Tuesday, February 11, 2014

சம்பந்தனின் தீர்வு தமிழ் மக்களுக்கு சாவு மணி அடிப்பதாக அமையுமாம். கஜேந்திரன் பொன்னப்பலம்.

அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தமிழ் மக்கள் தனி நாட்டினை கோரவில்லை என்றும் இந்திய முறையிலான அதிகாரப் பரவலாக்கல் ஒன்றையே விரும்புகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் கருத்து வழமைபோல் அவரது சொந்தக்கருக்கு என சகபாடிகளால் கூறப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் புலிப்பினாமி அமைப்புக்கள் பலவும் சம்பந்தனின் இக்கருத்து தொடர்பாக கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று யாழ் ஊடக மையத்தில் கருத்துரைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பொ.கஜேந்திரகுமார், சம்பந்தனின் கருத்து தமிழ் மக்களுக்கு சாவு மணி அப்பதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கூட்டமைப்புத் தலைவரின் இந்தக் கோரிக்கையையும் அவரது இந்தக் கருத்தையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிக்கிறது. இந்தத் தீர்வை கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முயலுமாயின், எமது மக்களுக்கு அடிக்கின்ற சாவுமணியாக இந்தத் தீர்வு இருக்கும்.

இந்தியாவின் அரசியலமைப்புக்கும் இலங்கையின் அரசியலமைப்புக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. அத்தோடு, இந்தியாவிலுள்ள நிலைமைகளுக்கும் இங்குள்ள நிலைமைகளுக்கும் எந்த வகையிலும் ஒத்துப்போகாது. இதனைத் தெரிந்துகொண்டும் கூட்டமைப்பு எதற்காக இவ்வாறு செயற்படுகின்றதென்று தெரியவில்லை.

குறிப்பாக தேர்தல் காலத்தில் தனிநாடு கேட்டுப் போராடியதாகவும் சமஷ்டி முறையான தீர்வு வேண்டுமென்றும் மேடைகளில் வாய் கிழிய கத்தும் கூட்டமைப்பினர், தற்போது மட்டும் எதற்காக இந்தியா போன்று தீர்வு வேண்டுமெனக் கேட்கின்றனர். அதாவது தேர்தல் காலத்தில் கூறுவது ஒன்று. தேர்தல் முடிந்த பின்னர் கூறுவதும் செயற்படுவதும் வேறொன்றாக இருக்கிறது.

தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக கூட்டமைப்பினர் செயற்படுவதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம். இதனையே நாம் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தபோதும் இப்பவும் தெரிவிக்கின்றோம்' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com