Thursday, January 30, 2014

ஜெனீவா மாநாடே இலக்கு! இலங்கைக்கு எதிரான சதிகார கும்பலின் பிரதிநிதியாக மாறியுள்ள பொன்சேகாவும், வடமாகாண சபையும்!

ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்து அரசியலமைப்புக்கு முரணான வகையில் புலம் பெயர் புலிகளின் கனவை நிறைவேற்றுவதற்காக இலங்கை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மதத் தலைவர்கள் நேற்று வன்மையாகக் கண்டித்தனர்.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமதத் தலைவர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் கம்புருகமுவே வஜிர தேரர், ஜெனீவா மாநா ட்டை கருத்திற் கொண்டே வட மாகாண சபை தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. புலம்பெயர்ந் தோரின் தூண்டுதலில் நாட்டுக்கு எதிரான இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியிலே வட மாகாண சபையை ஜனாதிபதி ஸ்தாபித்தார். வடக்கு தேர்தலை ஜனாதிபதி நடத்தியிருக்காவிட்டால் முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ இவ்வாறு செயற்பட முடிந்திருக்காது. யுத்தத்தினால் இழந்தவற்றை மீள பெற முயல்வதே அன்றி அரசுக்கும் அரசியல் யாப்புக்கும் எதிராக செயற்படுவது முதலமைச்சரது பணியல்ல. நாட்டுக்கு எதிராக விசாரணை நடத்தக் கோருவது தேசத்துரோகமாகும்.

தேசத் துரோக குழுக்களே நாட்டில் இனரீதியான பிரச்சினைகளைத் தூண்ட முயல்கின்றன. நாட்டைப் பாதுகாக்க சகலரும் ஒன்றுகூட வேண்டும். கொலைகாரன் ஒருவனை நாட்டுத் தலைவரைவிட மேலானவராக பொன்சேகா கூறியுள்ளது வெட்கக்கேடான விடயமாகும். ஜெனீவா மாநாட்டிற்கு புதிய தகவல் வழங்க டயஸ்போரா ஊடாக இவர் முயல்கிறார். இந்த முயற்சிகளை தோற்கடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைப்பின் இணைத் தலைவரும் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவிக்கையில், வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான எதுவும் கிடைக்காது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது அரசியல் இலாபம் கருதி இவ்வாறு நடப்பது அநாகரிகமான செயலாகும். ஆனால, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்க்கவே நடவடிக்கை எடுப்பதாகவும் அரசியல் நோக்கில் செயற்படப் பாவதில்லை எனவும் சி. வி. விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

பலஸ்தீன உயர் விருது பெற்ற மக்களின் அன்புக்குரிய ஜனாதிபதியை பிரபாகரனுடன் பொன்சேகா ஒப்பிட்டுப் பேசியது குறித்து வேதனை அடைகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது மக்களுக்காக அன்றி பதவிக்காகவே செயற்படுகிறது. பதவிக்காக மோதிக் கொள்ளும் இவர்கள் எப்படி மக்களை இணைத்துச் செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கிறிஸ்தவ மதவிவகார இணைப்பாளர் சரத் ஹெட்டியாரச்சி தெரிவிக்கையில், இரசாயன ஆயுதங்கள் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நாம் அப்பிரதேசங்களுக்குச் சென்றோம். புலிகளிடம் இருந்து மீண்டுவந்த மக்களை படையினர் சிறப்பாக கவனித்தனர். அன்றிருந்த நிலை இன்று மாறி நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனை தாங்க முடியாத குழுக்களே நாட்டுக்கு எதிராக சதி செய்கின்றனர். எமது நாட்டில் அராஜக நிலை ஏற்படுத்த சர்வதேச சக்திகள் முயல்கின்றன.

வட மாகாண சபைத் தீர்மானம் நாட்டின் ஆள்புள ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இலங்கையர் என்ற வகையில் சகல மக்களும் ஒன்றுபட்டு நாட்டுக்கு எதிரான சதிகளை தோற்கடிக்க வேண்டும். ஜெனீவா மாநாடு நெருங்குகையில் ஏதும் பிரச்சினைகளை தூண்டி விட முயற்சி இடம்பெறும். மத சுதந்திரம் கிடையாது என காண்பிக்க சிலர் தயாராகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் முஸ்லிம் மத விவகார இணைப்பாளரும் அமைப்பின் இணை தலைவருமான ஹசன் மௌலானா சகல இன, மத, மக்களும் சமாதானத்தின் பலனை அனுபவிக்கின்றனர். 30 வருட யுத்தம் நடைபெறுகையில் புலிகளால் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது மனித உரிமை குறித்து பேசும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் எங்கு இருந்தன.

தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டு தொழுது கொண்டிருந்த போது முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது ஏன் இவர்களால் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை. பிரபாவினாலே மனித உரிமை மீறப்பட்டது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வர முயல்வோர் இது குறித்து அமைதி காக்கின்றனர்.

பிரபாகரன் யுத்தம் செய்யும் காலத்தில் விக்னேஸ்வரன் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. பிரபாகரன் -இருந்திருந்தால் வட மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்காது. முதலமைச்சராக வரவும் முடிந்திருக்காது. ஜனாதிபதியே வட மாகாண சபை தேர்தலை நடத்தினார் நாட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோர் தேசத்துரோகிகளாகும் என தெரிவித்துள்ளார்

தர்மாஷ்மி மன்ற தலைவர் கலகம தருமவங்சி தேரர் தெரிவிக்கையில், யுத்தத்தை முடிவுகட்ட பங்களித்த பொன்சேகா இலங்கைக்கு எதிரான சதிகார கும்பலின் பிரதிநிதியாக மாறியுள்ளார். வெட்கமின்றி மாபெரும் குற்றவாளியான பிரபாகரனை ஜனாதிபதியை விட மேலானவராக கூறினார். ஓய்வுபெற இருக்கையில் தன்னை இராணுவத் தளபதியாக்கிய ஜனாதிபதியை பொன்சேகா மறந்துவிட்டார்.

இதற்கு முன் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை புலிகளுக்கு தாரைவார்த்தனர். நிலைநாட்டப்பட்ட சமாதானத்தை குழப்புவதற்கு பொன்சேகா, சந்திரகா போன்றவர்கள் முயல்கின்றனர். யுத்த காலத்தில் பயங்கரவாதிகளை போசித்த சக்திகள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. உள்நாட்டு பிரதிநிதிகள் இதற்கு தலைமை வசிப்பது நாட்டிற்கு ஏற்பட்ட பெரும் துரதிஷ்டமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com