Monday, March 24, 2014

மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில்... ஒருவர்கூட உயிர்பிழைக்கவில்லை! -மலேசியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

லண்டனின் இன்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு மேற்கே இருக்கின்ற கடற்பரப்பில் தான் என்றும், அது அங்கு தான் காணாமல் போய் விட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அதன் அருகாமையில் இறங்குவதற்கான இடங்கள் எதுவும் இல்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அத்தோடு விமானத்தில் இருந்த 239 பேரில் ஒருவரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், விமானத்தில் இருந்தவர்களின் உறவினர்களிடம் இந்த தகவல்கள் கூறப்பட்டுவிட்டதாகவும், விமானத்தில் பயணித்த குடும்பத்தாரின் தனிமையை விரும்பும் எண்ணத்தினை இந்த நேரத்தில் மதிக்குமாறும் ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அவர்கள் தகவலுக்காக இரண்டு வாரங்களாக மனம் நோக காத்திருந்தார்கள் என்றும், இப்போது சொல்லப்பட்டிருக்கும் தகவல் அவர்களுக்கு மேலும் மன வருத்தத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் என்று கருதப்படும் பாகங்களை தேடு எடுக்கும் பணியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் ஈடுப்பட்டு வருகின்றன.

சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்த விமானம் தென் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்தது என்பது உறுதியாகிவிட்டது. இதில் யாருமே உயிர் தப்பவில்லை என மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாங்கள் எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம் என மலேசியன் எயர்லைன்ஸ் இன்று திங்கட்கிழமை இரவு மலேசிய நேரப்படி 9.45 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

விமானத்துடன் தொடர்பை மேற்கொண்டு வந்த இங்கிலாந்து இம்மாசெற் செய்மதி நிறுவனத்தின் ஆய்வின் படி இந்த விமானம் கடைசியாக தொடர்பை பேணிய இடத்திற்கு அண்மையிலேயே கடலில் மறைந்துள்ளது. இவ்வாறான துல்லிய செய்மதித் தரவுகள் விசாரணைகளின் போது பயன்படுத்தப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

இறந்தவர்களின் உறவினர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கான ஏற்பாடுகளை மலேசியா செய்துள்ளதாக ஸ்கை நியூஸ் அறிவித்துள்ளது.

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானங்களும் கப்பல்களும் தேடிவரும் நிலையில், இந்த விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கக்கூடிய சில புதிய பொருட்கள் பார்வையில் தென்பட்டுள்ளதாக இன்று காலையில் மலேசியா கூறியுள்ளது.

ஒரு வட்டமான பொருளையும் ஒரு செவ்வகமான பொருளையும் அவுஸ்திரேலிய விமானம் ஒன்று கண்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருட்களை ஆஸ்திரேலியாவின் கடற்படைக் கப்பல் அடுத்த சில மணி நேரங்களில் ஒன்று தண்ணீரில் இருந்து எடுத்து பார்க்க முடியும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறினார்.

மலேசிய விமானத்தின் சேதமா இந்தப் பொருட்கள் என்று இன்னும் தெரியவில்லை என கென்பெர்ராவில் உள்ள நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

இந்த காலத்தின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்று குறிப்பிட்டு, அந்த மர்மத்துக்கு விடைகாணும் நெருக்கத்தில் விசாரணையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com