Thursday, February 20, 2014

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க இடைக்கால தடை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரன்க்பர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார்.

மேலும் மத்திய அரசு 3 நாட்களுக்குள் தமது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் இந்திய அரசமைப்புச் சட்டம் 432இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமா அதிபர் உள்ளிட்டோருடன் தமிழக அரசின் முடிவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசாரன் ஆஜராகி, தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோர் மீது ஆயுதச் சட்டம், தடா சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை சட்டப்படி மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுதான் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். ஆனால் அப்படி அனுமதி பெறவில்லை என்று கூறினார்.

ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றிதான் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் விடுவிக்க தமிழகத்துக்கு சட்டப்படி அதிகாரம் இருக்கிறது. ஆனால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும் தமிழக அரசு எந்த அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது என்பதை 2 வாரத்துக்குள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com