Friday, February 14, 2014

இலக்கிய நதிகளில் குளித்து வந்த காதல்.. செல்வி ஜெயன் - சுவிஸ்

காதல் என்பது எங்கும் ஒலிக்கின்ற ஒரு பாசப்பிணைப்பு. இந்த உலகம் உண்மையாய் இயங்குவதற்கு மாசற்ற காதல் இருப்பது அவசியமாகும். மனித மனங்களில் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களோடும் ஒட்டிப்பிறக்கின்ற ஓர் உணர்வாக இது காணப்படுகின்றது.

எல்லா நாட்டுக்கும் பொதுவான தேசியகீதம் இதுதான். ஜாதி, மதம் தேசம் உயர்வுதாழ்வு பேதங்கள் கடந்து மனித உணர்வுகள் ஒன்றுபட்டு வருவது இந்த காதல்.

'காதல் என்பது ஆசை அன்பு நட்பு காமம் விரகம் ஆகிய உணர்வுகளி;ல் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு' என்கிறார் பெரியார்.

'காதல் மனித இதயத்தின் தடுக்கமுடியாத இசையாகும். பருவம் கடந்தாலும் கடவாமல் உருவம் மாறினாலும் மாறாமல் நின்று உள்ளத்து உணர்ச்சிகளுக்கெல்லாம் தலைமை வகிப்பது காதலாகும்' என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

'காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை. அவர் துறவியாக இருந்தாலும் கவிஞராக இருந்து விட்டால் காதல் அவரது இதயத்தை கரைத்துக் குடித்துவிடும்' எனக்கூறிய கண்ணதாசன் அவர்கள் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளையும் சுத்தானந்த பாரதியார் அவர்களையும் சான்றாக காட்டுகின்றார்.

தமிழர் வரலாற்றில் காதல் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறாக விளங்குகின்றது. அன்றைய நாட்டு மக்களால் பாடப்பட்ட நாட்டார் காதல் பாடல்கள் தெம்மாங்குப்பாடல்களுக்கும் சங்ககால அகத்திணைப்பாடல்களுக்கும் பொருள்மரபில் ஒற்றுமை காணப்படுகின்றது.

புறத்தே காணுகின்ற காட்சியையும் அகத்தே உணரும் உணர்வையும் இணைத்து சில சொற்களில் விளக்கிக்காட்டும் அற்புதப்பாடல் வரிகளை சங்ககால மற்றும் நாட்டார் இலக்கியங்களில் காணமுடிகிறது. பொதுவான விடயங்களாக காதலன்கூற்று காதலிகூற்று தோழிகூற்று காதலர் சல்லாபம் பிரிவாற்றாமை பிரிவுணர்தல் காதலர் தூது காதல் தோல்வி கணவன் மனைவி உறவு என்ற உணர்வுகள் கொண்டு பாடல்கள் பாடப்பட்டிருந்தது.
அகச்சட்டங்களுக்குட்பட்டுச் சங்கப்புலவன் மானிடக்காதலைப் பாடினான். சங்கப்புலவனைத் தாண்டி சமயப்புலவனிடம் வரும் போது மானிடக்காதலைப் பாடிய கவிதை கடவுள் கவிதையைப்பாடும் கருவியாகி விடுகிறது.

அன்பின் வழியதே காதல். இதனை சங்ககாலப் புலவர்கள் பல பாடல்களினூடாக வெளிப்படுத்துகின்றனர். 'கூறாடை உடுப்பாரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' என்ற கலித்தொகை பாடல் வரிகள் வறுமைச்சூழல் வந்தபோதும் மனம் கலந்த வாழ்க்கையே இனிமையானது எனக் கூறுகின்றது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிசொல்லும் குறள் தந்த வள்ளுவர் காதலுக்கு படிகள் அமைத்து எடுப்புமுதல் முடிப்புவரை பங்கீடல்லவா செய்து காட்டுகிறார். தகையணங்குறுத்தல் தொடங்கி ஊடலுவகை வரை எனப்பகுக்கப்பட்ட இன்பத்துப்பால் அகநூல்விதிப்படி அமைந்தது என்றாலும் எளிமையாக இனியமுறையில் காதல்வாழ்வு பற்றி எடுத்துச் சொல்கிறது.

