Sunday, April 13, 2014

இன்று மெல்போர்ணில் இடம்பெற்ற அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி! (படங்கள் இணைப்பு)

இன்று (13) ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட இப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் புகழ்பெற்ற மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.

குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை நல்கி பெருமளவு திரண்டிருந்தன. சரியாக 1.45 மணிக்கு பெருமளவான தேவாலயங்களில் அகதிகளுக்கு ஆதரவாக மணியொலிகள் எழுப்பப்பட்டன.

கிறிஸ்தவ அமைப்புக்கள் அகதிகள் தொடர்பில் தமது கரிசனையையும் அவுஸ்திரேலிய அரசின் அகதிகள் மீதான அணுகுமுறை தொடர்பாக தமது விமர்சனத்தையும் வெளிப்படையாக அறிவித்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டன. வழமைபோல் அகதிகள் விடயத்தில் தீவிரமாகப் போராடிவரும் இடதுசாரி அமைப்புக்கள், பொதுநல அமைப்புக்கள், மனிதவுரிமை அமைப்புக்கள் என்பனவும் இப்பேரணியிற் கலந்துகொண்டன.

அவுஸ்திரேலியாவின் மூன்றாவது பெருங்கட்சியான கிறீன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு தமது உரையை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ண் நகரிலிருந்து முதன்மை வீதி வழியாகச் சென்ற இப்பேரணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதாகைகளை ஏந்திவந்ததோடு அகதிகளுக்கு ஆதரவாகவும் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு வந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com