Sunday, March 9, 2014

உக்ரைன் நெருக்கடியின் மத்தியில், அமெரிக்கா கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ விரிவாக்கத்தை தொடங்குகிறது! By Alex Lantier

பெப்ருவரி 22 உக்ரைன் ஆட்சி கவிழ்ப்பு குறித்த ரஷ்யாவுடனான மோதலுக்கு நடுவே அமெரிக்க அதிகாரிகள் நேற்று கிழக்கு ஐரோப்பாவில் பரந்த இராணுவ நடவடிக்கை விரிவாக்கத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர். இது, அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் பாரிசில் நடத்திய பேச்சுக்கள் தேக்கத்தில் முடிவுற்ற நிலையில், பிராந்தியத்தில் கூடுதல் இராணுவப் படைகள் நிலைகொள்ளப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

உக்ரேனில் ரஷ்ய-எதிர்ப்பு சதி நடந்தபின், கிரிமியாவை பாதுகாக்க ரஷ்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவப் படைகள் நிலை கொள்வது, அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள், அணுசக்தி நாடுகளுக்கு இடையே இராணுவ மோதலைத் தூண்டுவதை முன்கூட்டியே கொண்டுவரும் ஆபத்தை அதிகரிக்கத்தான் செய்யும்.
நேற்று காங்கிரஸ் முன் சாட்சியம் அளித்த பாதுகாப்பு செயலாளர் சக் ஹேகல் பென்டகன் போலந்தில் இருக்கும் நேட்டோ படைகளை கூட்டுப்பயிற்சியை அதிகரிக்கும்; மற்றும் பால்டிக் பகுதிகளில் நேட்டோவின் வான் கண்காணிப்புக்கள் முடுக்கிவிடப்படும் என்றார். தான் உக்ரேனிய பாதுகாப்பு மந்திரியுடன் இன்று பேச இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஆறு, F-15 போர் ஜெட்டுக்கள் மற்றும் KC-135 போக்குவரத்து விமானங்களை நிலைப்படுத்துவதாகவும் கூறினர். “இந்த நடவடிக்கை நம் பால்டிக் நட்பு நாடுகளின் வேண்டுகோள்படியும், நேட்டோ பாதுகாப்பிற்கு நம் கூடுதல் உறுதிப்பாட்டையும் நிரூபிக்கிறது” என்று பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

துருக்கிய அதிகாரிகள் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் கருங்கடல் நீர்ப்பகுதியில் போஸ்போரஸ் (Bosphorus) வழியே செல்ல அனுமதித்துள்ளதாக கூறினர்; இது உக்ரைன் எல்லையில் உள்ளது. வாஷிங்டன் கிரேக்கத்தில் ஒரு துறைமுகத்தில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களையும் கொண்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. கேள்விக்குரிய கப்பலான USS George H.W. Bush என்பது பற்றி துருக்கிய அதிகாரிகள் மறுத்ததோடு; அக்கப்பல் மிகப் பெரியது என்றும் Montreux மாநாட்டு நிபந்தனைகளின் படி போஸ்போரஸ் மூலம் கடக்க முடியாது என்றும் கூறினர்.

சோச்சி ஒலிம்பிக்ஸ் நேரத்தில் இப்பிராந்தியத்தில் ரோந்து வந்த ஒரு ஏவுகணை இயக்கும் போர்க்கப்பல் USS Taylor, இன்னும் துருக்கிய கருங்கடல் துறைமுகத்தில் உள்ளது. இந்த இராணுவ நடவடிக்கை விரிவாக்கம், உக்ரேன் பற்றிய பேச்சுக்கள் பாரிசில் தோற்றுவிட்டன என்பதற்கு நடுவே வந்துள்ளது; அங்கு அமெரிக்க, ஜேர்மனிய, பிரித்தானிய, பிரெஞ்சு வெளியுறவு மந்திரிகள் ரஷ்ய வெளியுறவு மந்திரி லாவ்ரோவைச் சந்தித்தனர். அக்கூட்டத்தில் கெர்ரி, கியேவில் உள்ள புதிய ஆட்சியுடன் உறவுகளை நிறுவுமாறு லாவ்ரோவிற்கு அழுத்தம் கொடுத்தார்; “ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் நேரடிப்பேச்சுக்கள் வேண்டும்” என்றும் கூறினர். லாவ்ரோவ் புதிதாய் இருத்தப்பட்டுள்ள உக்ரேனிய வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி டெஷ்சிட்சியாவைச் சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

வாஷிங்டனுக்கு உக்ரேனிய வலதுசாரி ஆட்சி முழுமையாக அடிபணிந்து நிற்பதை பிரதிபலிக்கும் வகையில், டெஷ்சிட்சியா கெர்ரியின் விமானத்தில் கியேவில் இருந்து பாரிசுக்குப் பறந்தார்.

ஆனால் லாவ்ரோவ் பாரிசில் உள்ள Quai d’Orsay இராஜதந்திர தலைமையகத்தில் டெஷ்சியிட்சியாவுடன் பேசாமல் நீங்கினார்; இது புதிய அரசாங்கத்தை மாஸ்கோ அங்கீரிக்க மறுப்பதுடன் இணைந்துள்ளது.

