Sunday, March 9, 2014

கடலில் விழுந்தது மலேசிய விமானம்: 239 பேர் பலி?

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் புறப்பட்ட விமானம் தென் சீனக் கடல் பகுதியில் விழுந்து மூழ்கியது. சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மலேசிய அரசுக்குச் சொந்தமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எம்.எச். 370 விமானம் 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் கோலாலம்பூரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 12.41-க்குப் புறப்பட்டது.

இந்த விமானம் அதிகாலை 6.30 மணிக்கு பெய்ஜிங் சென்றடைய வேண்டும். ஆனால் விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைத் தொடர்பை இழந்தது. இதைத் தொடர்ந்து காணாமல்போன அந்த விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

14 நாட்டுக்காரர்கள் பயணம்...

சில மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் வியட்நாம் எல்லையில் தோ சூ கடல் பகுதியில் இருந்து விமானத்தின் சிக்னல் கிடைத்தது. அதனை உறுதி செய்த வியட்நாம் அதிகாரிகள், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

152 சீனர்கள், 38 மலேசியர்கள், 5 இந்தியர்கள், 6 ஆஸ்திரேலியர்கள், ஒரு குழந்தை உள்பட 4 அமெரிக்கர்கள், பிரான்ஸை சேர்ந்த 3 பேர், நியூசிலாந்தை சேர்ந்த 2 பேர், உக்ரைனைச் சேர்ந்த 2 பேர், கனடாவைச் சேர்ந்த 2 பேர், ரஷ்யா, இத்தாலி, தைவான், நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 227 பயணிகள் மற்றும் விமானி, பணிப்பெண்கள் உள்பட 12 சிப்பந்திகளும் விமானத்தில் இருந்தனர்.

14 நாடுகளைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்த 5 இந்தியர்களின் பெயர் விவரங்களை பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. சந்திரிகா சர்மா, சேத்னா கோல்கர், ஸ்வாந்த் கோல்கர், சுரேஷ் கோல்கர், பிரகலாத் ஆகிய அவர்கள் விபத்தில் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதில் சந்திரிகா சர்மா சென்னையில் செயல்படும் மீனவர்களுக்கான தொண்டு அமைப்பில் (ஐ.சி.எஸ்.எப்.) செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர்கள் தவிர கனடாவைச் சேர்ந்த வம்சாவளி இந்தியரான முகேஷ் முகர்ஜியும் விமானத்தில் பயணம் செய்தார்.

அனுபவம் வாய்ந்த விமானி...

மலேசியாவைச் சேர்ந்த கேப்டன் ஜகாரி அகமது ஷா விமானத்தை ஓட்டியுள்ளார். 1981-ல் மலேசியன் ஏர்லைன்ஸில் இணைந்த இவர் இதுவரை 18365 மணி நேரம் பறந்த அனுபவம்மிக்கவர். விமானம் கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்தபோது சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்துள்ளது. அப்போது மோசமான வானிலை குறித்தோ தொழில்நுட்ப கோளாறு குறித்தோ கட்டுப்பாட்டு அறைக்கு விமானி எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

விபத்துக்குள்ளான விமானம் போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானம் 2002 முதல் மலேசியன் ஏர்லைன்ஸ் சேவையில் உள்ளது.

விபத்து நேரிட்டதாகக் கருதப்படும் தென் சீனக் கடல் பகுதிக்கு மலேசிய அரசு சார்பில் ஒரு விமானம், 2 ஹெலிகாப்டர்கள், 4 கப்பல்கள் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளன. வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளின் கடற்படை படகுகள், விமானங்களும் சம்பவ இடத்தில் முகாமிட்டு காணாமல் போன விமானத்தை தேடி வருகின்றன. மீட்புப் பணிக்காக சீனா இரண்டு கப்பல்களை அனுப்பியுள்ளது.

அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெட்ரோல் படலம் மிதப்பதை வியட்நாம் மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில்தான் விமான விபத்து நேரிட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே வியட்நாம் மீட்புப் படையினர் அங்கேயே முகாமிட்டு விமானத்தை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com