Sunday, September 15, 2013

அமைச்சர் வாசுதேவவிற்கும், குணசேகரவிற்கும் சம்பந்தியாகவுள்ள விக்னேஸ்வரனை தவிர வடக்கில் எவருமே இல்லையா? மஹிந்த

பிரபாகரன் உயிருடன் உள்ளாராம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் அவர் வெளியே வருவாராம் - வாக்குகளை அபகரிக்க த.தே.கூ. நாடகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து நாம் அவதானமாக உள்ளோம். எழுத்து மூலமான இந்த விஞ்ஞாபன அறிக்கையில் பல பாரதூரமான விடயங்கள் பொதிந்துள்ளன. அது நாட்டின் இறைமைக்குக் குந்தகத்தை ஏற்படுத்தக் கூடியது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இதனை கை கட்டி வாய் மூடிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனநாயக நாட்டில் எதுவும் செய்துவிடலாம் என்ற நினைப்பில் பிரிவினைவாதத்தை தூண்டி இனவாதத்தைக் கக்கும் இதுபோன்ற செயற்பாடுகளை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் மக்களது வாக்குகளை அபகரிப்பதற்காக அரசியல்வாதிகள் பலவாறான கதைகளைக் கூறுவதுண்டு. அதனைப் பெரிதுபடுத்த முடியாது. ஏனெனில் அவை மேடைப் பேச்சுடன் காற்றில் கரைந்துவிடும். ஆனால் எழுத்து மூலமான விடயங்கள் குறித்து நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ்மொழி மூலமான இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் வடக்கில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனவாத ரீதியாகவும், நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் தமது பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களது மேடைப் பேச்சுகள் மிகவும் ஆக்கிரோஷமாக உள்ளன. பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது எமக்குக் கவலை தருவதாகவே உள்ளது.

அங்கு தேர்தல் மேடைகளில் உரையாற்றுகின்ற கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் அவர் வெளியே வருவார் என்றும் தாம் மாகாணசபையைக் கைப்பற்றியதும் பிரபாகரனின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் கூறி வருகின்றனர். இதனைக் கேட்டு கூடியிருக்கும் மக்கள் விசிலடித்துக் கைத்தட்டுகின்றனர். இதனால் வேட்பாளர்கள் உற்சாகமடைகின்றனர். ஆனால் பிரபாகரன் வந்தால் என்ன நடக்கும் என்பது கை தட்டுபவர்களுக்கும் தெரியாது. வீரமாகப் பேசுபவர்களுக்கும் தெரியாது. இத்தகைய பேச்சுக்கள் இடம்பெறும் மேடைகளில் அவர்களது முதலமைச்சர் வேட்பாளரான உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் அமர்ந்திருப்பதுதான் வேடிக்கையானதும், வெட்கக்கேடா னதுமான விடயம்.

நாட்டின் இறைமையை பாதுகாக்க உயர் நீதிமன்றத்தின் உயரிய ஆசனத்தில் அமர்ந்திருந்து கடமையாற்றியவர் இன்று அரசியலுக்காக சிறு சிறு மேடைகளில் இதுபோன்ற கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு வீரமாகப் பேசுபவர்கள் தமக்குப் பாதுகாப்புத் தருமாறு பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் கடிதம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் மேடைகளில் இவ்வாறு உரையாற்ற எமது பொலிஸாரும், இராணுவத்தினருமே சுற்றிவர பாதுகாப்பளித்து வருகின்றனர். அவர்களுக்கு மொழி புரியாமையால் இவர்களும் நினைத்ததையெல்லாம் அவர்கள் முன்பாகவே பேசி வருகின்றனர்.

இத்தனை வீரமாகப் பேசும் தமிழ்க் கூட்டமைப்பினரால் வடக்கிலிருந்து ஒரு முதலமைச்சர் வேட்பாளரை தேர்தலில் போட்டியிட வைக்கமுடியாமற் போய்விட்டது. கொழும்பில் கொள்ளுப்பிட்டியில் வசிக்கும் பொரளை தேர்தல் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரைக் கொண்டுள்ள விக்னேஸ்வரனைக் கொண்டுவரக் காரணம் என்ன? வடக்கில் அப்படியொரு கல்வி கற்ற அல்லது இராஜதந்திரி சேவை புரிந்த ஒருவர் அல்லது ஒரு பிரபலமான சட்டத்தரணி ஒருவர் இல்லையா? கொழும்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும், தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரான கேசரலால் குணசேகரவிற்கும் சம்பந்தியாகவுள்ள யாழ்ப்பாணமே தெரியாத விக்னேஸ்வரனை ஏன் இவர்கள் தெரிவுசெய்தார்கள்?

உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளராகப் பெயரிடப்பட்டிருக்க வேண்டும் அவர் ஏமாற்றப்பட்டார். அடுத்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரனையாவது பெயரிட்டிருக்கலாம். இவர்கள் இருவரும் அப்பகுதியிலிருந்து மக்களுக்கு ஏதோ தங்களால் இயன்ற சேவையைச் செய்து வருகின்றனர். இவ்விருவரும் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர். உண்மையில் அந்தப்பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். ஒருவேளை பேச்சிற்கு தமிழ்க் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றால் விக்னேஸ்வரனால்வடக்கிலிருந்து சேவையாற்ற முடியுமா? அவர் அடுத்த நானே கொழும்பிற்கு ஓடி வந்துவிடுவார். தற்போது தி9 பாதையை காப்பட் வீதியாக எமது அரசாங்கம் செப்பனிட்டுள்ளதால் அவர் தினமும் கொழும்பிலிருந்து பயணம் செய்து அங்கு பணியாற்றுவாரோ தெரியாது.

முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்து தற்போது கடந்த நான்கு வருடங்களாக வடக்கு கிழக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகிறது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாதைகள் புனரமைப்பு, வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் புனர்நிர்மாணம், வணக்கஸ்தலங்கள் புனரமைப்பு எனப் பல அபிவிருத்திகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதனை விட மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வெற்றியாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித்துறையில் சில சிக்கல்கள் நிலவுகின்றது. அது குறித்து இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கும் நல்லதோர் தீர்வுகிட்டும் தெற்கை விட வடக்கில் பொருட்களின் விலைகள் மலிவாக உள்ளது. வாழ்க்கைச் செலவு அங்கு மிகவும் குறைவாக உள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாடி சகஜமான இயல்பு வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் காரணம் கொடிய பயங்கரவாத யுத்தத்ததை நாம் முடிவிற்குக் கொண்டு வந்ததே. அதற்கு மக்கள் எமக்கு நன்றி கூற வேண்டும். ஆனால் சில ஊடகங்கள் எம்மை இன்னமும் விமர்சனம் செய்கின்றன.

உண்மையை உண்மையென்று ஏற்றுக் கொள்ள வேண்டும். கொடிய யுத்தம் இடம்பெற்ற பகுதிகளின் பாரிய அழிவுகளை நாம் குறுகிய காலத்தில் மீளக்கட்டியெழுப்பியுள்ளோம். உலகில் வேறெந்த நாடுகளிலும் இத்தகையதொரு நிலையைக் காண முடியாது. வடக்கின் வசந்தம் திட்டத்திற்காக கடந்த நான்கு வருடத்தில் பெருந்தொகைப் பணம் செலவிடப்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்றுதான் வடக்கையும் கிழக்கையும் நாம் அபிவிருத்தி செய்தோம். தெற்கு உதயம் என்றோ மேற்கு வசந்தம் என்றோ நாட்டின் வேறெந்தப் பகுதிகளும் வடக்கு கிழக்குப் போன்று அபிவிருத்தி செய்யப்படவில்லை. யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதி எனும் காரணத்தினால் இவ்விரு மாகாணங்களிற்கும் முக்கியத்துவம் அளித்தோம். அதனை இப்பகுதி மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியாக இருக்கும் எனது சொந்த மாவட்டத்திலோ மாகாணத்திலோ கூட இத்தகைய அபிவிருத்தியை நான் மேற்கொள்ளவில்லை. எனது தேர்தல் தொகுதியான பெலியத்தையில் இல்லாத சகல நவீன வசதிகளுடனும் கூடிய முதற்தர வைத்தியசாலைகள் பூநகரியிலும், ஒட்டுச்சுட்டானிலும், முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் உள்ளன. இதையிட்டு நாம் பெருமைப்படவேண்டும்.

தமிழ்க்கூட்டமைப்பினரும் இன்னும் சிலரும் என்னைச் சர்வாதிகாரி எனக் கூறுகின்றனர். பாராளுமன்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று சம்பந்தன் கூறுகின்றார். ஆனால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வரமாட்டாராம். நான் கடந்த இரண்டு வருடங்களுககும் மேலாக சம்பந்தன் அவர்களைத் தனியாக அழைத்து விடயங்களை விளக்கி பாராளுமன்றத தெரிவுக் குழுவில் கலந்து உங்களது பிரச்சினையை எடுத்துக் கூறி தீர்வொன்றினைக் காண முன்வருமாறு கூறிவருகின்றேன். அவரும் ஓம் வருகின்றேன். வருகின்றேன் என்று கூறிவிட்டுச் செல்வார். ஆனால் வரமாட்டார்.