பெப்ருவரி 21 ல் அப்பொழுது உக்ரேனிய ஜனாதிபதியாக இருந்த விக்டர் யானுகோவிச்சிற்கும் மேற்கத்தைய ஆதரவுடைய எதிர்த்தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டிற்கு திரும்புமாறு லாவ்ரோவ் கூறியாதாகத் தெரிகிறது. இது யானுகோவிச்சை ஜனாதிபதியாகத் தொடர விட்டிருக்கும்; அதே நேரத்தில் அவருடைய அதிகாரங்கள் எதிர்த்தரப்பிற்குச் சென்றிருக்கும். இந்த உடன்பாடு மறுநாள் காலை பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பால் அகற்றப்பட்டுவிட்டது.

கூட்டத்திற்குப்பின், அமெரிக்க அதிகாரிகள், மாஸ்கோவும் மேற்கு சக்திகளும் உக்ரேனில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரும் சமாதான உடன்பாட்டுக்கு ஆதரவு கொடுக்கின்றன என்று லாவ்ரோவ் கூறியதை மறுத்தனர். ஒரு உயர்மட்ட வெளியுறவுத்துறையின் அதிகாரி ராய்ட்டர்ஸிடம், கெர்ரி-லாவ்ரோவ் பேச்சுக்களில் “உடன்பாடுகள் ஏதும் இல்லை” என்றும் “உக்ரேனிய அரசாங்கத்தின் தொடர்பு இல்லாமல் எதுவும் இருக்காது, முற்றிலும் எதுவும் செயல்படுத்தப்பட மாட்டாது” என்றார்.

அமெரிக்கா விரிவாக்கம், சுதந்திர சதுக்கத்தின் (மைதான்) எதிர்ப்புக்களுக்கு மேற்கத்திய அரசியல்வாதிகள் கொடுக்கும் ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; மேலும் இது பெப்ருவரி 22 ஆட்சிமாற்றம் ஜனநாயகத்திற்கான போராட்டம் இல்லை, யூரேசியாவில் அதிகாரம் மற்றும் புவி மூலோபாய செல்வாக்கிற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதையும் காட்டுகிறது. இந்த வாரம் புட்டின், இராணுவப்பயிற்சிகளை நிறுத்தி, ரஷ்யா உக்ரைனைத் தாக்காது என்று அறிவித்தது, பின்வாங்கியது போல் தோன்றினாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பொறுப்பற்ற முறையில் அழுத்தங்களை தூண்டுகிறது.

திங்களன்று ரஷ்ய பங்குச் சந்தையில் 10% சரிந்தபின் மற்றும் லாவ்ரோவ் அதிகாரத்தை தீவிர வலதுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டமும் வந்தபின் புட்டின் கீழிறங்கியது, கிரெம்ளினுடைய அடிப்படை பலவீனமான தன்மையை முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றது. ரஷ்யாவிற்குள்ளேயே வலதுசாரிக் கட்சிகளுடன் பிணைந்துள்ள குறுகிய, ஊழல் உயரடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும், தன் பிற்போக்குத்தன சமூகக் கொள்கைகளுக்கு மக்கள் அதிருப்தியை கண்டு அஞ்சும் நிலையில், கிரெம்ளின் ரஷ்யாவிலோ, உக்ரேனிலோ தொழிலாள வர்க்கத்திற்கு எத்தகைய முற்போக்கான முறையீட்டுக்கும் அழைப்பு விடுக்க இயலாது. அதன் இராணுவ நடவடிக்கைகள் ரஷ்ய தேசியவாதத்தை வளர்ப்பதுடன் பிணைந்துள்ளன; அவை குருதி கொட்டும் குறுங்குழுவாத போர், மோதல் என்னும் அச்சுறுத்தல்களைத்தான் அதிகரிக்கும். மேற்கத்தைய சக்திகள் உக்ரேனில் தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் சமூகத் தாக்குதல்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. முக்கிய வங்கிகள் உக்ரேனுக்கு கடன் கொடுக்க மறுக்கையில், நாடு வரவிருக்கும் ஆண்டுகளில் அதன் கடன்களை புதுப்பிக்கவே $35 பில்லியனுக்கும் மேல் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் 1.6 பில்லியன் யூரோக்கள் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கியேவிற்கு அவசரக்கால கடனாகவும் அடுத்த ஏழு ஆண்டுகளில் 11 பில்லியன் யூரோக்கள் கடன் தருவதாகவும் உறுதியளித்தது. செவ்வாயன்று கெர்ரி கியேவிற்கு பயணித்தபோது 1 பில்லியன் டாலர்கள் கடன் உத்தரவாதங்கள் அளிப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த அளிப்பு வந்துள்ளது.

முன்வைக்கப்படும் நெருக்கடிகால நிதி, உக்ரேன் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒரு கடன் உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே கிடைக்கும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே வறுமையில் உள்ள நாட்டில் ஆழ்ந்த சமூகநலச் வெட்டுக்களை கோருகிறது. இவற்றில் சிக்கன நடவடிக்கைகளான, ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் தொழிலாள வர்க்க குடும்பங்களின் வீட்டை வெப்பமாக்கும் செலவுகளுக்காக இயற்கை எரிவாயுவிற்கு கொடுக்கப்படும் உதவித்தொகைகள் அகற்றப்படல் ஆகியவை அடங்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com