Saturday, May 24, 2014

மஹிந்தவின் வருகையை வைகோவோ, கருணாநிதியோ ஜெயா அல்லது மற்றவர்கள் எதிர்ப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை!.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை வைகோவோ, தி.மு.க தலைவர் கருணாநிதியோ அல்லது மற்றவர்களோ எதிர்ப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவர்களை இலங்கைத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் நம்புவதில்லை. இதனை பாராளுமன்றத் தேர்தலே தெளிவாக உணர்த்தி விட்டது என பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத்தின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிதெரிவித்துள்ளார்.

புதிய இந்தியப் பிரதமராக திங்கட்கிழமை பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயல், சார்க் அமைப்புகளில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவர் என்ற அடிப்படையிலேயே இவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால் இந்த அழைப்புக்குத் தமிழக அரசு, இலங்கைத் தமிழர் ஆதரவுக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ் நாட்டில் வெளியாகும் பிரபல பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே சுப்பிரமணிய சுவாமி மேல் வருமாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து வருமாறு இந்தியாவை சுற்றிலும் பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன. அந்த நாடுகளோடு, நாம் என்றைக்கும் நட்புணர்வோடு இருந்தால்தான், இந்தியாவில் நாம் பிரச்சினைகள் ஏதுமின்றி, நிம்மதியாக இருக்க முடியும். அதனால் தான், 'சார்க்' என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி, தெற்காசியாவில் இருக்கும் நாடுகளையெல்லாம் அதில் உறுப்பினர்களாக்கி வைத்திருக்கிறோம்.

அந்த நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியாவின் புதிய பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு, அழைப்பு விடுப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில்தான், 'சார்க்' கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இருக்கும் இலங்கைக்கும், விழாவுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், உடனே அதற்கு எதிராக தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலரும் கருத்து சொல்கின்றனர். இதற்கு நாம் காது கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதோ பிழைப்புவாதத்துக்காக, இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழ் ஆதரவு தலைவர்கள் கையில் வைத்துக்கொண்டு அலைகின்றனர்.

அயல் நாடுகளுடன் இராஜீக உறவுகளை பேணுவதற்கு, மத்திய அரசு தரப்பில் மட்டுமல்ல, மாநில அரசு தரப்பிலும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படுவதாகத்தான் அர்த்தம். இராஜீக உறவுகளை பேணுவதற்காக, இந்திய நாட்டின் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு, மஹிந்த வரும்போது, அதற்கு மாநில முதல்வராக இருப்பவர், எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால், அவர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்து, தன் சார்பில் தன் அமைச்சரவை பிரதிநிதி யாரையாவது அனுப்பி வைக்கலாம். அதை செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய அமைச்சரவையையும் கலைக்க வேண்டும்.

மற்றபடி, முதல்வருக்கே இதுதான் நிலை என்கிறபோது, தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, வைகோவோ, மற்றவர்களோ, மஹிந்தவின் வருகையை எதிர்ப்பதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. அவர்களையெல்லாம், இலங்கைத் தமிழர்கள் கூட நம்புவதில்லை. தமிழக மக்களும் நம்புவதில்லை. இதனை நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தல் தெளிவாக உணர்த்திவிட்டது. இலங்கையில் இருக்கும் தமிழர்களின் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க வேண்டும் என்றால், அந்த நாட்டின் தலைவருடன் இணக்கமாக செயற்பட்டு, லேசான அழுத்தம் கொடுப்பதன் மூலம்தான் அதை செய்ய முடியும்.

அதுதான், சாதுரியமான நடவடிக்கையாக இருக்கும். அதைத்தான், பா.ஜ.க அரசாங்கம் செய்யப் போகிறது. இதேபோல்தான் தமிழக மீனவர்கள் பிரச்சினையும். அதை விட்டு விட்டு, எடுத்தோம் - கவிழ்த்தோம் என செயற்படுவதால், இலங்கைத் தமிழர்களுக்கு பிரச்சினைதான் கூடும்; குறையாது. - என்றார் சுப்பிரமணிய சுவாமி.

2 comments :

Anonymous ,  May 25, 2014 at 5:06 AM  

well said Subramani.
It's true.

Anonymous ,  May 25, 2014 at 7:45 PM  

Our most respected president represents the ceremonial function
of the Indian new government on behalf of the citizens of Srilanka and not for the Tamil Nadu.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com