Tuesday, March 18, 2014

காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உதவுமாறு இலங்கையிடம் மலேசியா வேண்டுகோள்!

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மலேசிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்விமானத்தின் தலைமை விமானி இலங்கை ஓடுபாதை தொடர்பாகவும் நன்கு அறிந்து வைத்துள்ளதாக, தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 8 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் பெய்ஜிங் நோக்கி பயணமான போயிங் 777 ரக விமானம், தென்சீனக்கடல் பிராந்தியத்தில் வைத்து காணாமல் போய்விட்டது.

விமானத்தை தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பணிக்கு ஒத்துழைக்குமாறு மலேசிய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தேடுதல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை தயாராகவிருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விமானத்தின் தலைமை விமானியின் வீட்டில் சோதனை நடத்திய போது விமானத்தின் மாதிரி வரைபடங்களும் கணினி மென்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன. இம் மென்பொருள்களிலிருந்து இலங்கை இந்திய மற்றும் மாலைத்தீவு விமான நிலையங்களின் விமான ஓடுபாதைகளை குறிக்கும் சில தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. விமானத்தின் தலைமை விமானியான கெப்டன் சஹாரி அஹமட் சா இலங்கை உட்பட சில நாடுகளின் விமான ஓடுபாதைகள் தொடர்பாக, ஆராய்ந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அவர் விமானத்தின் தொலைத் தொடர்பு கட்டமைப்பை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டாரா? என்ற கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. மலேசிய அதிகாரிகள் மத்தியில் ரேடார் கட்டமைப்பிலிருந்து குறித்த விமானம் மறைந்ததன் பின்னர் ஏறக்குறைய 7 மணித்தியாலங்கள் வானில் பறந்துள்ளதாக தெரிவித்துள்ளமை இவ்வாறு விசாரணைகள் முன்னெடுப்பதற்கு காரணமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com