Friday, May 16, 2014

தயாபரராஜா, உதயகலா தம்பதியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை

வட மாகாண மக்களிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தயாபரராஜா. உதயகலா தம்பதியினரை கைதுசெய்வதற்கு இன்டர்போலின் உதவியை நாட தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

உதயகலா என்னும் மேற்படி பெண் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்துவதுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியென்பதும் அவரினால் ஏமாற்றப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மோதல்களைத் தொடர்ந்து மன்னாரில் தலைமறைவாகியிருந்த மேற்படி தம்பதியினர் எவ்வித ஆவணங்களுமின்றி தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்றவேளை தனுஷ்கோடியில் வைத்து தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்திகள் தம்பதியினரின் படங்களுடன் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உதயகலாவிடம் தாம் இழந்த பணத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை மேற்கொண்டு ள்ளனர். இத்தம்பதி மீது பண மோசடி, கப்பம் தொடர்பாக வடக்கு. கிழக்கு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதுடன்.

சிலவற்றில் இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இவர்கள் குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தம்பதிக்கு எதிராக வட மாகாணத்திலுள்ள நீதிமன்றங்களில் மட்டும் 11 வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றம் மேற்படி தம்பதியினரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யுமாறு நீதி அமைச்சைக் கோரியுள்ளது.

சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட இவர்கள் 2011 ஆம் ஆண்டு குறித்த இளைஞனின் குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு 10 இலட்சம் ரூபாவினை பெற்றுத் தந்தால் மகனை விடுவித்து தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அக்குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொழுப்புக்கு வந்தபோது ரயில் நிலையத்திலிருந்து அவர்களை அடையாளம் தெரியாத இடமொன்றுக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்ததுடன் இம்மூவரையும் விடுவிப்பதாயின் 30 இலட்சம் ரூபா தரப்பட வேண்டுமெனவும் அச்சுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 28 இலட்சம் ரூபாவினை செலுத்தியே தம்மை விடுவித்துக் கொண்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைவாகவே சாவகச்சேரி நீதிமன்றம் இன்டர்போலின் உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நீதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.

எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர் ஒருவரின் முன்னாள் மனைவியான உதயகலா எனும் குறித்த நபர் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரிடமிருந்து தாங்கள் இழந்த பணத்தை மீளப் பெற்றுத்தர உதவவேண்டுமெனக் கோரியும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சியூலெர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உதயகலா தங்களை கொழும்பிலுள்ள வி. எப். எஸ். க்ளோபல் யு. கே. வீஸா விண்ணப்பப்படிவங்கள் வழங்கும் நிலையத்திற்கு நேரில் அழைத்துச் சென்று பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வழங்கி தங்களை ஊக்குவித்ததாகவும் தெரிவித்தனர். உதயகலா மூன்று மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் பிரிட்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய்களை அபகரித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேர்மையான பயணி என்பதனை நிரூபிப்பதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் மேலதிகமாக 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அறவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பிரித்தானியா செல்வதற்குத் தயாரான நிலையிலிருந்த நபர்களை நீர்கொழும்பிலுள்ள ஒரு விடுதியில் தங்க வைத்த பின்னர் தலா 2 ஆயிரம் டொலர்கள் வீதம் அறவிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு வருமாறும் தான் முன்கூட்டியே அங்கு வந்து தேவையான வேலைகளை முன்னெடுப்பதாகவும் கூறிச் சென்றார். விடுதியில் தங்கியிருந்தவர்கள் விமானம் நிலையம் சென்று தேடியபோது உதயகலாவை அங்கு காணாது அப்போது தான் தாங்கள் ஏமாந்ததனை அவர்கள் உணர்ந்தனர். எங்கு தேடியும் உதயகலா பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

உதயகலா தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒரு இலங்கை அதிகாரி கூறுகையில், தமிழ்நாட்டு பொலிஸார் இவரை கைதுசெய்திருக்காவிட்டாலும் இவர்களது கைது பற்றிய செய்தியினை இலங்கை இராணுவம் பிரபல்யப் படுத்தி இருக்காவிட்டிருந்தால் இவர் இலகுவாக மேற்குலக நாடொன்றிற்கு தப்பிச் சென்றிருப்பது உறுதியென்றார். மே 05 ஆம் திகதி தனுஷ்கோடியில் சட்டவிரோதமாக வந்திறங்கிய 05 சிறுவர்கள் உள்ளிட்ட 10 தமிழர்களுடனேயே உதயகலா இருந்துள்ளார். சட்டவிரோத ஆட் கடத்தல் தொடர்பில் விரிவான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். உதயகலாவின் இரண்டாவது கணவரான கதிரவேல் தயாபரராஜாவையும் எம்மால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இவர் 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக காணாமற்போனோர் பெயர்ப் பட்டியலில் இடம்பிடித்தவர் ஆவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com