Sunday, September 8, 2013

வலி.வடக்கிலுள்ள காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்! யாழ் தேர்தல் பிரச்சாரத்தில் பசில் உறுதியளிப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாகவும் வலி வடக்கிலுள்ள பலாலி விமானத்தளம் மற்றும் கே.கே.எஸ். துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளைத் தவிர ஏனைய காணிகள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நேற்ற நடைபெற்ற ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரி வித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாகாணசபை ஆட்சி அதிகாரத்தை உங்களிடம் தருவதற்கு தயாராகவிருக்கின்றார். இந்நிலையில் இந்த ஆட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் போனால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகாண மக்களுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த சிந்தனையூடாக தெளிவாகக் கூறியுள்ளார்.

இதனிடையே வலி.வடக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளைத் தவிர ஏனைய பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக மக்களிடம் நிச்சயம் நாம் கையளிப்போம். இதனைச் செயற்படுத்தக்கூடியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே ஆவார்.

அத்துடன் விஸ்தரிப்பின் போது பெறப்படும் காணிக ளுக்கேற்ற பெறுமதி அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வடமா காணத்திலுள்ள காணிகளை அரசு பறிக்கின்றது என்று சிலர் கூறி வரும் நிலையில் இக்காணிகள் வடமாகாணத்தில் இந்திய அமைதிப்படையிருந்த போது எடுத்த காணிகள் என்பதுடன் நாம் அவற்றை படிப்படியாக மக்களிடம் மீண்டும் கையளித்து வருகின்றோம் என்பதுடன் நாம் தமிழ் மக்களின் காணிகளை ஒரு அங்குலமேனும் எடுத்தது இல்லை.

கடந்தகாலங்களில் நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஏனைய தேர்தல்களிலும் வெற்றிபெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி நீங்கள் நன்கறிவீர்கள். இங்குள்ள பத்திரிகைகள் மக்களுக்கு உண்மையான செய்திகளை வெளியிடுவதில்லை. இந்நிலையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் ஒருபக்க செய்திகளை வெளியிடாமல் எங்களுடைய கருத்துக்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் தமது பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டும்.

சர்வதேச சமூகம், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கடந்த நான்கு வருடகாலமாக வடமாகாணத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

நீங்கள் இந்த இடத்தில் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இந்நாட்டில் ஏனைய மாகாணங்களில் மாகாணசபை அதிகாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று வடமாகாண சபைத் தேர்தல்தான் இதுவரையில் நடத்தப்படா துள்ளதுடன் அதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான்.

வடமாகாணசபைத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறும் இதனூடாக உங்களுடைய வாழ்வாதாரமும், இப்பகுதியின் அபிவிருத்தியும் மேலோங்க முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளர் வடமாகாணத்தைச் சேர்ந்தவரா?.. எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் பசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவில்லை.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்த் விஞ்ஞாபனத்தில் கல்வி, விவசாயம், இந்திய மீனவர்களால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பிடப்படவில்லை. இந்திய மீனவர்களது அத்துமீறலுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குரல் கொடுத்து வரும் அதேவேளை, எமது கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி 5,000 தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, அரசபடையிலும் இணைக்கவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே வடமாகாண மக்கள் நன்றியுடையவர்களாகவும், சமாதான விரும்பிகளுமாக இருக்கின்றபடியால் இன்றுள்ள அமைதிச் சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவ ராசா, உள்ளிட்ட வேட்பாளர்களும் உடனிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com