Saturday, May 10, 2014

மாணவர்களை வெளிநாட்டுத் தூதரகங்களின் துணையுடன் டொலர்களுக்கு பணயம் வைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது!

மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து அவர்களை தவ றான வழிக்கு திசைதிருப்பும் நடவடிக்கைகள் வெளிநாட்டுத் தூதரகங்களின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வெண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

மாணவர்களை டொலர்களுக்குப் பணயம் வைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நடவடிக் கைகளுக்கு தூதரகங்களும் நிதி உதவி வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மாணவர்களை தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்குப் பலியாக்க வேண்டாம் என்று ஜனாதிபதி இதன் போது அரசியல்வாதிகளைக் கேட்டுக் கொண்டார்.

அநுராதபுரம் தலாவ மகா வித்தியா லயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பில் சிலருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வி முறையை நாம் அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம். இதன் பயனாக கிராமத்திலுள்ள மாணவர்களும் தற்போது உலகளவில் தமது திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலாவையில் கல்வி பயிலும் மாணவரான நாமல் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சுக்கு இன்று பயணமாகிறார். அவர் இவ்வருடத்திற்கான சர்வதேச புத்தாக்குனர்களுக்கான போட்டியில் கலந்துகொள்ள அவரது பெயர் உலகளவில் பேசப்படுகின்றது.

இதனைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைந்த போதும் இதனைப் பொறுக்காத சில சக்திகளும் எம் மத்தியில் உள்ளன. கல்வியை சாதாரண பிள்ளைகளும் எளிதாக பெற்றுக்கொள்ளும் வகையில் கிராமங்களுக்குக் கொண்டு வந்தமையின் பிரதிபலனே இது. கணனி தொழில் நுட்பம் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் நாம் தற்போது கிராமிய மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இதன் மூலம் பயனடையும் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

அரசாங்கம் என்ற வகையில் நாம் கிராமிய கல்வித் துறைகளை முன்னேற்றி வருகையில் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கிராமிய இளைஞர்கள் முன்னேறுவதை அவர்கள் விரும்பவில்லை. இத்தகையோருடன் நான் கலந்துரையாடும் போது அவர்களின் நோக்கங்களை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்ததை வழங்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும். நாம் ஆட்சி அமைத்த காலத்திலிருந்து அதற்கிணங்கவே எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். நாம் கிராமம் நகரம் என்று எந்த மாணவர்களையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அதேபோன்று வடக்கு தெற்கு மலையகம் என்றும் பேதப்படுத்திப் பார்ப்பதில்லை.

வடக்கு கிழக்கில் பிள்ளைகள் திசை திருப்பப்பட்டதைப் போன்று தெற்கு பிள்ளைகளும் திசைதிருப்பப்பட்ட யுகம் ஒன்றிருந்தது. எவரது டொலர்களுக்கும் வேறு விதங்களில் செயற்படும் சக்திகளுக்கும் எமது பிள்ளைகளை அடிமைப்படுத்த முடியாது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் அதேவேளை நல்லொழுக்கமுள்ள எதிர்கால சந்ததியையும் உருவாக்குவது முக்கியம்.

இதனை அரசாங்கம் தனித்து முன்னெடுப்பதென்பது முடியாத காரியம். எத்தகைய சட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினாலும் இதனை நிறுத்த முடியாது. அவ்வாறெனில் ஒவ்வொரு வீட்டுக்கும் காவலுக்கு பொலிசாரை நிறுத்த வேண்டிவரும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்விமான்களும் இது விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இல்லாமற்போனது எமது சொத்துக்களான பிள்ளைகளே. 71, 89 போன்ற காலங்களில் இதுவே நடந்தது. டயர்களில் அழிக்கப்பட்டது எமது சொத்துக்களே.யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் பிரபாகரனினால் பிள்ளைகள் சீரழிக்கப்பட்டார்கள். இவர்கள் எமது சொத்துக்கள், இளைஞர் பலம் இழக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தெற்கிலும் நடைபெற்றுள்ளது. இவை யனைத்திலும் நாம் இழந்தது எமது சொத்துக்களையே. இவற்றைக் கவனத்திற்கொண்டு எமது பிள்ளைகளை வளர்ப்பதில் அனைவரும் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் கலந்து கொள்வதற்காக அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து லொஸ்ஏஞ்சல்ஸ் புறப்படும் மாணவர் நாமலுக்கு ஜனாதிபதி மடிகணனியொன்றைப் பரிசளித்து கௌரவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com