Saturday, November 16, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரித்தானிய பிரதமர டேவிட் கமரூனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்புக்கு திரும்பிய நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2013 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விதம் குறித்து பிரதமர் கமரோன் திருப்தி வெளியிட்டார். சிலர் முன்மொழிந்ததைப் போன்று இந்த மாநாட்டை பகிஷ்கரிக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்குக்கு அவர் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பிரதமர் நான்கு வருடங்களுக்கு முன்னர் மோதல் நிறைவுக்கு வந்;ததைத் தொடர்ந்து பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வட மாகாண சபைக்கு தேர்தல்களை நடத்தியமை நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு மிகச் சாதகமான நடவடிக்கை என வர்ணித்தார்.

எனினும், இடம்பெயர்ந்தவர்கள், காணிப் பிரச்சினைகள் வட மாகாணத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபைக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களுடன் தொடர்புபட்ட பல்வேறு விடயங்கள் இன்னும் தீர்க்கப்படவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் மோதலின்போது சேதத்திற்குள்ளான உட்கட்டமைப்பு புனர்நிர்மாணம் போன்ற விடயங்களில் பாரியளவு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது எனவும் அரசியல் விவகாரங்களில் இணக்கப்பாட்டை எட்டும் வகையில் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் தீர்வொன்றை எட்டுவதற்கும் சம்பந்தப்பட்ட எல்லா கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவே இந்த நோக்கத்திற்கான சிறந்த தளமாகும்' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மோதல் நிறைவுக்கு வந்து நான்கு வருடங்களே ஆகும் நிலையியல் எல்லா பாரிய சவால்களையும் வெற்றி கொள்வதற்கு இன்னும் காலம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com