காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை அறிவதற்கு புதிய இணையத்தளம்!
எதிர்வரும் 20 ஆம் திகதியிருந்து காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை அறிவதற்காக புதிய இணையத்தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எப்.டப்ளியூ. குணதாச தெரிவித்தார்.
WWW. PCICMP. LK என்ற புதிய இணையத்தளத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை அறிய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இணையத்தளத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான விபரங்கள் த ரவேற்றம் செய்யப்படவுள்ளதுடன் அதனை மக்கள் பார்வையிட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான அடுத்தக் கட்ட விசாரணை அமர்வுகளை கிழக்கு மாகாணத்தில் மீண்டும் நடத்துவதற்கு காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தேசித்துள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இந்தப் பகுதிகளில் ஜூன் மாதம் ஆறாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்போது மக்கள் புதிய முறைப்பாடுகளையும் முன்வைக்க முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் எப்.டப்ளியூ. குணதாச தெரிவித்தார். ஏற்கனவே காத்தான்குடியில் விசாரணைகள் இடம்பெற்றபோது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பிலும் விசேட விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஜனாதிபதியால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment