Thursday, May 1, 2014

மதவாதமும் இலங்கையும்! - வெல்லவாய் சுமனபோதி தேரர்

இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளது என்பதை இறந்த கால வரலாற்றை எடுத்து நோக்கும்போது தெளிவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் பொதுமக்களே இன்னல்களை அனுபவித்தனர். இனம், மதம் எதுவாக இருந்தபோதும், பிரச்சினைகள் என்று வரும்போது அவர்கள் இன்னல்களைச் சந்தித்தனர்.

நிகழ்கால நிகழ்வுகளை எடுத்து நோக்கினாலும் அவ்வாறே உள்ளன. சென்ற முப்பது ஆண்டு காலமும் பொதுமக்களே பாரிய இன்னல்களை அனுபவித்தார்கள். அதேபோல, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற செயற்பாடுகளினூடாக இன்னல்களைச் சுமப்பவர்கள் இந்நாட்டு மக்களே. அதனால், இப்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகள் வெகுதூரம் செல்லாமல் இருக்க அதனை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவர்களாக உள்ளோம். அவ்வாறு கிள்ளி எறியும்போது அது எல்லோருக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும். அதனை அடிப்படையாக வைத்தே ஒவ்வொருவரினதும் எண்ணப்பாடுகளை அலசி ஆராய்வதற்காக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

மதவாதத்தை நாம் எடுத்துக் கொண்டால் அது பாரியதொரு தலைப்பு. அவ்வாறான ஒரு விடயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச முடியாது. பொறுமையாகவே செய்ய வேண்டும். ஏன் என்றால், அதுவே வைராக்கியத்தையும் குரோதத்தையும் உண்டுபண்ண வல்லது. எது எவ்வாறாயினும் மதவாதம் பற்றிப் பேசுவதற்கு முன், மதங்கள் தொடர்பிலான சில விடயங்களை அலச வேண்டியுள்ளது… அது நன்மை பயக்க்க் கூடியது.

நிகழ்கால உலகில் மூன்று முக்கிய மதங்கள் உள்ளன. கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க, இஸ்லாமிய, பௌத்த மதங்களே அவை. அம் மதங்கள் எல்லாவற்றிலும் உபதேசிக்கும் போது, ஏதேனும் ஒருவகையில் குறிக்கோள் ஒன்று உள்ளது. அவ்வாறாயின் அம்மதங்கள் மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகின்றது? என்பது மிக முக்கியமான விடயமாகும். அதனைத் தெளிவுறுத்துவதன் ஊடாக மதங்கள் பற்றி விபரிக்கலாம்.

கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க மத்த்தை எடுத்து நோக்கினால், அதன் அடிப்படை எண்ணக்கருவானது “உலகம் மகாபலம் பொருந்திய இறைவன் என்ற ஒருவனால் உருவாக்கப்பட்டது” என்றிருக்கின்றது. அம்மத்த்தைச் சரிவர பின்பற்றினால் கடவுளுடன் ஒன்றித்து சந்தோசிக்கலாம். அதாவது, மனிதன் முதல் உலகிலுள்ள அனைத்தையும் பரிபாலிக்கக் கூடியவன் கடவுளே.. அவனே உலகைப் படைத்தான். அக்கடவுளுக்கு தேவையான முறையில் நடந்துகொண்டால் ஊழியூழி காலம் சுவனத்தில் சந்தோசித்து இருக்கலாம். மாறாக, வழி தவறினால் கொடிய நரகமே அவர்களது இருப்பிடமாக இருக்கும் என்பது அவர்களுடைய அடிப்படை எண்ணக்கருவாகும்.

இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலும் இதற்குச் சமமானது. அதற்கேற்ப, “உலகம் எல்லாப் புகழும் மிக்க வல்லவன் ஒருவனால் நிர்மாணிக்கப்பட்டதாகும். மனிதர்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் கடவுள் அறிகின்றான். மேலும் மக்கள் அனைவரும் மீண்டெழுப்பப்படும் நாளில், அவர்களது நன்மை - தீமைகள் நிறுக்கப்பட்டு அதற்கேற்ப நீதி வழங்கப்படும். நன்மை செய்தவர்கள் நல் சுவர்க்கத்திற்கும், தீமை செய்தவர்கள் தீய நரகத்திற்கும் அனுப்பப்படுவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த சமயத்தை எடுத்து நோக்கினால், இது ஏனைய மதங்களை விட முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிறந்த அனைத்து உயிரினங்களும் வயதிற்குச் செல்லும், நோய் வாய்ப்படும், மரணத்தை அனுபவிக்கும்” என்று துன்புறக் கூடிய நிலையையே எடுத்துக் கூறுகின்றது. மேலும், மீண்டும் மீண்டும் அவதரித்து அத்துன்பங்களை அனுபவிக்கும். சில நேரம் துன்பத்தை அனுபவிக்கும்… அதுவே பெரும் இன்பத்தைத் தரும். அவ்வாறு துன்பத்தை அனுபவிப்பதாயின், அதிலிருந்து மீள்வதற்கான வழிவகையும் உள்ளது என “சத்துரார்ய சத்ய” குறிப்பிடுகின்றது.

