Tuesday, June 10, 2014

பிள்ளையின் இறுதி அமர்வு! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 26ஆவது அமர்வு இன்று!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வு இன்று சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகும் கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. தமது பதவிக்காலம் நிறைவடை வதற்கு முன்னர், மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை தலைமையில் இடம்பெறும் இறுதி அமர்வு இதுவாகும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்கும் குழுவின் பட்டியல் இன்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த விசாரணைக் குழு அடுத்தமாதம் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு அமைய, இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும் குழுவிற்கு ஐவர் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களின் இறுதி அறிக்கை 10 மாதங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் கூட்டத்தொடரிற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் எவரும் கலந்துகொள்ளவில்லை என சட்ட மாஅதிபர் பாலித்த பெர்னான்டோ குறிப்பிட்டார். எவ்வாறாயினும், நாளை இலங்கை தொடர்பில் ஜெனீவாவிற்கான நிரந்திர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க உரையாற்றவுள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. இதேவேளை பேரவையின் புதிய ஆணையாளராக ஐக்கிய நாடுகள் சபையின் ஜோர்தானின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இளவரசர் செயித் ராத் செயித் அல் ஹூசைன் நியமிக்கப்பட வேண்டுமென பான் கீ மூன் பிரேரித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com