Monday, April 28, 2014

கூட்டமைப்பின் பெட்டிப் பாம்புகள்... கழுகுகண்ணில் இருந்து சிந்தியவை

மாங்குளம் நகரிலிருந்து மல்லாவி நகரை ஊடறுத்து வெள்ளாங்குளம் நோக்கி பயணிக்கும் B32 வீதி, மல்லாவி நகரப்பகுதியில் வீதியின் இருமருங்கும் அமைந்துள்ள கடைத்தொகுதிகளுக்கு முன்னால் சமதரை வடிவமைப்பு வீதியாக அமைக்கப்படாமல், சுமார் நான்கடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேடாக இருந்த 400 மீற்றர்கள் நீளமுடைய குறித்த நிலப்பகுதியை ஆழப்படுத்தி சமதரை வீதியாக அமைக்காமல் மேலும் நான்கடி உயரத்தில் வீதியை அமைத்திருப்பதால் நகரப்பகுதி வர்த்தகர்களின் பொருள்கள் கொள்வனவு-விற்பனை தொடர்பான வியாபார நடவடிக்கைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இலகுவான பொதுப்போக்குவரத்துக்கும் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளது.

வீதி நிர்மாணிப்பில் இடம்பெற்றுள்ள தவறை சுட்டிக்காட்டி துணுக்காய் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் கடந்த 07.03.2014 அன்று மல்லாவி நகரப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர். வீதி நிர்மாணிப்பில் இடம்பெற்றுள்ள தவறை நிவர்த்தி செய்து தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு கோரியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய இரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் வர்த்தக சங்கம், கால்நடை வளர்ப்போர் சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கங்கள், கமக்கார ஒன்றியங்கள் என்று பல்வேறு சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி 'மல்லாவி நகர அபிவிருத்திக்குழு'வை கடந்த 09.03.2014 அன்று இந்த விவகாரத்தை கையாள்வதற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியுமிருந்தனர்.

இந்தக்குழு, வீதி நிர்மாணிப்பில் ஏற்பட்டுள்ள குறைகள், குற்றங்களையும் அதனால் வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சுட்டிக்காட்டி, ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு எழுத்து மூலம் விளக்கி மகஜர்கள் கையளித்திருந்தும், நேரில் சந்தித்து விரிவாக பேசியிருந்தும், குறித்த வீதி அபிவிருத்தி பணிகளுடன் தொடர்புடைய அதிகாரிகளினால் வர்த்தகர்களினதும், பொதுமக்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.


ஒரு திட்டம் தமக்கு பாதகமாக அமைகிறது என்பதை அதன் சிறு அசைவை வைத்து தம் அறிவுக்கு ஏற்றவாறு ஊகித்து கொள்ளும் மக்கள் அதற்கு எதிராக ஏதோ ஒருவகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவது வழமையானதே. (ஆனால் திட்டத்தின் அதிர்வை உணரக்கூடியவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்)

முதலில் மக்கள் போராட்டத்தை கையிலெடுத்ததும் அவ்விடத்துக்கு ஓடிச்செல்லும் கூட்டமைப்பினர், 'தாம் மக்களை விட்டு விலகி தூர நிற்கவில்லை என்றும் சதா மக்கள் பற்றியே சிந்திப்பதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாளும் முனைவதாகவும் காட்டிக்கொள்வதற்காக மக்களுடன் சேர்ந்து நின்று கொண்டு ஊடகங்கள் படம் எடுக்கும் வரை காத்திருந்து விட்டு' பின்னர் ஆற அமர இருந்து 'இந்த திட்டம் யாரால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதன் நோக்கம் என்ன' என்றெல்லாம் கேட்டறிந்து கொண்டு 'அது பெரிய இடத்து சமாச்சாரம்' என்றதும் பின் வாங்கி விடுகின்றனர். அசைவை மக்களாலும், அதிர்வை அரசியல்வாதிகளாலும் உணர முடிகிறது என்று இதைத்தான் சொல்லுகின்றோம்.

ஏற்கனவே வவுனியாவில் தனியார் பேரூந்து நிலையத்தை நகர்ப்பகுதியை விட்டு விலக்கி ஒதுக்குப்புறமாக அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து போக்குவரத்து சங்கத்தினர் போராட்டத்தை நடத்தியதும் உடனே அவ்விடத்துக்கு ஓடோடிச்சென்று மக்களுடன் நின்று ஊடகங்களுக்கு படம் காட்டிக்கொண்ட கூட்டமைப்பினர், அதிலிருந்து பின்வாங்கி மூச்சு விடும் சத்தம் கூட கேட்டு விடாமல் கிடப்பது தெரிந்ததே.

நடந்ததும் நடப்பதும் என்ன?

இதேபோலத் தான் மல்லாவி நகர வீதி பிரச்சினையையும் மக்கள் கையில் எடுத்ததும் ஓடோடிச்சென்ற கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுகாதாரதுறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர்கள் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் மற்றும் து.ரவிகரன், மாந்தை கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தனிநாயகம், உபதவிசாளர் செந்தூரன், கூட்டமைப்பின் பிரமுகர் கமலேஸ்வரன் ஆகியோர்

ஊடகங்களுக்கு 09.03.2014 அன்று படம் காட்டி விட்டு, அன்றிலிருந்து இன்றுவரை 'மக்களுக்கு அப்படியொரு வீதி பிரச்சினை இருப்பதாக நினைப்பே இல்லாமல், மல்லாவியில் அப்படி ஒரு சம்பவமே நடந்ததா?' என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அவர்கள் தாம் உண்டு தம் பணி உண்டு என்று இருக்கிறார்கள். அந்த மக்களின் வீதி பிரச்சினை பற்றியோ நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீதி நிர்மாணிப்பு பணிகள் பற்றியோ அவர்கள் அசை போட்டதாகவோ, அலட்டிக்கொண்டதாகவோ தெரியவில்லை.

மக்களுக்காக நீதிமன்றத்தை நாட தயாரில்லாத கூட்டமைப்பு!

கொக்குளாய் கருநாட்டுக்கேணி பகுதிகளில் நடைபெற்ற சட்ட விரோதமான காடழிப்பும் அதனைத்தொடர்ந்த முரண்பாடான குடியேற்றங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சாதாரண ஒரு பொதுமகனால் முல்லை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு குறித்த காடழிப்பும் குடியேற்றமும் நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பொதுமகனுடன் ஒப்பிடும் போது கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் செயல், துணிவு, உளத்தூய்மை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாததே.

தமக்கு வாக்களித்த மக்களுக்காக, அந்த மக்களின் நலனுக்காக, பாதுகாப்புக்காக, அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவாவது பொதுமக்களுக்காக ஒரு பொது நலன் வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைக்கும், இருப்பை சிதைக்கும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு கூட நீதிமன்றத்தை நாட தயாரில்லாத கூட்டமைப்பினரை இன்னும் எத்தினை காலத்துக்கு மக்கள் நம்பப்போகிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com