Friday, March 7, 2014

நவிபிள்ளைக்கும் பீரிஸ்சிற்கும் இடையிலான சந்திப்பு! பல முக்கியவிடயங்களை தெளிவுபடுத்தினார் பீரிஸ்!

சில நாடுகளினாலும் மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் காரியாலயத்தினாலும் இலங்கையைப்பற்றி தவறான அபிப்பிராயத்தை மேற்கொள்ளும் விதத்தில் ஒரு தலைப்பட்சமான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் பாரதூரமான நடவடிக்கையினால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் பிரிவினைவாதிகளை மேலும் பிடிவாதப் போக்கினை கடைப்பிடிக்கச் செய்துள்ளதுடன் இது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாட்டை மேலும் சிக்கலாக்கியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெறும் 25வது மனித உரிமை சபையின் அமர்வில் கலந்துகொள்ள ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்- மனித உரிமைக்கான ஐ.நா பிரதிநிதி நவநீதம்பிள்ளையை நேற்று (06) சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் பற்றி விளக்கமளித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சில நாடுகள் தமது தேர்தல் களத்தில் இலங்;கையை ஒரு 'அரசியல் கால்பந்தாக' கொண்டு செயற்படுவது துரதிர்ஷ்டமானது. இலங்கை அரசாங்கம் யுத்தத்தினால் பாதிப்படைந்திருந்த பிரதேசங்களை மிகவும் குறுகிய காலத்துக்குள் சகல வளங்களையும் அதற்காக பயன்படுத்தி அபிவிருத்தி செய்துள்ளது. 2013 செப்டம்பரில் வட மாகாண சபை தேர்தலையும் நடாத்தி 26 வருடங்களாக முன்பிருந்த நான்கு ஜனாதிபதிகளும் மேற்கொள்ள துணியாத செயலை செய்து முடித்துள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் ஐநா பிரதிநிதி தற்போதைய மனித உரிமை சபைக்கு இலங்கை பற்றி சமர்ப்பித்த அறிக்கை சம்பந்தமாக தான் மறுதலித்ததைப் பற்றி அவருடைய கவனத்திற்கு கொண்டுவந்த வெளிவிவகார அமைச்சர் இலங்கை பற்றிய அவரது வெறுப்பு மனப்பாண்மையும் ஒருதலைப்பட்சமான முடிவும் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்தவேண்டுமென அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதையும் விமர்சித்தார்.

அந்த அறிக்கை ஒருதலைப்பட்சமானதுடன் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐநா பிரதிநிதி இலங்கைக்கு வருகை தந்தபோது சகல இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பை அவருக்கு வழங்கியதுடன் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தோம் இருந்தும் அவர் இலங்கைக்கு எதிரான அறிக்கையை சமர்ப்பித்தது ஒரு துர்அதிஷ்ட வசமானதாகுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்- ஏற்கனவே இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு இரண்டரை வருடங்களுக்குப் பின்னரே ஐநா பிரதிநிதி வருகை தந்தார். என்றாலும் அவர் இலங்கையில் இருக்கும் போது வழங்கிய பாராட்டுக்களுக்கும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதற்கும் பாரிய முரண்பாடு காணப்படுகிறது. இது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஐ.நா பிரதிநிதி இலங்கை சம்பந்தமாக விடுத்த அறிக்கைக்கு பதிலளித்ததை மனித உரிமை உயர் ஸ்தானிகர் காரியாலயம் உள்ளடக்க மறுத்தது இலங்கை சம்பந்தமாக அண்மைக்காலமாக கடைப்பிடிக்கப்படும் வெறுப்பு மனப்பாண்மையையும் அநீதியான செயற்பாட்டையும் எடுத்துக்காட்டுவதுடன் இலங்கைக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதையும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

ஐநா பிரதிநிதி தனது அறிக்கையில் விட்ட வெளிப்படையான பிழைகளை இலங்கையின் பிரஸ்தாபித்தலுக்கு பின்பு அதில் உள்ளடக்கியதற்கு நன்றி தெரிவித்ததுடன் ஐ நா பொறிமுறை- மனித உரிமை சபை மற்றும் மனித உரிமை உயர் ஸ்தானிகர் காரியாலயத்திலுள்ள நம்பிக்கை குறைவடைந்து வருவதாகவும் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com