இப்போது நாங்கள் மேலே குறித்த சமயங்கள் பற்றி அலசுவோம்…

கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க பார்வையின்படி, உலகம் எல்லா வல்லமையும்மிக்க கடவுள் ஒருவரினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமும் அதனையே சொல்கிறது. உலகம் ஏதேனும் ஒருவகையில் கடவுளால் நிர்மாணிக்கப்பட்டதாயின், நிர்மாணித்த கடவுள் கிறிஸ்தவ - கத்தோலிக்க அல்லது இஸ்லாமியக் கடவுளா? என்ற வினா மக்கள் மனங்களில் தோன்றுவது இயல்பானதே. உண்மையில் உலகத்தை யார்தான் உருவாக்கினார்? கிறிஸ்தவ/கத்தோலிக்க கடவுள் உருவாக்கியிருந்தால் இஸ்லாமிய மதம் பொய்யானது. இரண்டும் உண்மையாக முடியாது. இரண்டும் உண்மையானால் உலகம் அவர்கள் சொல்லும் கடவுளால் உருவாக்கப்படவில்லை. ஏன் என்றால், உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டதாயின், அது அவருக்கு தீமையை விளைவிப்பதனால். எனவே, உலகம் என்பது ஒருவரின் உருவாக்கமன்று. இருவரின் உருவாக்கமே. அப்படியாயின் எல்லாம் வல்லவன் உலகில் ஒருவன் இருக்க முடியாது. கூட்டாகவே உள்ளது. அதனால், ஆரம்ப்ப் பகுதியை எடுத்து நோக்கினால், ஒன்றுடன் ஒன்று முரணாகவே இருக்கின்றது. அப்படியாயின், அவற்றில் அடங்கியுள்ள ஏனைய விடயங்களும் ஒருமைப்பாடாக இருக்க வேண்டும்.

பௌத்த மதத்தை எடுத்து நோக்கும்போது, அங்கு உயிரினங்கள் துன்பத்திற்கு உள்ளாவது பற்றியே எடுத்தோதப்பட்டுள்ளது. அதாவது, வயதிபத்தை அடைதல், நோய்வாய்ப்படுதல், மரணம், துன்பம், கவலை, விரதம், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், விருப்பமற்றவர்களுடன் இணைதல், தேவையானவை கிடைக்காமை போன்ற கவலைகளுடன் பிறந்த மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் துன்பத்திற்கு உள்ளாகும். பார்த்த பார்வையிலேயே சில உயிரினங்களின் தோற்றப்பாடு விளங்கும். உண்மையிலேயே நாங்கள் வயோதிபத்தை அடைய அடைய துன்புறுகிறோம். 60, 70 வயதை அடையும்போது, முடிகள் பழுத்து, பற்கள் உதிர்ந்து சரீரம் அலையாய் மடிந்து, கை கால்கள் சக்தியிழந்து முதுகு வளைந்து, எல்லோராலும் வேண்டத்தகாதவராக மாறுவது எல்லோருக்கும் உரித்தான செயற்பாடாகும். அது சிங்களவருக்கும், தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும், மேற்கத்தேயவருக்கும் பொதுவான உரிமை. நோய்வாய்ப்படுவது அவ்வாறுதான். மரணமும் அவ்வாறுதான். அதற்கு மேலாக கவலை, துன்பமும் அவ்வாறுதான். அதனால் பௌத்த மத்த்தில் சொல்லப்படுகின்ற துன்பம் உண்மையானது.

அதேபோல, அனைத்து உயிரினங்களும் மீண்டும் மீண்டும் அவதரிப்பதாக பௌத்த மதம் குறிப்பிடுகின்றது. பார்க்கும் பார்வையில் காட்சி தரக்கூடியது அல்ல. என்றாலும், ஆராய்ந்து பார்த்தால் புலனாகும். எட்கா கேஸி, ப்ரைடே மார்பி போன்றவர்களின் ஆய்வின் மூலம் மறுபிறப்பின் உண்மை தெளிவாகியுள்ளது. மறுபிறப்பு பற்றிய குறிப்புக்கள் மூலமும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மறுபிறப்பு இருந்தால் துன்பத்தை அடைந்தேயாக வேண்டும். ஏன் என்றால் பிறந்தவர்கள் அனைவரும் துன்பத்தை அடைந்தேயாக வேண்டும். மீள் பிறப்புக்கான காரணம் பற்றியும் பௌத்த மதம் எடுத்துச் சொல்கிறது.

அதாவது கண், காது, மூக்கு, நாக்கு, உடம்பு, உள்ளம் என்ற அனைத்து புலனுறுப்புக்களினாலும் பெறப்படுகின்ற காட்சி, சத்தம், நாற்றம், சுவை, தீண்டுதல், எண்ணங்கள் என்ற குறிக்கோள்களில் இருக்கின்ற பேராசை. அதாவது காட்சி, சத்தம், நாற்றம் (மணம்), சுவை, தீண்டுதல், எண்ணங்கள் எனும் குறிக்கோள்களில் இருக்கின்ற சில ஆசைகளும், பிரியங்களும், விருப்புக்களும், தேவைகளும், பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மீண்டும் மீண்டும் பிறக்கின்ற தன்மையை ஏற்படுத்துகின்றது. மீண்டும் மீண்டும் துன்பத்தை அனுபவிக்கச் செய்கின்றது. அதுவும் சரிதான்.

தமிழில் - கலைமகன் பைரூஸ்

நீளும்....

2 comments :

Najimudeen May 2, 2014 at 8:55 PM  

கிறிஸ்தவ கடவுளும் இஸ்லாமியக் கடவுளும் ஒருவர்தான் என்பதனை அறியாத ஒரு தேரர் இதனை எழுதியிருக்கிறார். அவருக்கு எமது அனுதாபங்கள்.

Anonymous ,  May 4, 2014 at 10:54 AM  

கிறிஸ்தவ - கத்தோலிக்க இஸ்லாமிய, பௌத்த மதங்களைச் சொல்லியுள்ள தேரர் இந்துமதம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...

இந்துமதம் ஒன்று இருப்பது பற்றி அவருக்குத் தெரியாதா? அல்லது இவ்வளவு பெரிதாக விடயங்களைத் தெளிவுபடுத்துகின்ற அந்த மதகுருவுக்கு இந்துமதம் என்றால் எலர்ஜிக்கோ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com