Monday, October 28, 2013

நாட்டில் குண்டு வெடிப்புக்கள் எதுவும் தற்போது இல்லை ஆனால் இலங்கைக்கு எதிரான குண்டுவெடிப்பக்கள் ஜெனீவாவில்! மகிந்த

நாட்டில் குண்டு வெடிப்பு முடிவுற்ற போதும் வருடத்திற்கு இருதடவை மனித உரிமை என்ற பெயரில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான குண்டுகளை எதிர்கொள்ள நேரிட் டுள்ளது எனவும் சவால்கள் அனைத்தையும் ஏற்று அதனை வெற்றிகொள்ளும் அரசாங்கம் இதுவென உலகிற்கு நிரூ பித்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்தார்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பி இனங்களுக்கிடையில் நட்புறவைக் கட்டி யெழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுநலவாய உச்சிமாநாட் டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் இதனை நேரில் கண்டுணர முடியும் எனவும் தெரிவித்தார்.

நெடுஞ்சாலை வரலாற்றில் இன்று முக்கியமான தினமாகும். மக்களின் பல வருட எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது. எதிர்பார்ப்பு மட்டுமன்றி இலங்கைக்கு வந்து போகும் வெளிநாட்டவர்களின் எதிர்பார்ப்புமாக இந்த கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை இருந்தது. இங்கு வந்து செல்லும் வெளிநாட்டவர் நேரடியாகவே இதனை எமக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு மணித்தியாலத்தில் வர முடிந்தாலும் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்புக்குச் செல்ல ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேல் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 1960 களிலிருந்து இந்த அதிவேக நெடுஞ்சாலையின் அவசியம் உணரப்பட்டதுடன் பலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

பல அரசாங்கங்கள் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தன. இதன் பிரதிபலனாக சில பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டன. இந்த அதிவேக பாதையை நிர்மாணித்ததன் மூலம் பாரமெடுத்த சவாலை நிறைவேற்றும் திறமை எமக்குள்ளது என்பதை மீண்டும் உலகிற்குச் காட்டியுள்ளோம்.

30 வருட பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் சவாலை மூன்றே வருடங்களில் நாம் நிறைவேற்றினோம். உலகில் எந்த நாடுகளாலும் முடியாததை நாம் முடித்துக்காட்டி சவாலை வெற்றி கொண்டுள்ளோம். நாம் பல சவால்களை நிறைவேற்றிய போதும் மனித உரிமை என்ற குற்றச்சாட்டுக்கள் எம்மீது எழுகின்றன. நாட்டில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட பயங்கரவாதத்தை நாம் ஒழித்த போதும் இறுதி நாளில் என்ன நடந்தது என கேள்வியெழுப்பும் நிலையே தொடர்கிறது.

நாட்டில் குண்டு வெடிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதும் ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் செப்டெம்பர் மாதத்திலும் ஜெனீவாவுக்குச் சென்று பதிலளிக்கும் நிலை எமக்கு உள்ளது. நாட்டில் குண்டு வெடிக்காவிட்டாலும் எமக்கு ஜெனீவாவில் குண்டு வெடிக்கிறது. இந்த நாட்டில் பல வருடங்களாக பலியான உயர்கள் பற்றி அல்லாது இறுதி தினத்தில் பலியானவர்கள் பற்றியே பெரிதாகப் பேசப்படுகிறது. 2009 மே 19 ஆம் திகதி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை வன்முறை நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவராது பலியாகவில்லை என்பது பற்றி பேசப்படுவதில்லை.

நாம் கடந்த பல யுகங்களில் பல சவால்களைப் பொறுப்பேற்று அவற்றை வெற்றி கொண்டுள்ளோம். கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையும் இதிலொன்று. இதன் மூலம் குருநாகல் புத்தளம், நீர்கொழும்புப் பகுதிகளுக்குப் பயணிக்கும் மக்களுக்கும் இந்த பாதை பெரும் வரப்பிரசாதமாக அமைகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் வாக்குறுதிகளாக பாதை, சுகாதாரம், கல்வி என்ற வாக்குறுதிகளே மக்களுக்கு வழங்கப்பட்டன. இவை அனைத்தையும் நாம் தற்போது நிறைவேற்றி வருகின்றோம். ஒவ்வொரு காலத்திலும் ஆட்சியிலுள்ளவர்கள் வாக்குறுதிகளை மட்டும் வழங்கிய போதும் நாமே நாட்டிற்கு அமைதியையும் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். இனி பயங்கரவாதம் ஒழிப்பு, பாதை அபிவிருத்தி, நாட்டை ஐக்கியப்படுத்துதல் என்ற வாக்குறுதிகளை தேர்தல்களில் கூற முடியாது. அதிவேக நெடுஞ்சாலைகள் பற்றியும் கூற முடியாது. அதனையும் நாம் நிறைவேற்றிவிட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாட்டில் 45 வீதமாகவிருந்த மக்களுக்கான மின்சாரத்தை நாம் தற்போது 96 வீதமாக அதிகரித்துள்ளோம். கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றோம். நவீன கல்வித்துறை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் தொழில்நுட்ப பாட விதானத்தை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தின் கீழ் 1000 பூரண வசதி கொண்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப்படுகிறது.

சுகாதாரத்துறையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு ஆஸ்பத்திரிகளை நவீன மயப்படுத்தி, டாக்டர்களின் எண்ணிக்கைகளையும் அதிகரித்துள்ளோம். இனங்களுக்கிடையில் நட்புறவைக் கட்டியெழுப்பியுள்ளோம். இவற்றை பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தமது கண்களால் கண்டுணர முடியும்.

நகரங்கள் அனைத்தும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்பில் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். நாம் எத்தகைய முன்னேற்றமான நடவடிக்கைகளை நாட்டில் மேற்கொண்டு வருகின்ற போதும் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வருவது மட்டும் குறையவில்லை.

எமது திட்டங்கள் தேவையற்றது எனவும் நாம் "சகோதர சமாகம" எனவும் கூறுபவர்கள் எப்போதும் எமக்கு சேறு பூசும் விதத்திலேயே விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதனால் நாம் விமர்சனங்களில் கவனம் செலுத்தாவது நாட்டை முன்னேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து நல்லதும் கெட்டதும் எமது நாட்டுக்கு வந்து சேர்ந்தாலும் நமது மக்கள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வதே சிறந்தது. தகவல் தொழில்நுட்பம் எமக்குப் பொருத்தமில்லாத வற்றை கொண்டு வந்தாலும் நாம் இதிலிருந்து மீண்டு செயற்படுவது முக்கியம்.

ஆசியாவிலேயே சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் ஆசியையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் மேற்படி அதிவேக பாதையை குறுகிய காலத்தில் நிர்மாணித்து வழங்கிய சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இதன் போது நன்றி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com