Thursday, February 13, 2014

13ம் திருத்தச்சட்டம் இலங்கைக்கான ஆலோசனையே அன்றி கட்டாயத்திணிப்பல்ல! அடித்தது பல்டி இந்தியா!

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது என்றும் இச்சட்டத் திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனை தானே தவிர இது திணிக்கப்பட்ட விடயமல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். அன்றைய காலத்தில் இரு நாட்டு அரசாங்கமும் இணங்கியதாலேயே இச்சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. அவ்வாறில்லாமல் அதனை நாங்கள் இலங்கை அரசிடம் திணிக்கவில்லை. நாங்கள் எதனைச் செய்தாலும் அது இருநாட்டு உறவினையும் பாதிக்காமலே செய்வோம் என்றும் குர்ஷி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள உயர்மட்ட ஊடகவியலாளர்கள் 20 பேர் அடங்கிய குழு இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இந்த ஊடகவியலாளர்கள் நேற்று மாலை சந்திப்பொன்றை மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாளர்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

87களில் இந்திய அமைதி காக்கும் படையினரை இலங்கை அரசு கோரியது. நாங்கள் வழங்கினோம். மறுபடியும் அமைதி காக்கும் படையினரை திருப்பி அழைக்குமாறு பணித்தார்கள். எந்தவித மறுப்புமின்றி நாங்கள் அதனைச் செய்தோம். எமது இழப்புகளைக் காரணம்காட்டி தீர்வொன்று காணும் வரை அமைதி காக்கும் படை இலங்கையில்தான் இருக்குமென நாங்கள் அடம்பிடிக்கவில்லை.

அவர்கள் விருப்பத்திற்கு நாங்கள் வரவேற்பளித்தோம். அதே போல் இப்போது வீட்டுத் திட்டம் போன்றனவும் அவ்வாறுதான். ஆகையினால் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி எம்மீது பழிபோடக் கூடாது. அச்சட்ட மூலத்தினை ஆராய்ந்து பார்க்கும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் சிலர் 13 பிளஸ் 13 மைனஸ் என்று பலவிதமாக பேசிவருகிறார்கள். நடைமுறை சாத்தியங்களுக்கு இணங்க எந்தவொரு அரசாங்கமும் தமது சட்டமூலத்தை மாற்றியமைக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.

ஆகையினால் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கை அரசுக்கு பரிசீலிக்கும் உரிமை இருக்கிறது. 13 ஆவது திருத்தம் மற்றும் அரசியல் தீர்வு பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அரசு கூறுகிறது. இது நல்ல விடயம்தான்.

ஆனாலும் சிலர் அக்குழுவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறி வருகிறார்கள். எம்மைப் பொறுத்த வரையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து அனைவரது ஒத்துழைப்புடனும் சிறந்த தீர்வொன்றை அடைய முனைவதே சிறந்தவழி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து தரப்பினரும் இணைந்து சிறந்த தீர்வொன்றை அடைய முன்வருவதே சிறந்த வழியாகுமென இந்தியா தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com