Sunday, October 6, 2013

மங்கள உட்பட 22 பேர் கைது! சுட்டவர்கள் சுதந்திரமாக...!

நேற்று (05) மாத்தறையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் முதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். அவருடன் அவரது ஆதரவாளர்கள் 22 பேரும் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

மாத்தறை எஸ்.எஸ்.பீ. தேசபந்து தென்னக்கோனின் அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், தெவிநுவர ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எச்.ஆர். விமலசிரி, ஹபராதுவை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான லயனல் இபலவத்த ஆகியோரிடம் வாய்மொழி பெறப்பட்டுள்ளது.

இவர்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொட, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட வழக்கறிகறிஞர் குழுவினர் ஆஜராகவுள்ளனர். அவர்கள் அனைவரும் மாத்தறை நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்படவுள்ளனர்.

இதுதொடர்பில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சிலர் நேற்று (05) மாத்தறையில் இருக்காதவர்கள் என்றும், இவர்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் செயலாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலிற்கேற்ப கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் மங்கள சமரவீரவின் பேச்சாளரான வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொட தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சென்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மாத்தறை மாநகர சபைக்காக போட்டியிட்ட விந்திக்கா லாலனி என்பவரும் உள்ளடங்குவதுடன், அவர் இன்று (06) அதிகாலை 1.45 அளவிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் சிலர் வருகை தந்துள்ளதுடன் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரேனும் வருகை தரவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இது சட்ட விரோமான செயலாகும். மாத்தறைப் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் லயனல் கொடிக்கார நள்ளிரவு 12.15க்கு அவரது வீட்டில் இருக்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார். மங்கள சமரவீரவின் அலுவலகத்தில் பணிபுரிந்த சமித் என்பவர், சமரவீரவின் மாத்தறை அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற தில்ஷான் இரவு 10.00 மணிக்கும், உஷாந் இன்று அதிகாலை 2.00 மணிக்கும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலுவலகத்தில் சேவையாற்றியோர் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடாதவர்கள் என்று நம்பகத்தன்மை வாய்ந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன.

இந்த சூழ்ச்சிமிக்க ஊர்வலத்தை ஏற்பாடு செய்த மைத்திரிபால குணரத்னவின் தந்தை ஹர்மன் குணரத்னவினால் துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டுள்ளது. அவ்வேளை கடமைக்காகப் போய்க்கொண்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். அவரது உடம்பின் ஒருபகுதி செயலிழந்துள்ளதால் ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக கராப்பிட்டிய வைத்தியசாலையிலிந்து செய்தி வெளியாகியுள்ளது. அந்நிலையில் சமாதானமாய்ப் போவோம் என்பது போல துப்பாக்கியைப் பயன்படுத்திய சமாதானத்தை குட்டிச் சுவராக்கிய மைத்திரிபால மற்றும் ஷிரால் லக்திலக்கவை பொலிஸார் வாக்குமூலம் பெறவாவது அழைத்துச் செல்லாமை கேள்விக்குறியானது என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் வழக்கறிஞர் மைத்ரி குணரத்னவின் தந்தை ஹர்மன் குணரத்ன தங்காலை வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் தலைமைகளின் வேண்டுகோளுக்கிணங்க தங்காலை வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

(கலைமகன் பைரூஸ்)
(பட உதவி: லங்காதீப)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com