பின்னர் வெளியார் அழுத்தம் காரணமாக வருகின்றேன் என்று தானாக வந்து சொன்னார். பின்னர் அதற்கும் வரவில்லை. உண்மையில் இவர்களையும் இவர்களது அரசியலையும் என்னால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் நன்கு தெரியும். அதாவது தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள எந்தவொரு தலைவரது குடும்பத்திற்கும் எந்தவொரு சிறு பிரச்சினையும் கிடையாது. அவர்களது குடும்பங்கள் சொகுசாக வெளிநாடுகளில் சுகமாக வாழ்ந்து வருகின்றன. அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் உயர்கல்விகளை உயர்தரப் பல்கலைக்கழகங்களில் கற்று வருகின்றனர். பெண்பிள்ளைகள் நல்ல பெரிய வசதியான குடும்பங்களில் மணம் முடித்து சுகமாக கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இதுதான் உண்மை. அவர்களில் பலருக்கு இந்தியாவிலும், கனடா அல்லது அவுஸ்திரேலியாவிலும் வீடுகளும் உள்ளன.

ஆனால், இந்தத் தலைவர்களோ இங்குள்ள வறுமைப்பட்ட ஏழைப் பிள்ளைகளுககு வீரமேற்றி அவர்களை மீண்டும் ஆயுதமேந்த அழைப்பு விடுக்கின்றனர். இது நியாயமா? இதன் மூலம் நாட்டைப் பிரிக்கலாம் என இவர்கள் நினைக்கின்றனர். இது நியாயமா? இதன் மூலம் நாட்டைப் பிரிக்கலாம் என இவர்கள் நினைக்கின்றனர். புலிகள் கண்ட அதே கனவை இவர்களும் கண்டு வருகின்றனர் ஆனால் நான் இருக்கும் வரை இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். ஆயுதமேந்திய பிரபாகரனால் சாதிக்க முடியாததை இவர்கள் சர்வதேசத்தின் மூலமாகச் சாதிக்கலாம் எனக் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது, நடக்கவும் விடமாட்டேன்.

பத்திரிகை உரிமையாளருக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம். ஆனால் இன, மத பேதங்களை உருவாக்காதவகையில் செய்திகள் வெளியிடப்படவேண்டியது அவசியமானதாகும். உண்மையை உண்மையாக கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்போது பொய்யான பிரசாரங்கள் பல பரப்பப்பட்டு வருகின்றன. முஸ்லிம் வேல்ட் என்ற சஞ்சிகையில் முஸ்லிம் பெண்களின் ஆடைகள் களையப்பட்டு சித்திரவதை இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிட பள்ளிவாசல் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகள் முற்றுமுழுதாக பொய்யானதாகும்.

நாம் வடபகுதி மக்களுக்கு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவோம். அரசாங்கமானது வடபகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஆனாலும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளே ஊடகங்களில் வெளிவருகின்றன. பள்ளிவாசல் எரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வெள்ளையர்களின் ஆட்சிக்குப் பின்னர் தேவாலயங்கள் உட்பட ஆலயங்களை இந்த அரசாங்கமே அமைத்துக்கொடுத்துள்ளது.

வடக்கின் வசந்தத்தின் மூலம் வடக்கினை நாம் மீளக்கட்டியெழுப்பியுள்ளோம். எதிர்வரும் 14 ஆம் திகதி கிளிநொச்சிக்கு நான் ரயிலில் செல்லவுள்ளேன்.வடக்கில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு நிலவியமையினால் தகுதியை குறைத்து போட்டிப்பரீட்சை நடத்தி உத்தியோகத்தர்களை தெரிவு செய்துள்ளோம். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்றவுடன் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும். அதன் பின்னர் புதிய முதலமைச்சர் தான் அதனை மேற்கொள்ளவேண்டும். ஆனாலும், தேசிய அபிவிருத்தி செயற்றிட்டங்களை நாம் மேற்கொள்வோம். வடக்கில் மலசல கூடங்களை அமைப்பதற்கு கூட நாம் இராணுவத்தினரை பயன்படுத்தினோம். மாகாணசபை தேர்தல் நடைபெற்றதும் அந்தப் பணிகளையும் புதிய மாகாணசபையே பொறுப்பேற்க வேண்டிவரும். மத்திய அரசாங்கத்தின் வேலையினை நாம் மேற்கொள்வோம். மாகாணசபையின் வேலையினை அவர்களே மேற்கொள்ள வேண்டும்

1 comments :

Anonymous ,  September 16, 2013 at 11:37 AM  

Among the lot we do understand that Mr.CV is the most suitable candidate for the post of CM

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com