Friday, January 31, 2014

ஆவா குழுப் பாணியில் வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் அடாவடி! இரு தினங்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரின் பாணியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் சிலர் செயற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் உயர்தர மற்றும் தரம் 11 மாணவர்கள் சிலர் அடிக்கடி தகராற்றில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அம் மாணவர்களில் சிலர் சாரயம், பியர் போன்றவற்றை குடிப்பதாகவும், பாம்பராக், பாபுல் போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்துவதாகவும் தெரியவருகிறது.

அவற்றைப் பயன்படுத்தி விட்டு வீதியில் செல்லும் பெண்கள், பாடசாலை மாணவிகள் ஆகியோருடன் சில்மிசம் செய்தல், தாமே தமக்குள் பெண்களை லவ் பண்ணுதல், தாம் லவ் பண்ணும் பெண்கள் தம்மை லவ் பண்ணாவிட்டால் அவர்களை மிரட்டுதல், மறைவான பகுதிகளில் வைத்து துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தல், தம்மை முறைத்து பார்ப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் என்பன அவர்களின் வேலையாகவுள்ளது.

பாடசாலைகளில் செயற்படும் இவர்கள் பாடசாலை விடும் நேரங்களில் வீதிகளிலும் பெண்கள் பாடசாலைகளின் முன்னாலும் இச் சேட்டைகளை செய்வதுடன் மாலை வேளைகளில் வவுனியாவில் கல்வி நிலையங்கள் குழுமியுள்ள வைரவபுளியங்குளம் வைரவர் கோவில் வீதி, குருமன்காடு வீதி என்பவற்றில் நின்று காலட்டா செய்வதுடன் மது போதையில் வலம் வருகின்றனர்.

நேற்றைய தினம் (30) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் எற்பட்ட சண்டையின் போது ஒரு மாணவன் சைக்கிள் செயின் மூலம் மாணவர்கள் சிலர் மீது மூர்க்கத்தனமாக தாக்கியதில் தலை, கண் என பலத்த காயங்களுக்கு உள்ளாகிய இரு மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாடசாலை முடியும் நேரம் அப் பாடசாலையின் முன்றலில் அம் மாணவர்கள் சண்டையில் ஈடுபட்டதால் மேலும் ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்கள் சிலர் மது போதையில் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியவாறு வீதிகளில் திரிந்த போது அதனைத் தட்டிக் கேட்ட பிரபல வர்த்தகர் ஒருவர் மீது அம் மாணவர்கள் ஹெல்மட், கொட்டன்கள் என்பவற்றால் மூர்கமாக தாக்கியதில் அவர்காயமடைந்துள்ளார். அவரது ஆட்டோவும் சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்து காயப்பட்டவரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் பொலிசார் முன்னிலையிலும் அம் மாணவர்குழு அராஜகம் செய்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் ஆவாகுழுப் பாணியில் பாடசாலை மாணவர்களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம் மாணவர்களின் நடமாட்டம் மிக்க பகுதிகளில் பொலிசார் கடமையில் இருப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com