Monday, February 17, 2014

ஜெனீவா மாநாட்டுக்கு முன்னர் இராணுவத்தை அப்புறப்படுத்துக! இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறார் நவபிள்ளை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்தல், வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், போரின் போது இறந்த புலி உறுப்பினர்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை நடாத்துதல் உள்ளிட்ட 74 விடயங்களை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

20 பக்கங்களுடன் கூடிய அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள அவர், எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் அவற்றைச் செயற்படுத்துமாறும் கேட்டுள்ளார்.

நவநீதம் பிள்ளையின் அவ்வறிக்கையை ஜெனீவாவின் உத்தியோகபூர்வ அலுவலர் ரவிநாத் ஆரியசிங்க மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை,

யுத்தத்தில் இறந்த அனைவரையும் சகல மக்களும் நினைவுகூரும், தினமொன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் தாம் சார்ந்தவர்களை நினைவுகூரவும், அவர்களைக் கொண்டாடவும் இடமளிக்க வேண்டும். அத்துடன், கோபதாபங்கள், குரோதங்களை ஏற்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் பதிலளிக்கும் வகையிலான அறிக்கையொன்று தற்போது அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு வருவதாக உயர்மட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இருந்தபோதும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான எந்தவொரு விடயத்திற்கும் அரசாங்கம் ஒத்துப்போகமாட்டாது எனவும் அத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதுஇவ்வாறிருக்க, வட மாகாண சபையின் உறுப்பினர் ஆனந்தி சசிதரன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புல்லுருவிகள் சிலர் நேற்று முன் தினம் (15) ஜெனீவா மாநாட்டின் அதிகாரிகளைச் சந்தித்து, இரகசிய பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனர்.

அங்கு ஆனந்தி, மனித உரிமைகள் அதிகாரிகளிடம் தான் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது ஜெனீவா பயணத்திற்கு அரசாங்கம் வட மாகாண சபைக்கு வழங்கியுள்ள பணஒதுக்கீடே பயன்படுத்தப்படுகின்றது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com