Tuesday, February 25, 2014

வடக்குக் கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு என விசேட காணி மத்தியஸ்த குழு!

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாடுகளை காணக்கூடியதாகவும் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டும் நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதற்கு ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் முன். வந்திருப்பதாகவும், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

சர்வதேச தொடர்புகளுக்கும் உபாயங்களுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சட்ட அமுலாக்கம், நீதியைப் பெறும் வழிமுறைகள் மற்றும் சமூக இணைப்பைப் பலப்படுத்தல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சகலரும் நீதியைப் பெறுவதற்கான வழிமுறைகளை சரிவர அடைந்து கொள்வதற்காக நீதியமைச்சு உட்பட புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு என்பவற்றின் ஊடாக சிறப்பான செயல்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் காணி சம்பந்தமாக எழும் பிரச்சினைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன அவற்றிலும் வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இதனூடாக காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும் என்பதுடன் அமைச்சின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதாக ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இணக்கம் தெரிவித்திருக்கிறது.

வெளிநாட்டு தூதுவர்களும், உயர் ஸ்தானிகர்களும், அதிதிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் , ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹேயோலியங் க்யூ பிரதான உரையாற்றினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com