Thursday, January 16, 2014

துபாயில் இந்தியருக்கு தூக்குத் தண்டனை!

துபாயில் வசித்துவந்த இரு இந்தியர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகாராறு கொலையில் முடிந்துள்ளது. நீதிமன்ற குறிப்புகளின்படி கொலை செய்யப்பட்டவர் என்எஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் 28 வயதுடைய மற்றொரு இந்தியருக்கு அந்நாட்டு பண மதிப்பில் 8,500 திர்ஹாம் கடன் கொடுத்திருந்தார். அதனை மூன்று தவணையாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பேசப்பட்டிருந்தது.

கடந்த மே மாதம் 22ஆம் தேதி டெய்ரா பகுதியில் உள்ள பிரதிவாதியின் இருப்பிடத்தில் இது பற்றிப் பேசுவதற்காக இருவரும் கூடியுள்ளனர். இருவருக்கும் இடையில் ஆரம்பித்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறத் தொடங்கியது. ஆத்திரமடைந்த குற்றவாளி ஒரு கயிற்றை எடுத்து பணம் கொடுத்தவரின் கழுத்தில் சுற்றி இறுக்கத் தொடங்கியுள்ளார். அவரது அசைவுகள் நின்ற பிறகே அந்தக் கயிற்றை அவர் விடுவித்துள்ளார்.

இறந்தவரின் உடலை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசுவதற்காக குற்றவாளி எடுத்துச் சென்றுள்ளார். கனமாக இருக்கவே அருகில் சென்றுகொண்டிருந்த மூன்று பேரை உதவிக்குக் கூப்பிட்டுள்ளார். நால்வருமாக சென்று அந்த அட்டைப் பெட்டியைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்துவிட்டனர். அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்தியக் காவலாளி குப்பையில் கிடந்த அட்டைப் பெட்டியைப் பார்த்துள்ளார். மறுநாளும் அது அங்கேயே கிடந்ததால் அதனைப் பிரித்துப் பார்த்தபோது மனித உடல் இருந்ததும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறை அட்டைப் பெட்டியின் மீதிருந்த கைரேகைகள் மூலம் குற்றவாளிகளைப் பிடித்தது. அட்டைபெட்டியைத் தூக்க உதவிய மூன்று பேரையும் விசாரணைக்குப் பின் காவல்துறை விடுவித்துவிட்டது. ஹோட்டல் ஒன்றில் இருந்த கண்காணிப்புக் காமிராவில் குற்றவாளி பிணம் இருந்த பெட்டியை சுமந்து சென்றது பதிவாகியிருந்ததும், கொலை செய்யும்போது கண்ணால் பார்த்ததாக கூறிய சாட்சியமும் குற்றத்தை உறுதிப்படுத்தின.

இரண்டு நாட்களில் இந்தியாவிற்குத் திரும்பி வருவதாக இருந்த அந்தக் குற்றவாளி தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பதினைந்து நாட்களுக்குள் இது குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com