Wednesday, September 25, 2013

சிங்கள மாணவர்களைப் போலவே தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும்! - கல்வியமைச்சர்

சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமை களையும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நாட்டின் கல்விக் கொள்கை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார்.

இன்று (25) அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையின் பவளவிழா வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது

இன்று பிரபல பாடசாலைகள் எனக் கருதப் படுபவைகள் அனைத்தும் 1ஏபி தரப்பாடசாலைகளாகும். இவற்றிற்கு மாணவர்களைச் சேர்க்கவே இன்று பெற்றோர் பெரும் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். மாணவர்களும் ஓய்வு ஒளிச்சலின்றி அதிகாலை முதல் நகரப் பாடசாலைகளுக்கு படை எடுக்கின்றனர். இச்சிரமத்தைக் குறைக்க நாம் கிராமப்புறங்களில் 1ஏபி சுப்பர் தரப்பாடசலைகளை அமைக்க வுள்ளோம்.

அடுத்த வருடம் முடிவடைவதற்குள் இவ்வாறான 1ஏபி சுப்பர் பாடசலைகள் 200 ற்கும் மேல் அமைக்கப்பட்டு விடும்.

சாதாரணமாக வருடமொன்றிற்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் அளவில் க.கொ.த. உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றி அதில் இருபதாயிரம் பேர் அளவில் மட்டுமே பல்கலைக் கழகம் செல்கின்றனர். அப்படிச் சென்றவர்களும் இறுதியில் தொழில் இன்றி வருடா வருடம் அமைச்சுக்களுக்கு ஏறி இறங்குகின்றனர்.

இதற்குக் காரணம் கலைத்துறையில் 52 சதவீதானவர்களும் வர்த்தகத்துறையில் 27 சதவீதமானவர்களும் விஞ்ஞானத்துறையில் மிகுதி 21 சதவீதமளவிலும் தோற்றுகின்றனர். இது உடனடியாக மாற்றப்பட வேண்டும். இது கலைத்துறைக்கு 25 சதவீதமாகவும், வர்த்தகத்துறைக்கு 35 சதவீதமாகவும், விஞ்ஞான தொழில் நுட்பத்துறைக்கு 40 சதவீதமாகவும் மாற்றப்படவேண்டும். அத்துடன் இன்று தொழிற் சந்தையில் பாரிய கேள்வி நிகழ்வது வர்த்தகத்துறைக்கும் தகவல் தொழில் நுட்பத்துறைக்குமாகும்.

இதற்காகக் கல்வித் திட்டத்தில் பாரிய மாற்றம் ஒன்று தேவைப் படுகிறது. அதனையே நாம் மேலே சொன்ன 1ஏபி சுப்பர் பாடசாலை மூலமாக அடையவுள்ளோம். இதற்காக நவீன ஆய்வு கூடம், தொழில் நுட்ப ஆய்வு கூடம், போன்றவை தேவைப் படுகின்றன. எனவே அடுத்துவரும் இருவருடத்தில் அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலைக்கு மும்மாடிக் கட்டிடங்கள் இரண்டு கட்டப்பட உள்ளன. இதில் ஒன்று தொழில் நுட்பத் துறைக்கான ஆய்வு கூடமாகவும் மற்றது தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் மொழி ஆய்வு கூடம் அடங்களாக ஏனைய கட்டிடத் தேவைகனைப பூர்த்தி செய்ய உதவும்.

இதன் மூலம் இன்று கண்டி, கொழும்பு நகரங்களில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளை விட வசதியான பாடசாலையாக அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையை அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை விட மகிந்தோதய திட்டத்தின் கீழ் தொலைக்கல்வி முறையில் கல்வி கற்கக் கூடிய வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். 2020 ஆம் ஆண்டு பி.எஸ்ஸி (தொ.நு) என்ற துறையில் 1500 பட்டதாரிகளை பல்கலைக் கழகங்களில் இருந்து வெளியேற்றும் திட்டத்தையும் முன் எடுத்துள்ளோம். இது எமது வரலாற்றில் பாரிய மாற்றம ஒன்றை ஏற்படுத்தும் என்றார்.

(முஹமட் ஆஷிக்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com