Wednesday, February 12, 2014

இலங்கைக்கு அநீதி இழைக்க ஈரான் ஒருபோதும் ஒத்துழைக்காது!

அமெரிக்காவின் ஆதரவில் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அடுத்த மாதம் கொண்டு வரப்படவுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தின் போது ஈரான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை வந்துள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஹஜ் விவகாரங்களுக்கான ஆன்மீகத் தலைவரின் பிரதிநிதி ஆயத்துல்லாஹ் காஸி அஸ்கர் தெரிவித்தார்.


மேலும் இவ்வாறு வாக்களிப்பதன் மூலம் இலங்கை- ஈரானுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளையும், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் உலகிற்கு காண்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைவிட உலகில் மனித உரிமைகளை மீறக்கூடிய முதன்மை நாடாக அமெரிக்கா விளங்குவதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் எந்த நாடும் தைரியத்துடன் குரல் கொடுப்பதில்லை என்றும் குற்றஞ் சாட்டினார்.

ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 35 வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் நிகழ்வு பஹ்மன் சமாதானம் மற்றும் ஐக்கியத்திற்கான அடையாளம் என்ற தொனிப் பொருளில் கொழும்பிலுள்ள மானுடவியல் கற்கைகளுக்கான அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் இலங்கை கிளை தலைவர் ஸெய்யத் ஹமீதி ரிஸா ஹக்கீகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் டொக்டர் முஹம்மத் நபி ஹஸனிபூர் சிரியாவுக்கான முன்னாள் ஈரான் தூதுவர் டொக்டர் பாகெரி, இலங்கை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸமீல் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய ஆயத்துல்லா காஸி அஸ்கர் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் பழமை வாய்ந்தது என்பதுடன் ஈரான் தனது மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது என்பதுடன் சர்வதேச மட்டத்தில் ஒற்றுமை, சமாதானம் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக ஈரான் செயற்படுகின்றது என்பதுடன் யாரும் அநியாயம் செய்யவும் அநியாயம் செய்யப்படவும் நாங்கள் இடமளிக்க போவதில்லை எனக்குறிப்பிட்டார்.

மேலும் உலகின் ஏனைய நாடுகளின் மனித உரிமை தொடர்பில் பேசும் அமெரிக்கா தான் உலகிலேயே மனித உரிமைகளை மீறக்கூடிய முதலாவது நாடாகும் குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் விமான குண்டுகளை வீசி அமெரிக்கா மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை இது பெரும் கவலையை தருகிறது.

இது மட்டுமல்லாது இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலேயே தற்பொழுது தொடர்ச்சியாக இலங்கையின் மீது மனித உரிமைகள் மீறல் என்ற பாணியில் குற்றஞ்சாட்டி வருகிறது என்றாலும், இலங்கை தனது சொந்த காலில் ஊன்றி எழுந்து நிற்கத் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

இலங்கையின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கு, பாலங்களை கட்டும் பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு ஈரான் உதவி வருவது போன்று இலங்கை முன்னெடுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் ஈரான் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.

மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் சிரியா, ஆப்கான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி எவரும் செய்யக்கூடாத பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர் என்பதுடன் ஆடு, மாடுகளை அறுப்பது போன்று அப்பாவி பொதுமக்களை அறுத்தும் சின்னப் பிள்ளைகளை கொடூரமான முறையில் கொலை செய்தும் வருகின்றனர் இந்த மிலேச்சத்தனமான மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கு எதிராக எவரும் பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றேன்.

இதனைவிட எம்மை அடக்கும் வகையில் எமது புரட்சியை முடக்கும் வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எமக்கு எதிராக தடை விதித்தது எனினும் இன்று எமது புரட்சியும் அமெரிக்காவின் தடையும் காரணமாக ஈரான் சகல துறைகளிலும் தன்னிறைவை கண்டு உலகிலேயே முன்மாதிரி நாடாக திகழ்கிறது.

கோதுமை உட்பட உணவு தானிய வகைகளில் தன்னிறைவை அடைந்துள்ளது என்பதுடன் அமெரிக்காவின் பொருளாதார தடை எம்மை வளர்க்கும் சந்தர்ப்பமாக நாம் பயன்படுத்திக் கொண்டோம். 

இன்று யுத்தக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், யுத்த விமானங்களைக் கூட தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்த நாடாக ஈரான் காணப்படுகிறது என்பதுடன் மக்களை கொல்லக்கூடிய அணு ஆயுத உற்பத்தியை ஈரான் ஒருபோதும் அனுமதிக்காது என்று எமது ஆன்மீகத் தலைவர் கூறியுள்ளார்.

மேலும் புதிய கண்டுபிடிப்புக்கள் உட்பட சகல துறைகளிலும் முன்னேறி வரும் ஈரான் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் முன்மாதிரி நாடாக காணப்படுகிறது எனவே எம்மைப் போன்று ஏனைய நாடுகளையும் வளர்த்துவிட வேண்டும் என்பதே எமது புரட்சியினதும் ஆன்மீக தலைவரினதும் இலக்காகும். 

அமெரிக்கா உலகின் பல நாடுகளில் தலையிட்டு ஒன்றுமையை குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா எதனை செய்தாலும் மக்களின் சிந்தனை சக்தியை இல்லா தொழிக்க முடியாது எனவே நீண்ட நாட்கள் சிறந்த உறவுகளைக் கொண்ட நாடான ஈரான் இலங்கைக்கு தனது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதுடன் மனித உரிமை தீர்மானத்தின் போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க எமது அரச தலைவர்கள் தீர்மானித்துள்ளார்கள் என்றார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல், குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் ஸத்தார், சட்டத்தரணி லுக்மான் ஸஹாப்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com