Monday, April 28, 2014

BBS இன் அருமந்த காணொளி என்னிடமுள்ளது! என்றாலும் வெளியிட மாட்டேன்! - வட்டரெக்க விஜித்த தேரர்!

ஜாதிக்க பல சேனாவின் பொதுச் செயலாளர் மகியங்கன பிரதேச சபை (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்) உறுப்பினர் வட்டரெக்க விஜித்த தேர்ர் இந்நாட்களில் ஊடகங்களுக்கு நல்ல செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பவர்.

வட்டரெக்க விஜித்த தேரர் சென்ற வாரம் சிறந்த்தொரு நாடகத்தில் நடிப்பது போன்றதொரு காட்சியை நாங்கள் காணொளிகளில் கண்டோம். பொலிஸாரின் உதவியுடன் அவர் ஓடிச் சென்ற காட்சி தொலைக்காட்சி நாடகத்தில் ஓர் அங்கம் போன்றிருந்தது.

அன்று பொலிஸார் அவ்விடத்தில் இல்லாதிருந்தால் நாங்கள் அவர் பற்றிய வேறொரு கதையே கேட்டிருப்போம்…

வட்டரெக்க விஜித்த தேரரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கு நான் பலமுறை முயன்றேன்.. என்னைப் போலவே இன்னும் பல ஊடகவியலாளர்களும் அவரைத் தொடர்புகொள்ள முயன்றிருப்பர்…

ஒருவாறு வட்டரெக்க விஜித்த தேரருக்கு நான் அழைப்பை ஏற்படுத்தினேன்.

கேள்வி - இப்போது உங்கள் உடல் நலம் எப்படி? இப்போது தாங்கள் என்ன செய்கிறீர்கள்?

பதில் - நான் அங்கும் இங்குமாக இருக்கிறேன். எனக்கென்று ஓர் இடமில்லை. என்னைக் கொலை செய்ய இருக்கிறார்கள்.

கேள்வி - அன்றும் உங்களைக் கொலை செய்யப் பார்த்தார்களா?

பதில் - உண்மையிலேயே அப்படியும் இருக்கலாம். பொலிஸார் இல்லாதிருந்தால் என்நிலை அவ்வளவுதான்!

கேள்வி - ஏன் அவர்கள் உங்களுடன் அவ்வளவு கடுங்கோபமாக - குரோதமாக இருக்கிறார்கள்?

பதில் - அவர்களுடைய முக்கிய காணொளி ஒன்று என்வசம் உள்ளது. வில்பத்து சரணாலயத்தில் செய்த முக்கியதொரு விடயம். ஒன்று… என்னை வெட்டி கடலில் போட்டாலும் சரி ஒருபோதும் நான் அதனை வெளியிட மாட்டேன்.

கேள்வி - அவ்வாறானதொரு காணொளி உங்களிடம் இருக்குமானால், அதனை பொலிஸிடம் அல்லது அரசாங்கத்திலுள்ள முக்கிய ஒருவரிடம் கொடுத்தால் அது, நல்லதொரு சாட்சியமாக இருக்குமே?

பதில் - ஐயையோ.. ஒருபோதும் யாரிடமும் அதனை நான் கொடுக்க மாட்டேன்.

கேள்வி - அன்று மகியங்கனை பிரதேச சபைக்குச் செல்லும்போது, ஏற்பட்ட நிகழ்வில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் - என்னவென்று சொல்ல. அந்நேரம் எனக்கு மரண பயம் என்னை ஆட்கொண்டது. இன்னும் சில நிமிடங்களில் நான் மரணிப்பேன் என நினைத்தேன். எனது நல்ல நேரம் பொலிஸார் எனக்குப் பாதுகாப்பளித்தார்கள். எனக்குள்ள மரண அச்சுறுத்தல் பற்றி நான் ஜனாதிபதியிடமும் சொன்னேன். அவர் அதற்குப் பொருத்தமானதொரு வழிவகை செய்வார்…

பொதுபல சேனா தொடர்ந்து எனக்கு பல்வேறு இன்னல்களை இழைத்து வருகின்றது. என்னைப் பற்றித் தெரிந்துகொண்ட இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் அங்கு வருமாறு அழைக்கின்றது. அதேபோல, வெளிநாட்டு ஊடகங்கள் என்னைத் தொடர்பு கொள்கின்றன. நான் ஒருபோதும் தாய்நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். அது நிச்சயம்.

