Thursday, May 15, 2014

இறுதிக்கட்ட மோதலின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர் இந்தியாவில்!

காணாமல் போனதாகக் கூறப்படுவோரில் அநேகர் வெளிநாடுகளில் இருப்பது நிரூபணம்

காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்ற விடயம் எல்.ரீ.ரீ.ஈ. யின் முன்னாள் உறுப்பினர் கே. தயாபரராஜா தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதன் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளதென பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குடியேறியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நாம் சர்வதேச நாடுகளிடம் விபரம் கோரியுள்ளோம். அந்நபர்களின் பெயர் விபரங்கள் எமக்கு கிடைக்குமாக இருந்தால், காணாமற்போனதாக கூறப்படுபவர்களின் பெயர்ப்பட்டியலில் 90 சதவீதமானவர்களின் பெயரை எம்மால் நீக்கக் கூடியதாக இருக்குமெனவும் பிரிகேடியர் கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ. முன்னாள் உறுப்பினரான தயாபரராஜா (33) யாழ்ப்பாணத்தில் கணனித்துறை பொறியியலாளர் ஆவார். இவர் இறுதிக்கட்ட மோதலின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த போதும், துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சர்வதேச செய்திச் சேவைகள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் படத்துடன் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவர் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு சென்றவேளை, தனுஷ்கோடியில் வைத்து தமிழ் நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தயாபரராஜா இது கால வரை தலை மறைவாக வாழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இச்சம்பவமானது, பல்கலைக்கழக விரிவுரையாளர் கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச செய்திச் சேவைகளினால் முன்வைக்கப்படும் செய்திகளில் உண்மைத் தரவுகள் இல்லாதுள்ளமைக்கு சிறந்த உதாரணமாகுமெனவும் பிரிகேடியர் சுட்டிக் காட்டினார்.

நாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் இருந்த போதும் அதற்குப் பின்னரும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் சட்டவிரோத வழிகளை கையாண்டு மேற்குலக நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை, மறைக்கும் வகையில், மோதலின் போது பலர் காணாமற் போனதாக பெயர் பட்டியலை வெளியிட்டு சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை அரசாங்கத்துக்கும் படையினருக்கும் அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

கணனி பொறியியலாளரான தயாபரராஜா ஏதோவொரு காரணத்திற்காகவே தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளார். அவர் காணாமற்போனதும், அதற்கு இராணுவம் தான் காரணமென கதை கட்டி விட்டார்கள். இந்த பொய் குற்றச்சாட்டினை நாம் ஏற்க மறுத்திருந்த போதிலும், இது இன்று ஆதாரங்களுடனேயே நிரூபணமாகியுள்ளது.

தயாபரராஜா போன்று காணாமற்போனவர்களின் பெயர் பட்டியலில் இடம்பிடித்த எத்தனையோ பேர் இன்றும் உயிருடன் அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்களென்று நாம் உறுதியாக நம்புகின்றோமெனவும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com