Saturday, March 22, 2014

எங்கள் பிரதேச சபையில் எதிர்க்கட்சி இல்லை.. ஆனால் ஐதேக இருக்கிறது…! - புஷ்பகுமார பெட்டகே (படங்கள் இணைப்பு)

“வெலிகம பிரதேச சபையில் நாங்கள் கட்சி பேதமின்றி அடுத்த பிரதேச சபைகளுக்க முன்மாதிரியாகத் திகழ்கின்றோம். எம்மில் பேதமில்லை. நாங்கள் ஒரு கட்சி போலுமே இருக்கின்றோம். எங்கள் பிரதேச சபையில் எதிர்க்கட்சி இல்லை. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி இருக்கிறது”

என மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுகின்ற வெலிகமை பிரதேச சபைத் தலைராகவிருந்த புஷ்பகுமார பெட்டகே தெரிவித்தார்.

இன்று இரவு வெலிகம - மதுராப்புரவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -

நான் தலைமைத்துவம் ஏற்ற வெலிகம பிரதேச சபையில் முஸ்லிம், சிங்களவர்கள் என்ற பாகுபாடு காட்டாமல் எல்லோருக்கும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளேன். நேரம் காலம் பாராமல் சனிக்கிழமை நாட்களிலும் கூட பகல் உணவைக் கூட கருத்திற் கொள்ளாமல் வெலிகம மக்களுக்காக என்னாலான அனைத்துப் பங்களிப்புக்களையும் நல்கியுள்ளேன்.

பள்ளிவாசல், பன்சாலை என்று பார்க்கவில்லை. எங்கள் பிரதேச சபையின் மூலமாக நாங்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்பினோம். பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்காதிருந்தோம். வெலிகம பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசங்களில் மட்டுமன்றி எனது சேவை வெலிகம தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கும் வியாபித்தது.

பாதைகளைப் புனர்நிர்மாணம் செய்தேன்.. தண்ணீர்ப் பிரச்சினையை இல்லாமற் செய்தேன்.. வீடற்றோருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுத்தோம்.

வெலிகம பிரதேச சபை களங்கமற்றது என்பதை நாம் வெளியுலகிற்கு எடுத்துக் காட்டினோம். அன்று என்னை ஆதரித்தவர்கள் இன்றும் எனக்கு ஆதரவு தருவார்கள் என்ற தளராத நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வெலிகமைக்கு ஒருவர் இல்லை என்றதனால் ஹேமால் குணசேக்கர எனக்கு தேர்தலில் ஈடுபடுமாறு குறிப்பிட்டார். அவர் எனக்கு முழுமையாக உதவி வருகின்றார். நான் மட்டுந்தான் வெலிகமையில் வாழ்கின்ற ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் தென் மாகாண சபைக்குப் போட்டியிடுகின்ற ஒரே அபேட்சகர் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்… எனக்கு உங்களது பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கை இருக்கின்றது என்பதை மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்… முழு மாத்தறை மாவட்ட மக்கள் மத்தியிலும் நான் ஒற்றுமையை வலுப்படுத்துவேன்…

இன்று தேசிய அரசியலில் களம் குதிக்க வேண்டி வந்தமையும் சந்தோஷத்தைத் தருகின்றது. நீங்கள் அனைவரும் எனக்கு மட்டுமே வாக்களிப்பதன் மூலம் என்னை மாகாண சபைக்கு அனுப்புவதை உறுதிப்படுத்தலாம்.. அடுத்த இருவருக்கு விருப்பு வாக்குகள் கொடுப்பது பற்றி எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை.” எனக் குறிப்பிட்டார்.என்றாலும் எனக்கு மட்டுமே வாக்களிப்பதன் மூலம் எனது வெற்றி நிச்சயப்படுத்தப்படும்.

மாத்தறை மாவட்ட அமைப்பாளர் டளஸ் அழகப்பெரும, ஜயந்த கொடித்துவக்கு ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

(கலைமகன் பைரூஸ்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com