Tuesday, April 1, 2014

உக்ரேனிய எல்லையில் இருந்து ரஷ்யா துருப்புக்களை திரும்பப்பெற வேண்டும் என்று ஒபாமா கோருகிறார்! By Will Morrow

ஜனாதிபதி ஒபாமா CBS News பேட்டி ஒன்றில் தோன்றி, கடந்த வாரம் ரஷ்ய கூட்டமைப்பில் கிரிமியா இணைக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிற்கு எதிராக தன் இறுதி எச்சரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

மாஸ்கோ ஆயிரக்கணக்கான துருப்புக்களை குவித்துள்ளது, ஒரு படையெடுப்புக்கு அச்சுறுத்துகிறது, ரஷ்யா அதன் துருப்புக்களை உக்ரேன் எல்லையில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என அமெரிக்க அதிகாரிகளும் செய்தி ஊடகங்களும் கூறுபவற்றை ஒபாமா மீண்டும் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் புதிதாக நிறுவப்பட்டுள்ள, வெளிப்படையான ரஷ்ய-விரோத, வலதுசாரி அமெரிக்க கைப்பாவை கியேவ் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்னும் அவருடைய முந்தைய வலியுறுத்தலுடன் இதைப் பிணைத்துள்ளார். இது கடந்த மாதம் பாசிசத் தலைமையிலான ஆட்சி மாற்றத்தை ஒட்டி ஆட்சி பதவிக்கு வந்திருப்பதை நடைமுறையில் அங்கீகாரம் செய்வதற்கு ஒப்பாகும். மேற்கத்தைய ஆதரவு அரசாங்கத்தை அங்கீகரிக்க மாஸ்கோ மறுத்துவிட்டது.

ரஷ்யத் துருப்புக்கள் “எல்லை முழுவதும் குவிக்கப்பட்டுள்ளன” என்று கூறிய ஒபாமா, “இது உக்ரேனை மிரட்டும் வெறும் முயற்சியாக இருக்கலாம் அல்லது அவர்களிடம் வேறு திட்டங்கள் இருக்கலாம்” என்றும் சேர்த்துக் கொண்டார்.

கடந்த வெள்ளியன்று புட்டின் ஒபாமாவிற்கு தொலைபேசி மூலம் “நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வு” குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறினார் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இருவரும் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவைச் சந்தித்து “அடுத்த நடவடிக்கை பற்றி விவாதிப்பார்” என்பதை ஒப்புக் கொண்டனர்.

ஒபாமாவின் பேட்டியானது, அவருடைய முந்தைய அறிக்கைகள் மற்றும் வாஷிங்டனின் ஐரோப்பிய கூட்டாளிகளின் அறிக்கைகள் போலவே, ரஷ்யா ஆக்கிரமிப்பாளர் போலவும் அமெரிக்க உலகத்தில் அமைதி, வளம் மற்றும் ஜனநாயகத்தை காக்கும் நாடு போலவும் உலகை தலைகீழாக காட்டுகிறது. பிராந்தியத்தில் சர்வஜன வாக்கெடுப்பை தொடர்ந்து கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்டதை அவர் கண்டித்து, “நீங்கள் பெரிய, வலுவான நாடாகையால் அங்கு துருப்புக்களை அனுப்பி நாட்டின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டீர்கள்” என்றும் கூறியுள்ளார்; பெரும் பாசாங்குத்தனத்துடன் கூறுகிறார்: “21ம் நூற்றாண்டில் சர்வதேச நெறிகளும் சட்டமும் இவ்வாறு கடைப்பிடிக்கப்படுவதில்லை.”

அமெரிக்க அரசாங்கம் அறிந்துள்ள ஒரே “சர்வதேச நெறி” உலகில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக உள்ளது என அது கருதும் எந்த நாட்டிற்கு எதிராகவும் போர் தொடுத்து அதன் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் உரிமைதான். இதில் 1999ம் ஆண்டு சேர்பியாவற்கு எதிரான போர், அந்நாட்டின் ஒரு மாநிலமான கொசோவோவை பிரித்தது, ஈராக் போரில் மில்லியன் கணக்கான மக்களை கொன்றது மற்றும் ஆப்கானிய படையெடுப்பு, லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர், இப்பொழுது சிரியாவில் நடத்தப்படும் பினாமிப் போர் ஆகியவை அடங்கும்.

