Sunday, November 17, 2013

தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை

காலத்தாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப்பெரிது என்பார் திருவள்ளுவர்.

சிறிய நன்றிக்கே இவ்வளவு மகத்துவம் என்றால், நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் மீது, நாம் நன்றி கொள்ள வேண்டும் என்பதற்கு, முருகப்பெருமானின் பிறப்பு ஒரு உதாரணம் அவர் தாயின் சம்பந்தமின்றி அவதரித்தவர்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய ஆறு தீப்பொறிகளை கங்கையில் இருந்த ஆறு தாமரைகளில் தங்கிக் கொண்டதை தொடர்ந்து ஆறு குழந்தைகளாக மாறின.

அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க ஆறு பெண்கள் நியமிக்கப்பட்டனர் அவர்கள், 'கார்த்திகை பெண்கள்' எனப்பட்டதுடன் பிள்ளைகளுக்கு பாலூட்டி, சீராட்டியும் வளர்த்தனர் இந்த நன்றிக்கடனுக்காக, அவர்கள் ஆறுபேரையும் ஒரே நட்சத்திரமாக மாற்றி, வானமண்டலத்தில் இடம்பெறசெய்தார் சிவன் அதுவே கார்த்திகை நட்சத்திரம்.

முருகன் பிறந்தது விசாக நட்சத்திரத்தில் ஆனால், தன் பிறந்த நாளைக் கூட அவர் வருடம் ஒருமுறை தான் கொண்டாடுவார் (வைகாசி விசாகம்) ஆனால், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெண்களுக்குரிய, எல்லா கார்த்திகை நட்சத்திர நாட்களிலும், அந்த தேவியரையும் நினைத்து, தன்னையும் வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக வரம் அளித்தார் இதனால் தான் இன்றும், 'கார்த்திகை விரதம்' பிரபலமாக இருக்கிறது.

இந்த சம்பவத்தின் மூலம், தங்களை வளர்த்து ஆளாக்கியவர்களை மறவாத உள்ளம் வேண்டும் என்ற நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். கார்த்திகை விரதம் துவங்குபவர்கள் திருக்கார்த்திகையில் துவங்கி, ஒரு வருடம் தொடர்ந்து அனுஷ்டித்தால் நினைத்தது நிறைவேறும்.

வளர்த்தவர்களைத் தான் என்றில்லை, நமக்கு ஒருவர் சிறு உதவி செய்தாலும், அதைப் பெரிதாகக் கருதி, நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்பதை கார்த்திகை திருநாள் நமக்கு உணர்த்துகிறது.

முருகன் ஒளி வடிவாகப் பிறந்தவர் அந்த ஒளியை உருவாக்கியவர் சிவபெருமான் இதனால், தந்தைக்கு திருவண்ணாமலையிலும், மகனுக்கு திருப்பரங்குன்றம் மலையிலும் தீபம் ஏற்றுவர் இது மட்டும்லாது இன்றும் முருகன் கோவில்களிலும் கூட கார்த்திகை தீபம் ஏற்றுவதுண்டு.

முருகப்பெருமானை தீபத்திற்கு ஒப்பிடுகிறார் அருணகிரிநாதர் 'தீபமங்களஜோதீ நமோநம...' என்று திருப்புகழில் அவர் பாடுகிறார்.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்த போது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது அதன் பயனாக, அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு.

நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட, கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும் விளக்கொளி இல்லாவிட்டால் வீடு இருண்டு விடும் அதுபோல மனதில் ஒளி இல்லாவிட்டால், உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும் கார்த்திகை திருநாளில் வீடு நிறைய தீபம் ஏற்றுவது மட்டுமல்ல, நம் மனதிலும் நற்குணங்களாகிய தீபங்களை ஏற்றுவோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com