Monday, June 9, 2014

ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்! 28 பேர் பலி! (video)

பாகிஸ்தானின் கராச்சி நகரில், ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உள்பட 28 பேர் பலியாகினர். கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு தீவிரவாதிகள் சிலர் கைப்பற்றினர்.

தீவிரவாதிகள் அனைவரும் விமானநிலைய பாதுகாப்புப் படையினர் போல் உடையணிந்திருந்தனர். திடீரென சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்தவுடன், அருகில் இருந்த மாலிர் கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட கமாண்டோக்கள், துணைராணுவப் படையினர் ஆகியோர் விமானநிலையத்திற்கு விரைந்தனர்.

தீவிரவாதிகளுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் அனைவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியனவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ஜின்னா சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்பட்டது.

அங்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன. தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: விமானநிலையம் ஓடுதளம் முழுவதும் புகை மண்டலமான இருந்தது. பலத்த வெடி சத்தம் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தது என்றார்.

இத்தாக்குதலில், பாதுகாப்புப்படையினர், அப்பாவி பொதுமக்கள் என 13 பேர் கொல்லப்பட்டதாக சிந்து மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் சங்கீர் அகமது தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதல் கோழைத்தனமானது என்றும், தீவிரவாதிகள் முக்கிய இடங்களை தகர்க்க வேண்டும் என்பதில் எபோதும் குறியாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது என்றும் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியுள்ளார்..

இந்த தாக்குதலுக்கு, தெஹ்ரிக்-இ-தாலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷாஹிதுல்லா ஷாஹித் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தினோம். இந்த தாக்குதல் மூலம், பாகிஸ்தான் அரசுக்கு, எங்கள் இயக்கம் உயிருடன் உள்ளது என்பதை தெரிவிக்கின்றோம். இந்த தாக்குதலுக்கு எங்கள் இயக்க தலைவர் ஹகீமுல்லா மெசூத், அமெரிக்க வான்வழி தாக்குதலின்போது கொல்லப்பட்டதும் ஒரு காரணமாகும்' என்று கூறி உள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com