“ரஷ்யாவை சுற்றிவளைப்பதில் எங்களுக்கு அக்கறை இல்லை, உக்ரேனிய மக்கள் தங்கள் வாழ்வைப் பற்றிய முடிவை தாங்களே எடுக்க வேண்டும் எனத் தெளிவாக்குவதைவிட உக்ரேனில் எங்களுக்கு அக்கறை இல்லை” என்று ஒபாமா அயோக்கியத்தனமாக கூறுகிறார். அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவை இராணுவ முறையில் சூழ முற்படுகின்றன என்பதை அவர் மறுத்தார்.

உண்மையில், அமெரிக்காவின் கிழக்கு ஐரோப்பா குறித்த வெளியுறவுக் கொள்கை, சோவியத் ஒன்றியம் 1991ல் கலைக்கப்பட்டதில் இருந்து, துல்லியமாக ரஷ்யாவை வலுவிழக்கச் செய்வதும் இராணுவ முறையில் அதைச் சூழ்வதும்தான்; இதற்காக அது முன்னாள் கிழக்கு முகாம் நாடுகளை மற்றும் சோவியத் குடியரசுகளை அமெரிக்க, ஐரோப்பிய செல்வாக்கு மண்டலத்தில் ஒருங்கிணைக்க, அதாவது ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ இவற்றுடன் ஒருங்கிணைக்க நோக்கம் கொண்டுள்ளது. இது “வண்ணப் புரட்சிகள்” என அழைக்கப்பட்டதையும், வாஷிங்டன் உக்ரேன், ஜோர்ஜியாவில் ஊக்கம் கொடுத்ததையும் அடக்கியுள்ளது. இக்கொள்கை இப்பொழுது ஸ்வோபோடோ மற்றும் வலது பிரிவு போன்ற பாசிச பினாமிப் படைகளை பயன்படுத்தி ரஷ்யாவுடன் பிணைப்பு கொண்டுள்ள உக்ரேனிய அரசாங்கத்தை கவிழ்ப்பதில் உச்சக்கட்டம் அடைந்தது.

வெள்ளிக்கிழமை பேட்டி, புதன் அன்று இதைபோல் இழிந்த ஒபாமாவின் உரையைப் போல்தான் இருந்தது; அதில் அவர் ஈராக்கில் அமெரிக்கப் போர்க் குற்றங்கள் குறித்த குறிப்பை அல்லது 1999ல் சேர்பிய தலையீடு பற்றியும் நிராகரித்தார்; அதே நேரத்தில் அமெரிக்கா உக்ரேனிய பாசிஸ்ட்டுக்களுடன் ஒத்துழைத்துள்ளதையும் மறுத்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக, இன்னும் நேட்டோ மற்றும் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பு முன்னாள் கிழக்கு முகாம் நாடுகளிலும் மற்றும் பால்டிக் நாடுகளிலும் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்; மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளும் தேவை எனக் கூறியுள்ளார். கிரிமியா இணைப்பிற்காக ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் என்று இல்லாமல், கிரிமியாவில் இருந்து ரஷ்யா படைகளை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும், கியேவ் புதிய ஆட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவும் பொருளாதாரத் தடைகள் விரிவுபடுத்தப்படும் என்றார்.

சமீபத்திய நாட்களில் அமெரிக்க செய்தி ஊடகம் நிர்வாகத்தின் உக்ரேனிய படையெடுப்பை ரஷ்யா மேற்கொள்ளக்கூடும் என்னும் எச்சரிக்கைகளை எந்தவித ஆதாரமும் இன்றி வெளியிட்டுள்ளது. கியேவில் உள்ள அதன் வாடிக்கை அரசாங்கத்துடன் வெள்ளை மாளிகை அதன் பிரச்சாரத் தாக்குதலை ஒருங்கிணைத்துள்ளது.

