Wednesday, January 29, 2014

திருடனை சிக்க வைத்த மாம்பழம் !! (படங்கள்)

யாழ். சுழிபுரம் மேற்கு காளி கோயிலில் பித்தளைப் பொருட்க ளைத் திருடிச் சென்ற இளைஞன் சறுக்கி வீழ்ந்ததினால் அவரை கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள் கிராம அலுவலர் ஊடாக பொலிஸாரிடம் கையளித்ததாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் நேற்று தெரிவித்தனர். துவிச்சக்கர வண்டியில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் மேற்படி ஆலயத்திற்குள் பட்டப்பகலில் புகுந்து அங்கிருந்த குத்துவிளக்குகள், அர்ச்சனைத் தட்டு, மணிகள், பஞ்சாராத்தி போன்ற பித்தளைப் பொருட்களைத் திருடி உரைப்பை ஒன்றினுள் போட்டுக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றான்.

இதன்போது, ஆலயத்தின் முன் வீதியில் கிடந்த மாம்பழம் ஒன்றின் மீது திருடனின் துவிச்சக்கர வண்டி சக்கரம் ஏறியதால் துவிச்சக்கர வண்டியுடன் திருடன் சறுக்கி வீழ்ந்தான். இதன்போது திருடி உரை பையினுள் கட்டப்பட்ட பொருட்களும் வீதியில் வீழ்ந்து பலத்த சத்தம் எழுப்பின.

சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து பார்த்த போதே குறித்த இளைஞன் ஆலயப் பொருட்களைத் திருடிச் சென்றமை தெரியவந்தது. உடனடியாக திருடனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மின்சாரக் கம்பத்தின் தாங்குக் கம்பியுடன் கட்டிவைத்ததுடன், அப்பகுதி கிராமஅலுவலரின் ஊடாக வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத் திற்கு கொண்டு வந்தனர்.

அவ்விடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் குறித்த நபரை கைது செய்து கொண்டு சென்றதுடன், திருடப்பட்ட பொருட்கள் மற்றும் திருடனின் துவிச் சக்கர வண்டி ஆகியவற்றினையும் உடன் கொண்டு சென்றதாக பொலிஸர் மேலும் தெரிவித்தனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com