Sunday, December 29, 2013

நரேந்திர மோடியின் பச்சோந்தித் தனத்தைக் காட்டும் வலைத்தளம் பற்றித் தெரியுமோ?

குஜராத் கலவரத்தின்போது, நான் அடைந்த வேதனையை, துயரம், சோகம், வருத்தம், வலி என, எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியாது; அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை’ என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தெரிவித்து உள்ளார். குஜராத் கலவரம் தொடர்பாக, நரேந்திர மோடி, முதல் முறையாக, இவ்வாறு, கூறியுள்ளார்.

டிஸ்மிஸ்:
கடந்த, 2002ல், குஜராத்தில் நடந்த கலவரத்தில், அம்மாநில முதல்வர், நரேந்திர மோடிக்கு தொடர்பிருப்பதாக கூறி, ஆமதாபாத் பெருநகர கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று முன்தினம், ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, முதல் முறையாக, தன், வலைப்பூ பக்கத்தில், எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:

சகோதர, சகோதரிகளே…:

எப்போதும், உண்மையே வெல்லும் என்பது, இயற்கையின் நீதி. ‘வாய்மையே வெல்லும்’ என்பது, நீதித் துறையின் நம்பிக்கை. இந்த நேரத்தில், என் மனதை பாதித்த சம்பவங்களை பற்றி, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.கடந்த, 2001ல், குஜராத்தில், மிகப் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. ஏராளமானோர் பலியாகினர்; நுாற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையே தொலைந்து விட்டது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து, நடுத் தெருவில் நின்றனர். ஒட்டு மொத்த வாழ்க்கையும் அழிந்து விட்டது.இந்த நேரத்தில், நினைத்து பார்க்க முடியாத வேதனையில், நான் பாதிக்கப்பட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய, மிகப் பெரிய பொறுப்பு, என் முன் இருந்தது. இது, மிகப் பெரிய சவாலான பணியாக இருந்தது.ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, 2002ல், குஜராத்தில், மிக மோசமான கலவரம், திடீரென ஏற்பட்டது. அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள், நிர்கதியாகி, அனாதையாக நின்றன. பல ஆண்டுகளாக சிரமப்பட்டு நிறைவேற்றப்பட்ட அனைத்து திட்டங்களும், முடங்கி விட்டன.நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களையே சமாளிக்க முடியாத நிலையில், கலவரத்தால் ஏற்பட்ட சேதங்கள், மிகப் பெரிய பாதி்ப்பை ஏற்படுத்தின.

துயரம்:
கலவரத்தால், நான் அடைந்த வேதனையை, துயரம், சோகம், வருத்தம், வேதனை, வலி என, எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியாது; அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.ஒரு பக்கம், நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பும், மறு பக்கம் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்பும், எனக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தின. துயரம் என்னை அழுத்தினாலும், அதை மனதுக்குள் தேக்கி வைத்து, மாநிலத்தில் அமைதியையும், நீதியையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ளும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டேன். அதற்கு, கடவுளின் ஆசி, எனக்கிருந்தது.ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களின் துயரங்களையும், வேதனைகளையும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நேரத்தில், பிரச்னைகளிலிருந்து மீண்டு வருவதற்கு, நம்முடைய வேதப் புத்தகங்களை படித்தேன்.இதுபோன்ற ஒரு கொடுமை, இனி, மற்றவர்களுக்கோ, நம் சமுதாயத்துக்கோ, நாட்டுக்கோ, மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற, ஒரே பிரார்த்தனையை மட்டுமே, கடவுளிடம் வைத்தேன்.