கேள்வி - பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணப்பாடு உங்களுக்கு உண்டா?

பதில் - ஐயோ இல்லை. இப்போது செய்கின்ற உபத்திரவங்களே போதும். எனது அமைப்புப் பற்றித் தெரிந்துகொண்ட பெரும்பான்மை மக்கள் எனக்கு இருக்கின்றார்கள். பொதுபல சேனா இப்போது பீதியுடன்தான் இருக்கின்றது. அவர்களுக்கு எங்களுக்குச் சேர்ந்திருக்கும் சனத்திரள் சேர மாட்டாது. எல்லா இனங்களும், எல்லா மதத் தலைவர்களும் எங்கள் அமைப்பில் சேர விருப்புத் தெரிவித்திருக்கிறார்கள்…. நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

பொதுபல சேனாவைப் போல நாங்கள் மத விரோத, இன விரோத செயல்களில் ஈடுபட மாட்டோம். எனக்கு மரண அச்சுறுத்தல் உள்ளது. நான் பொலிஸில் முறைப்பட்டுள்ளேன். இப்போது பொலிஸ் பாரிய அளவில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

நான் மொஹமட் விஜித்த என்று இங்கு சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்கள். பொதுவேலைகளில் ஈடுபடும்போது, முகத்தில் சேறு பூசுவார்கள். அதில் பிரச்சினை இல்லை.

பொதுபல சேனாவுக்கு எதிராக 12 முறைப்பாடுகள் செய்துள்ளேன். என்னை வெட்டி போடுவதாக சூளுரைத்துள்ளார்கள். முஸ்லிம் தலைவர்கள் என்னுடன் நெருக்கமாகப் பழகுகின்றார்கள். அலவி மௌலானா, அஸாத் சாலி போன்றோர் என்விடயத்தில் மிகவும் கவலைப்பட்டார்கள். அவர்கள் எந்நேரமும் என்னுடம் இருக்கிறார்கள்.

இந்நாட்களில் எனது இரு காதுகளும் மிகவும் வேதனையாக இருக்கின்றது. காரணம் என்ன தெரியுமா? ஊடகங்கள் என்னிடம் கேட்கின்ற வினாக்களுக்கு விடையளித்து விடையளித்து முடிவில்லை.

நாங்கள் பௌத்த மதத்திற்கேற்ப வாழ வேண்டும். குரோதம் இல்லை. அதனால்தான் நான் அந்தக் காணொளியை வெளியிடாமல் இருக்கின்றேன்.

கேள்வி - அந்தக் காணொளியில் அவ்வளவு பெரிதாக என்னதான் இருக்கின்றது?

பதில் - வாகனத்தில் மேலே வைத்துக் கொண்டு சாராயம் குடிப்பது, கிரிக்கட் விளையாடுவது, நடனமாடுவது போன்ற விடயங்கள் அதில் உள்ளன.

என்றும் உண்மையே வெல்லும். ஜாத்திக்க பல சேனா மக்கள் மத்தியில் மிகப் பிரபல்யமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அப்போது பொதுபல சேனா நின்ற இடம் காணாமல் போகும். மகியங்கன ரொட்டவெல விகாரைக்குச் சென்று, என்னைத் தேடி மரண அச்சுறுத்தல் விட்டுச் சென்றுள்ளார்கள். நான் அந்த விகாரைக்கும் பொலிஸ் பாதுகாப்புக் கேட்டேன். எனக்கு பொலிஸ் பாதுகாப்புக் கிடைத்துள்ளது.

நான் மீண்டும் சொல்கிறேன்.. நான் நிலையாக ஓர் இடத்தில் இல்லை. அங்கும் இங்குமாக வாழ்கின்றேன். மரண அச்சுறுத்தல்…. என்று கூறிவிட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சிங்களத்தில் - நோமன் பலிவடன
தமிழில் - கலைமகன் பைரூஸ்
நன்றி - திவயின

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com