Thursday, November 21, 2013

மக்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கின்றன!! 2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் ஒரே பார்வையில்....!!

சமூகத்தின் சகல பிரிவுகளுக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிணங்க அரசாங்க ஊழி யர்களின் வாழ்க்கை செலவு கொடுப்பனவு 1200 ரூபாவி னால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

63 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு. கால்நடை மருத்துவர்களுக்கு 7 ஆயிரம் ரூபா கொடுப்பனவு. கிராமப் புறங்களின் போக்குவரத்து வசதிக்கென ஆயிரம் பாலங்களும் நிர்மாணிக்கப்படும். மாதாந்த புரள்வு 5 ஆயிரம் ரூபாவிற்கு குறைந்த வர்த்தக நிறுவனங்களுக்கு உள்ளுராட்சி நிறுவன கட்டணங்களிலிருந்து விடுதலை.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையை, நிதி திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்று சமர்ப்பித்த 4 வது வரவு செலவுத்திட்டம் இதுவாகும். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 5.8 சதவீதத்தினால் குறைப்பதே, தனது நோக்கமென, ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடு அடைந்துள்ள அபிவிருத்திகள் தொடர்பாக, விளக்கமளித்த அவர், எந்தவொரு அரச நிறுவனமும், தனியார் மயப்படுத்தப்படவில்லையென கூறினார். பல வரவு செலவுத்திட்டங்களுடாக சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு அதிஉயர் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும், யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

சம்ப ஆணைக்குழுவினால் அரசாங்க ஊழியர்களுக்கான முறையான சம்பள திட்டமொன்றை தயாரிக்கும் வரை, சகல அரச ஊழியர்களின் வாழ்க்கை செலவு கொடுப்பனவு, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 1200 ரூபாவினால் அதிகரிக்கப்போவதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் கொடுப்பனவுகள், அடிப்படை சம்பளத்திலிருந்து 56 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற போக்கு வரத்து வசதிளை மேம்படுத்துவதற்கு, அடுத்த ஆண்டு ஆயிரம் பாலங்களை துரிதமாக நிர்மாணிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சிறிய பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தவும், திட்டமிடப்பட்டுள்ளது. நீதியரசர்களின் பிரத்தியேக கொடுப்பனவுகள் 8 சதவீதத்தினால் அதிகரிக்கப் பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாவும், பிரதேச செயலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு உட்பட கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்று வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும். கால்நடை மருத்துவர்களுக்கு 7 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க, இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மரத்தளபாடங்களை எடுத்துச்செல்வதற்கான அனுமதிப்பத்திர முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 68 வயது வரையிலான பெண் கைத்தொழிலாளர்களுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வட்டியில்லா கடனை வழங்குவதற்கு, இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கலைஞர்களுக்கு தமது ஓய்வு காலத்தை கழிப்பதற்கு, 5 ஓய்வு விடுதிகளை நிர்மாணிப்பதற்கு, யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

63 வயதிலும் கூடிய சகல விவசாயிகளுக்கும் 1250 ரூபாவிற்கு மேற்படாத ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந் தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள், 6 ஆயிரம் பாடசாலைகளில் நிர்மாணிக் கப்படும். மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இதற்கென ஒதுக்கப்பட்ட நிதியை ஆயிரம் மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கும் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி உபகரணங்கள், படகு எஞ்சின்களை இறக்குமதி செய்யும் போது வரி விலக்கு அளிப்பதற்கு தீர்மானிக்கப்ட்டுள்ளது. உள்ளுர் படகு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு இறக்குமதி செய்யப்படும் படகுகளுக்கான வரியை அதிகரிப்பதற்கும் வரவு செலவு திட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்சார் பல்கலைக்கழகத்தை சகல வசதிகளும் கொண்ட பல்கலைக்கழகமாக மாற்றியமைப்பதற்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தரளவிலான பால் பண்ணையாளர்களை ஊக்குவிப்பதற்காக 20 ஆயிரம் பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 8 சதவீத வரி விகிதத்தின் கீழ் பண்ணைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் பால் சேகரிக்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வது பால் சேகரிப்பு நிலையங்களை ஏற்படுத்துவதற்கும், விசேட கடன் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கால்நடை உணவு, புட்தரைகளை முன்னேற்றுவதற்கும் கடன் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது.

வாழ்வெளிச்சி திட்டம் மூலம் கிராமிய பொருளாதாரம் மற்றும் வீட்டு தோட்ட அபிவிருத்தியை மேலும் ஊக்குவிப்பதற்கு சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சிறந்த 5 வாழ்வெளிச்சி குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படும்.

சிறு வர்த்தகம், மற்றும் சுயதொழில் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் 500 ரூபா வருடாந்த கொடுப்பனவின் கீழ் வாழ்வெளிச்சி உரிமை அட்டைகளை வழங்குவதற்கும் அந்த அட்டைகளை வைத்திருப்போருக்கு உள்ளுராட்சி நிறுவனங் களுக்கு செலுத்தும் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அதிகரிக்கப்படும். சிறுவர் துஷ்பிரயோகம மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கும் 300 மில்லியன் ருபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக இம்முறையும் பல்வேறு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவ பட்டப்பின்படிப்பு அபிவிருத்திக்கென 2500 மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பயிலுனர் மருத்துவர்களுக்கு 750 ரூபா கொடுப்பனவை வழங்கவும் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை ஊழியர்களுக்கான சீருடை கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்பு திட்டம் ஒன்று ஏற்படுத்தப்படும். பல்வேறு சட்டத்திட்ட்ங்களின் கீழ் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்கு சட்டத்திட்டங்களை இலகுப்படுத்த பாராளுமன்ற உப குழுவொன்றை நியமிப்பதற்கும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்ட துறை முன்னேற்றத்திற்கென பல்வேறு யோசனைகள் இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com