின்ற அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராக சட்டத்தை நிலைநாட்டவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

தங்கள் உறவினர்களைப் பாதுகாப்பதாகக் கூறி சட்ட விரோத செயல்களைப் புரிகின்றவர்கள் விடயத்தில் நடவடிக்கை எடுக்கும்போது, சில அரசியல்வாதிகள் தகராறு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கருத்துரைக்கும்போது -

கடந்த ஐந்து நாட்களாக அவ்வாறு செயற்பட்ட பிரதேச சபைத் தலைவர்கள், உப தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பிரதியமைச்சர் ஹேமால் குணசேக்கர மற்றும் பொலிஸ் காவலர் ஒருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பிலும் பொலிஸ் காவலரின் மோட்டார் வாகனத்திற்கு தீ மூட்டியது தொடர்பிலும் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் பிரதியமைச்சரின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் காவலரிடமிருந்து வாக்குமூலம் இரண்டு பதிவாகியுள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

பொலிஸாருக்கு இடைஞ்சல் விளைவித்தது தொடர்பில் கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உப தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ருவன்வெல்ல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாருக்கு இடைஞ்சல் விளைவித்தது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அவரைக் கைது செய்வதற்கு ஆவன செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com