Friday, November 1, 2013

போப் பிரான்சிஸ் மக்களுடன் கொண்டாடிய குடும்பத் திருவிழாவில் அனைவரையும் கவர்ந்த குட்டிப் பையனின் வேடிக்கை !

கடந்த சனிக்கிழமை அன்று வாடிகன் நகரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் 1 லட்சம் மக்களுடன் குடும்பத் திருவிழாவைக் கொண் டாடினார்.

முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே பல வண்ண பலூன்களை தன்னார்வ ஊழியர்கள் அளித்தனர். போப்பிடமும் ஒரு பலூன் கொடுக்கப்பட்டபோது அதை வைத்து அவர் தன்னுடன் வழி நடத்திச் செல்லும் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காண்பித்தார்.

அன்று இரவு ஆயிரக்கணக்கான முதியவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊர்வலமாக வந்து சதுக்கத்தில் குழுமியிருந்தனர். அவர்களிடையே போப் பிரான்சிஸ் முதியவர்கள் அடுத்த தலைமுறையினரின் வாழ்வில் ஆற்றும் முக்கிய பங்கு குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

எல்லோரிடமும் அன்பு செலுத்துதல் குறித்தும், எல்லோராலும் நேசிக்கப்படுதல் குறித்தும் போப் பிரான்சிஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கோடு போட்ட சட்டையும், ஜீன்ஸ் பேன்ட், ஷூக்கள் அணிந்த ஒரு சிறுவன் தைரியமாக வந்து போப்பாண்டவரின் வெள்ளை இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்ட அந்த சிறுவனை தொந்திரவு செய்யாமல் இரக்க குணமுள்ள ஒரு தாத்தாவைப் போல் அவன் போக்கில் போப்பாண்டவர் விட்டார்.

அவனைப் பார்த்து சிரித்த அவர் தனது உரையைத் தொடர்ந்தார். நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவரையே சிறிது நேரம் அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் இறங்கி வந்து அவரது கால்களைக் கட்டிக் கொண்ட அந்த சிறுவன் கூட்டத்தினர் அனைவரது கவனத்தையும் கவர்ந்தான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com