வியாழன் அன்று உக்ரேனின் நவ-பாசிச சமூக தேசியக் கட்சியின் முன்னாள் தலைவரும் உக்ரேனிய தேசியப் பாதுகாப்புக் குழுவின் தற்போதைய தலைவருமான ஆண்ட்ரியி பருபிய் ரஷ்யா உக்ரேனிய எல்லையில் 100,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளாகவும் படையெடுக்கத் தயார் செய்கிறது என்றும் கூறினார். பெரும்பாலான மேற்கத்தைய செய்தி ஊடகத் தகவல்கள் ரஷ்ய துருப்புக்கள் எல்லையில் 30,000 என்று கூறுகின்றன.

பிரித்தானியாவின் Telegraph செய்தித்தாள் நேற்று “உக்ரேன் நெருக்கடி: விளாடிமீர் புட்டினின் மறைந்துள்ள இராணுவத்திற்கு எல்லை வேட்டை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது: அது ரஷ்யத் துருப்புக் கட்டமைப்பு பற்றிய வினாவை எழுப்பியுள்ளது.ரஷ்ய-உக்ரேனிய எல்லையில் 200 மைல் பயணத்தின் விளைவுகளைப் பற்றி எழுதுகையில் செய்தித்தாள் முடிவுரையாகக் கூறியிருப்பது: “ரஷ்யப் படையெடுப்பு சக்திகள் –இங்கு இருந்தால் – நன்கு மறைக்கப்பட்டுள்ளன. பனித்திரை மறைந்தால், அடையாளம் தெரியாத வடிவங்கள் மரங்கள், வீடுகள் பழைய லாடா கார்கள் என வெளிப்படும். அரை இருளில் இருந்து டாங்குகள் வெளிப்படவில்லை, சந்தேகத்திற்கு உரிய ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேல் பறக்கவில்லை, பச்சை வண்ணம் பூசப்பட்ட டிரக்குகள் சாலைகளில் செல்லவில்லை.”

ரஷ்ய அரசாங்கம் அத்தகைய கட்டமைப்பு குறித்த தகவல்களையும் மறுத்துள்ளது. வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித்தொடர்பாளர் அலெக்சாந்தர் லுகாஷேவிச் வெள்ளியன்று சர்வதேச நோக்கர்கள் குழு ஒன்று பகுதியைப் பார்வையிட்டு படையடுப்பு திட்டத்திற்கு சான்று ஏதும் இல்லை என அறிவித்தது. ரஷ்ய அரசாங்கம் அது இராணுவப் பயிற்சிகளை நடத்துவதாகவும் உக்ரேன் மீது படையெடுக்கும் நோக்கம் அதற்கு இல்லை என்றும் கூறியுள்ளது.

ரஷ்ய படைகள் நடமாட்டம் அதன் எல்லையில் விரோத அரசாங்கம் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ளதற்கு ஒரு பாதுகாப்பான விடையிறுப்பாகும்; அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் அண்டை நாடுகளில் ஆத்திரமூட்டும் வகையில் படைகளை வைத்திருப்பதற்கும் விடையிறுப்பாகும். இது அமெரிக்காவிலிருந்து 300 அதிகாரிகள் மற்றும் 12 போர் விமானங்களையும் போலந்துக்கு அனுப்பியதையும் உள்ளடக்கியுள்ளது.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர்கள் ஜோன் மக்கெயின் மற்றும் லிண்சே கிரகாம் இருவரும் ஒபாமா இன்னும் அதிகம் சென்று உக்ரேனுக்கு இராணுவ உதவி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் அதில், “சிறு ஆயுதங்கள், வெடி மருந்துகள், பாதுகாப்பு ஆயுதங்கள் கவச எதர்ப்பு, விமான எதிர்ப்பு முறைகள் போன்றவை” அடங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

பக் மக்கியோன், மன்றத்தின் ஆயுதப் படைகள் குழுவின் குடியரசுக் கட்சித் தலைவர் உக்ரேனில் “போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது” என்றார். ஒபாமாவை அவர்

“திரு புட்டினின் படையெடுப்பை முகங்கொடுக்காமல்....தொடர்ந்த செயலற்ற தன்மைக்கு” கண்டித்தார்.