பொறுப்பு:
பெரும், வேதனையை அளிக்கும் இந்த நிகழ்வை பற்றி, இப்போது தான், முதல்முறையாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.கலவரம் நடந்த நேரத்தில், உணர்ச்சி பிழம்பாக இருந்தாலும், மாநிலத்தில், அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்றும், அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், மக்களுக்கு, அடிக்கடி வேண்டுகோள் விடுத்தேன்.குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தபோது, இந்த வேண்டுகோளை விடுத்தேன். ஊடகங்களை சந்திக்கும்போதும், இதை வலியுறுத்தினேன். அமைதியை ஏற்படுத்தவும், நீதியை நிலை நிறுத்தவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு, மாநில அரசுக்கு இருந்தது. சமீபத்திய, ‘சத்பவனா’ உண்ணாவிரதத்தின்போது, இதே கருத்தை, நான் வலியுறுத்தி இருந்தேன்.இவ்வாறு, மோடி அதில் கூறியுள்ளார்.

12 ஆண்டுகளாக எரிந்த தீ அணைக்கப்பட்டு விட்டது:
நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: எப்போதுமே, ஒற்றுமையையும், வளர்ச்சியையுமே, நான் வலியுறுத்தி வருகிறேன். நான், மிகவும் விரும்பி்ய குஜராத் மக்களின் இறப்புக்கும், வேதனைக்கும், நானே காரணம் என, என் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால், நம் மனது, எந்த அளவு வேதனைப்படும் என, உங்களால் நினைத்து பார்க்க முடியுமா?சிலர், தங்களின் அரசியல் லாபத்துக்காகவும், சுய நலனுக்காகவும், என்னை மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த குஜராத் மக்களையும், நாட்டையும், களங்கப்படுத்தினர். கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்பை, சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, மனசாட்சி இல்லாத அந்த நபர்கள், மீண்டும் குற்றம் சுமத்தினர்.இதுபோன்ற குற்றச்சாட்டுகள், எந்த அளவுக்கு, மன வேதனையை ஏற்படுத்தும் என்பதை, அவர்கள் உணரவில்லை. ஆனாலும், குஜராத்தில், வளர்ச்சி ஏற்படுத்துவதற்கான வழியில், தொடர்ந்து பயணித்தோம். ஒற்றுமையையும், நல்லெண்ணத்தையும் உருவாக்கினோம். இது, எளிதான காரியமாக இல்லை. ஆனாலும், உறுதியுடன் செயலாற்றி, ஒற்றுமையை ஏற்படுத்தினோம்.தினம், தினம், பயந்து அலறிய சூழ்நிலையை மாற்றி, குஜராத்தில், அமைதியை நிலைநாட்டினோம்.

இப்போதுதான், எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கான பெருமை, குஜராத்தைச் சேர்ந்த, ஒவ்வொரு மக்களையும் சேரும். கலவரம் ஏற்பட்டதும், அதை அடக்க, அமைதியை நிலை நாட்ட, குஜராத் அரசு, மிக வேகமாக செயல்பட்டது. இதற்கு முன், எந்த அரசும், இப்படி செயல்பட்டது இல்லை.நேற்றையை தீர்ப்பில், கலவரத்தில் எனக்கு தொடர்பில்லை என, கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 12 ஆண்டுகளாக எரிந்த தீ, அனைக்கப்பட்டு விட்டது. இப்போது, சுதந்திரமான, அமைதியான நபராக, என்னை உணருகிறேன். நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில், எனக்கு துணையாக இருந்த, ஒவ்வொருவரையும், இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். என் மீதும், குஜராத் மக்கள் மீதும், பழி துாற்றியவர்கள், இனிமேல், அதை நிறுத்தி விடுவர் என, எதிர்பார்க்கவில்லை.ஆனால், இனியும், ஆறு கோடி குஜராத் மக்களை, அவர்கள் களங்கப்படுத்தக் கூடாது என்பது தான், என் வேண்டுகோள். இந்த தீர்ப்பை, என் சொந்த வெற்றியாகவோ, தோல்வியாகவே கருதவில்லை. என் நண்பர்களும், என்னை எதிர்ப்பவர்களும், இதேபோல் கருத வேண்டும். நாட்டில், ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், என் நோக்கம். இதுதான், அடித்தளமாக இருக்க வேண்டும். எனவே, நாட்டில் உள்ள ஒவ்வொருவரும், புன்னகை சிந்திய முகங்களுடன், கைகோர்த்து, ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்.இவ்வாறு, மோடி கூறியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com