Sunday, March 30, 2014

அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டபிரேரணை இலங்கைக்கு எவ்வகையிலும் தோல்வியே அல்ல!

ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை இலங்கைக்கு எவ்வகையிலும் தோல்வியே அல்ல, அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நாட்டில் துணிச்சலுடன் ஏற்படுத் தப்பட்ட சமாதானத்துக்கும், நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் சர்வதேச நாடுகளின் ஆதரவு பெருகி வருகின்றது என்பதனையே ஜெனீவா வாக்கெடுப்பு முடிவானது வெளிக்காட்டுகின்றது என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மா தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு 24 நாடுகள் எதிராக வாக்களித்தன. 2013 ஆம் ஆண்டு 25 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தன. 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 23 நாடுகளே வாக்களித்தன. இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்த நாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதேவேளை நடுநிலை வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 2012, 2013 ஆகிய வருடங்களில் 8 ஆனால் 2014 இல் 12 இந்த வகையில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வகையில் படிப்படியாக சர்வதேச நாடுகள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துக்கும், இலங்கையில் அபிவிருத்திக்கும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் தமது ஆதரவினை வழங்க முன்வந்துள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இந்தியாவும் இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதானது இலங்கை அரசுக்கு மேலும் பலம் சேர்க்கும் விடயமாகும். எதிர்வரும் காலத்தில் உலக நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் நிச்சயம் அமையும். மேலும், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு என்றுமே பலம் சேர்க்கும் நாடுகளாக உள்ளன எனவும் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com