'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்..' என கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வைநாடகம் இராமன் வில்லை ஒடித்தான் என அறிந்த சீதை அரிய அமுதம் முழுவதையும் தனியாளாகக் குடித்துவிட்டவளைப் போல் பூரித்துப்போனாள் எனக்கூறும் கம்பர் 'உம்முடன் இல்லாத சுவர்க்கமும் எனக்கு வேண்டாம் ' என காடுசெல்லும் சீதையின் காதலைச் சொல்லி பூரித்துப்போகிறார்.

புரட்சிக்கவிஞர் பாரதியாரை ஆட்கொண்ட இந்தப் பொல்லாத காதல் குயில்பாட்டாக கூவியழைக்கிறது நம்மை. '... மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ இனிதின் குயிற்பேட்டை என்றும் பிரியாமல் காதலித்துக் கூடிக்களியுடனே வாழோமோ...' எனத் தொடரும் மகாகவி தொடர்ந்து ஓரடி மேலே போய் 'காதல் காதல் காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல் .... ' என்று தொடர்கிறார்.

மனிதனை இன்புறுத்துவன இயற்கையும் காதலும் என உணர்ந்திருந்த நம் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் தமது படைப்புகளில் இவற்றை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். மனித நேயத்தினை தமது கவிதைக்கொள்கையாக கொண்டிருந்த பாவேந்தர் ஷசஞ்ஜீவி பார்வதத்தில்ஷ அன்பொழுகும் காதல் மாந்தர்களைப் படைத்துள்ளார். காட்டு மறவர்கள் கூட காதல்மணம் செய்வதைக்கண்டு பூரிக்கின்ற கவிஞர் நாட்டு மனிதர்கள்தான் சாதி, சமயத்தின் பெயரால் காதல் எதிரிகாளாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறார்.

'நாம் நிர்வாணமாக இருந்தோம் ஆடையாகக் கிடைத்தது காதல் ' என்று ஷகஜல்ஷஐ தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார் கவிக்கோ அப்துல்ரகுமான். அரபியில் அரும்பி பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் பரப்பும் அழகிய இலக்கிய வடிவம் கஜல். கஜல் என்றால் காதலியுடன் பேசுதல் என்று பொருள்.

உலகின் எத்தனையோ உன்னதங்களை காதல் தந்திருக்கிறது. கார்ல்ஸ்மார்க்ஸ் எனும் எளிய ஏழைமீது காதல் கொண்ட அரசகுல மாது ஜென்னி .. காதலால் அரசபதவி துறந்து எளிய மனிதனாக நடைபோட்ட எட்டாம் எட்வர்ட் மன்னன்.. ஷாஜகான் -மும்தாஜ் காதல் தந்த தாஜ்மகால் .. சலீம் -அனார்க்கலி.. அம்பிகாபதி – அமராவதி...

'கண்ணீரால் கழுவப்பட்ட காதலே சிரஞ்சீவியாய் எப்பொழுதும் ஜீவிக்கறது' எனக்கூறும் ஜிப்ரானின் மீது ஒரு மேகமாய் உரசிவிட்டு மின்னலாய் மறைந்து போன பருவதேவதை செல்மா கராமி.. 'காதலின் பொருட்டே காதல் செய் நீ என்னைக் காதலித்துத்தான் தீரவேண்டுமென்றால் காதலின் பொருட்டன்றி வேறு எக்காரணமும் விளையாதே...... ' என கூறும் 'காதல்நாற்பது' இன் சொந்தக்காரி கவிமேதை எலிஸபெத் பிரௌனிங்..

நிதர்சனங்களை சந்திக்கத் திராணியற்று ,காதல் தோல்வியால் தற்கொலை ,பழிவாங்கல் என தொடரும் இன்றைய காதலர்கள் காதலிக்கத் தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர். ' வாழ்க்கை எங்கெல்லாம் கொண்டாடப்படுகின்றதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார்' என்கிறார் ஓசோ.

வாழ்க்கையில் எந்தப் போலித்தனமும் இல்லாத காதலில்தான் கொண்டாட்டம் இருக்கிறது. உலக இலக்கிய நதிகளிலெல்லாம் குளித்துவந்த புனிதமான காதல் , எந்தவிதமாக போலித்தனமும் இல்லாதிருந்து விட்டால் அதைக் கொண்டாட இந்த உலகம் பரந்து விரிந்து கைநீட்டி காத்திருக்கும்.
காதலின் பொருட்டே காதல் செய்யும் அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com