புட்டின் ஆட்சி மீது அழுத்தத்தை இறுக்க பொருளாதார நடவடிக்கைகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன. மூடியின் கடன் தரம் நிர்ணயிக்கும் அமைப்பு ரஷ்ய அரசாங்கத்தின் பத்திர மதிப்பீட்டைப் குறைப்பதற்கு வெள்ளியன்று பரிசீலிக்க உள்ளது; இது மற்ற இரு அமெரிக்க தரம் பிரிக்கும் நிறுவனங்கள் ஸ்டாண்டர்ட் & பூர்ஸ், பிளிடச் ரஷ்ய கடன்தரம் பற்றிய அவர்கள் பார்வையை எதிர்மறை எனக் குறைத்துள்ளதை அடுத்து வந்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே இன்னும் பொருளாதாரத் தடைகள் குறித்து கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன. ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் புதன் அன்று தான் பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ஜேர்மனிய ரஷ்ய வணிகம் 2013ல் 76 பில்லியன் யூரோக்கள் என மொத்தமாக இருந்தன. மேலும் வியாழன் அன்று இத்தாலிய பிரதம மந்திரி மாட்டியோ ரென்சியைச் சந்தித்த பின் ஒபாமா ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களின் குறைவான இராணுவச் செலவுகள் குறித்து பிரஸ்ஸல்ஸ் உரையில் பலமுறை குறைகளைக் கூறினார்.

ஒபாமா நிர்வாகம், பால்டிக் நாடுகள், லித்துவேனியா, எஸ்தோனியா மற்றும் போலந்து போன்ற நம்பக நட்பு நாடுகளைத் திரட்டி ஐரோப்பிய சக்திகள் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறது. நேற்று Washington Post எஸ்தோனிய ஜனாதிபதி டூமாஸ் ஹெண்ட்ரிக் கூறிய ரஷ்யாவை இலக்கு கொண்ட பாரிய இராணுவக் கட்டமைப்பு தேவை என்ற வெளித்தனமான கருத்தை வெளியிட்டது.

கிரிமியா மீதான படையெடுப்பு “ஒரு நிலைப்பாட்டு மாற்றத்தைக் குறிக்கிறது ... சர்வதேச உடன்படிக்கைகள் மதிக்கப்படுவதில்லை, வெறும் வலிமை மட்டும்தான் மீண்டும் நெறி எனப் போய்விட்டது” என்றார். ஐரோப்பிய இராணுவச் செலவுகள் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் 2% ஆக இருக்க வேண்டும் என்று இருக்க வேண்டும் என்றார். “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு சேர்ச்சில் கூறிய கணம் வந்துவிட்டது. நாம் நிலைமைக்கு ஏற்ப வலிமை, தெளிவு, விரைவுடன் எழ வேண்டும்.”

ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரம் பெரிய அளவில் செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நடைமுறையில் இருந்து வந்துள்ள நிலைமையில், அமெரிக்க மக்கள் அமெரிக்க தலையீடு எதற்கும் பரந்த முறையில் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். சமீபத்திய CSB கருத்துக் கணிப்பு மக்களில் 26%தான் உக்ரேனுக்கு இராணுவக் கருவிகள் கொடுப்பதற்கு ஆதரவு காட்டுகின்றனர். 61%த்தினர் தலையீடு செய்யும் பொறுப்பைக் கொண்டிருக்கவில்லை எனத் தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஒபாமா நிர்வாகமும் அமெரிக்கா ஆளும் வர்க்கமும் இது ஒரு புதிய உலகப் போரைத் தூண்டும் திறன் கொண்ட கொள்கை என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ரஷ்யாவை வலுவிழக்கச் செய்து அதைச் சிதைக்கும் ஆக்கிரோஷ மூலோபாயத்தில் இருந்து மக்கள் எதிர்ப்பு உணர்வால் பின்வாங்க மாட்டார்கள், ரஷ்யாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களுக்கு ஒரு தடையாக மத்திய கிழக்கு, மத்திய கிழக்கு ஆசியா, ஆசியா மற்றும் சர்வதேச அளவில் அகற்றப்பட வேண்டிய தடையாக நினைக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com