Sunday, March 9, 2014

அமெரிக்காவின் தீர்மானம் குறித்து நாம் கவலையடையவில்லை. ஜனாதிபதி ராஜபக்ச

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்த வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் குறித்த தீர்மானம் பற்றி கவலையில்லை என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் : அந்த தீர்மானம் குறித்து எங்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. என்னையும், எனது அரசையும் குறிவைத்து சில சக்திவாய்ந்த நாடுகள் செயல்படுகின்றன.

இதுபோன்ற பரப்புரைகளை எதிர்க்கட்சியினரும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற் கொண்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் ஆணை யர் நவநீதம் பிள்ளை சமீபத்தில் இலங்கை வந்திருந்தார். 4 நாள்கள் தங்கியிருந்த அவர் தவறான தகவல்களை திரட்டிச் சென்றார். இப்போது அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இதே போன்ற தீர்மானங்கள், இதற்கு முன்பு கியூபா, இஸ்ரேல் மீது கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, நாங்கள் மட்டுமல்ல. பல நாடுகளும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.

பிரிவினையை கோரிய விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்குகொண்டு வந்துள்ளதன் மூலம் இலங்கையில் வசிக்கும் அனைவரும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத் தியுள்ளேன்.

மனித உரிமை தொடர்பான நடவடிக்கை அனைத்தையும் எடுத்து வருகிறோம். காணாமல் போனவர்களை பற்றி விசாரிக்க குழு அமைத்துள்ளோம்” என்றார்.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதேநேரம் குறித்த தீர்மானத்தால் தமிழருக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் அமெரிக்கா தமிழ் மக்களை நம்பவைத்து கழுத்தறுத்து விட்டதாக புலிசார் ஊடகங்கள் கவலை தெரிவிக்கின்றன. அத்தீர்மானத்தில் இலங்கை மீது நடவடிக்கை ஒன்று மேற்கொள்வதற்கான எந்த முன்மொழிவும் இல்லை என்றும் அவை குற்றஞ்சாட்டுகின்றன.

இதேநேரம் அமெரிக்கா இவ்வாறு மென்போக்கினை கடைப்பிடிப்பதற்கு தமிழ் தேசி்யக் கூட்டமைப்பே காரணம் என்றும் அவை தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com