Thursday, September 19, 2013

வட மாகாண மக்களை வாழ விடுங்கள்! -எஸ்.ஹமீத்

பாவப்பட்டதும் பரிதாபத்திற்கும் உரிய ஒரு மாகாணம் இலங்கையில் இருக்குமென்றால், அது வட மாகாணத்தைத் தவிர வேறொரு மாகாணமாக இருக்க முடியாது. 30 வருடங்களுக்கு மேலாக யுத்தப் பேய் கடித்துக் குதறி சப்பித் துப்பிய மாகாணம் அது; இரத்த வாடை இன்னமும் வீசிக் கொண்டிருக்கும்-இழப்புகளின் ஓலம் இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கும்-மாகாணம் அது; அந்தகாரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிப் போன அபலைகளைக் கொண்டிருக்கும் மாகாணம் அது; அவயவங்களை இழந்து ஆறாத் துயரில் மூழ்கியிருக்கும் அப்பாவிகளைக் கொண்டிருக்கும் மாகாணம் அது. சொந்த ஊர்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் யுத்தத்தின் கோரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தாமாகவே வெளியேறிய தமிழ் மக்களையும் கொண்ட மாகாணம் அது!

இந்த மாகாணத்துக்குத்தான் இப்பொழுது சரித்திரத்தில் முதன் முறையாகத் தனியான தேர்தல் நடைபெறப் போகிறது. இந்தத் தேர்தல், இம் மாகாண மக்களைப் பொருத்தவரை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை.

சுயாட்சி என்றும் சுய நிர்ணயம் என்றும் உரிமைப் போராட்டம் என்றும் அதற்காக உயிர் கொடுப்போமென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மேடைகளிலே உரத்துப் பேசி, மக்களை உசுப்பேத்தி இருக்கிறார்கள். இதுவரை காலமும் காவு கொடுத்த அப்பாவி மக்களின் உயிர்கள் போதாதென்று இன்னமும் மரண தேவனுக்குத் தமது மக்களின் உயிர்களை அள்ளிக் கொடுக்கும் ஆவேசப் பேச்சுக்களை அரங்கேற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கென்ன..பதவிகளும் பஞ்சணைகளும் படாடோப வாழ்க்கை முறைகளும் பவிசான பயணங்களும் பாதுகாப்பும் இருக்கின்றன. இந்தத் தேர்தலில் மக்களை அடகு வைத்து, அதன் மூலம் இந்த அரசியல்வாதிகள் தமதும் தமது குடும்பத்தினரதும் சுகபோகங்களை மேலும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். ஆனால், பாதிப்புக்குள்ளாகப் போவது என்னவோ பாமர மக்கள்தான்!

யுத்தம் முடிந்து இப்பொழுதுதான் வட மாகாண மக்கள் கொஞ்சம் நிம்மதியான காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன; தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. புனர் வாழ்க்கைக்கும் புது வாழ்க்கைக்கும் அத்திவாரங்கள் இடப்பட்டுள்ளன. கதியற்று எங்கெங்கோ இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள் மீளக் குடியேற ஆரம்பித்துள்ளார்கள். யுத்தத்திற்குப் பலிக்கடாவாக்கப்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் சராணகதியின் பின்னர் விடுதலை பெற்று, தமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் மீண்டும் இரத்தக் களரியை ஏற்படுத்துமாப்போல், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசுவதும் செயற்படுவதும் மிகக் கேவலமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

தாம் பதவிக்கு வர என்ன திருகு தாளங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என்பது கடந்த காலங்களைப் பின்னோக்கிப் பார்த்தால் தெரியும். தமது பதவிகளைத் தக்க வைப்பதற்காக இவர்கள் அப்பாவிகளான ஜனங்களை கொடூர சாவுக்கும் இரை கொடுக்கத் தயங்காதவர்கள் என்பதையும் வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். அந்தக் குணங்களோடுதான் அவர்கள் இந்தத் தேர்தலிலும் செயற்பட்டு வருகிறார்கள்.

மூன்று தசாப்த யுத்த சூறாவளியில் எல்லாவற்றையும் இழந்து போன வட மாகாண மக்களை இனியாவது நிம்மதியாக வாழ விட்டுத் தமது சுயநல மூட்டைகளைக் கட்டிக் கொண்டு ஒதுங்கிக் கொள்வதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம் மக்களுக்குச் செய்யும் பேருதவியாகவும் பெரும் உபகாரமாகவும் இருக்கும்.

அரசின் மீதான எதிர்ப்புக் கோஷம் என்பது, வட மாகாண மக்களை இன்னும் அதல பாதாளத்தில் தள்ளி விடுமென்பதுதான் யதார்த்தம். மிகப் பலம் வாய்ந்த படைகளையும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு, யுத்தம் செய்து தமது மக்களின் 'விடுதலை'யை வென்றெடுக்க முடியாதவர்கள், வெறும் வெற்றுக் கோஷங்களின் மூலம் வென்றெடுக்க நினைப்பது வேடிக்கையிலும் வேடிக்கையாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் மக்களுக்குத் தேவை உணவு,உடை,உறையுள் என்பவற்றோடு அச்சமற்ற நிம்மதியான வாழ்க்கையே தவிர, போராட்டங்களோ-யுத்தங்களோ அல்ல. கடந்த கால யுத்தத்தினால் மக்கள் மிகவும் களைத்துச் சோர்ந்து சுருண்டு போயுள்ளார்கள். தயவு செய்து அம் மக்களை வாழவிடுங்கள்!

இதுகாலவரை இம் மக்களின் துயர் துடைக்கப் பெரிய அளவில் திட்டங்கள் தீட்டிச் செயற்படாத சர்வதேசம், இனிமேலும் அவ்வாறுதான் நடந்து கொள்ளும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சர்வதேசம் என்னும் மாயையைக் காட்டி மக்களின் மதியை மயக்காதீர்கள்.

எதிர்ப்பு அரசியல் நடாத்தும் அளவுக்கு இன்றைய சூழலில் வட மாகாண தமிழ், முஸ்லிம் மக்களிடத்தே தெம்பும் இல்லை; அதற்கான மனோ நிலைமையிலும் அவர்கள் இல்லை என்ற யதார்த்தத்தை உணருங்கள்.அந்த உணர்வின் மூலம், இணக்க அரசியலுக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயற்படுத்துங்கள்.

தேர்தலில் வெல்ல வேண்டுமென்ற வெறித்தனத்தினால் இனங்களிடையே குரோதங்களை விதைக்காதீர்கள். சகல சமூகங்களும் இணைந்து ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழும் வழி வகைகளைக் கண்டறிந்து செயற்படுங்கள்.

இதுவே இன்றைய சூழலில் அவசியமானதும் அவசரமானதுமாகும்!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com