Saturday, March 22, 2014

வெள்ளைவான் கலாசாரம் பற்றி என்னை விட நீங்கள்தான் அதிகம் அறிந்தவர்! சந்திரிக்காவுக்கு மகிந்த பதிலடி!

சட்ட விரோதமான முறையில், அரசமைப்புக்கு மாறாக - தமது தனிப்பட்ட சுதந்திரத்தை மோசமாகப் பாதிக்கும் விதத்தில் - இலங்கை அரசு அதன் புலனாய்வுப் பிரிவு மூலம் கடுமையான கண்காணிப்பைத் தம் மீது திணித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடிதம் மூலம் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடியோடு மறுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு எழுதிய மறுப்புக் கடிதம் ஒன்றில், மேற்படிக் குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதியின் சார்பில் மறுத்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் காலம், நேரம், சம்பந்தப்பட்டோர் விவரங்கள் ஏதும் குறிப்பிடாமல் வெறும் மேம்போக்காக - பொதுவாக - அவற்றைச் சுமத்தியிருக்கின்றமையால் அவை அர்த்தமற்றவை என்ற சாரப்பட மறுப்புக் கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.

வெள்ளைவான் கலாசாரம் பற்றி உங்கள் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தக் கலாசாரம் குறித்து தன்னிலும் பார்க்க நீங்கள்தான் அதிகம் அறிந்திருப்பீர்கள் என்று ஜனாதிபதி கருதுகின்றார். நீங்கள் ஜனாதிபதியாக முன்னரே இங்கு வந்துவிட்ட அந்தக் கலாசாரம் உங்களின் ஜனாதிபதி பதவிக் காலம் முழுவதும் தொடர்ந்தது.

இப்போது, வன்முறைகளுக்கும், இரத்தக் களரிக்கும் காரணமான பயங்கரவாதத்தை இந்த அரசு வெற்றி கொண்டிருக்கின்ற காரணத்தினால், இந்த நாட்டிற்கு எதிராக வெளிநாடுகள் விதித்திருக்கும் நிகழ்ச்சி நிரல் என்ற வலையில் சிக்கி எமது நாட்டின் பெயரைச் சீர்கெடுப்போரின் மனதைத் தவிர, எங்கள் அரசியல் கலாசாரத்தில் வெள்ளை வானும் வேறு எங்கும் பகுதியாகக் கூட இல்லாமல் போய்விட்டது என்று ஜனாதிபதி ராஜபக்ஷவின் சார்பில் அவரது செயலாளர் இக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜெனீவாவிலும் மேற்குலகின் பிற இடங்களிலும் சர்வதேசத் தரப்புகளினால் இலங்கைக்கு எதிராக நியாயமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சமயம் பார்த்து, வெறும் பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தங்களின் கடிதம் எழுதப்பட்டிருக்கின்றமையையும் ஜனாதிபதி கவனத்தில் கொள்கிறார் என்றும் லலித் வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு எழுதிய மறுப்புக் கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com