Thursday, February 13, 2014

ஆவா குழுவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்ததாகக் கூறப்படும் ஆவா குழுவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆவா குழுவின் தலைவர் எனக் கருதப்படும் நபர் உட்பட மூன்று சந்தேகநபர்களும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் இன்று ஆஜர்செய்யப்பட்டிருந்தனர். இதன்போது, பிரதான சந்தேகநபர் தவிர்ந்த ஏனைய இருவரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் மூன்று சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதவான் அனுமதியளித்துள்ளார்.

கைக்குண்டுகளை வைத்திருந்ததாக பிரதான சந்தேகநபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் காரணமாக, அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, ஆவா குழுவின் 8 உறுப்பினர்கள் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில், கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸாரால் ஆவா குழுவைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் கடந்த மாத முற்பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், இந்த உறுப்பினர்களிடம் இருந்து கைக்குண்டுகள், மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் உட்பட பல ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். (NF)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com