Wednesday, February 12, 2014

அதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை! முகநூல் சமாச்சாரம்!!

இலங்கையில் கடந்த வாரம் Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.

தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.

தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் 'அதிபர்' என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.

# உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.
# எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.
# 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.
# பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.

சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள். "எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது"

இனி நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எனினும் இப்பொழுது அந்த அதிபரை என்ன செய்யலாம்?

(ரிஷான் ஷெரீப்)





படங்கள் - கொஸிப் லங்கா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com