Friday, August 23, 2013

லஷ்கர் ஈ தொய்பா என்ற அமைப்பு யாழில் செயற்படுவதாக வெளியான செய்தியை இராணுவம் நிராகரிப்பு

"வடக்கு கிழக்கு உட்பட எந்தவொரு பகுதியிலும் ஆயுத பயிற்சி பெறவோ, குழுக்களாக இயங்கவோ சந்தர்ப்பம் இல்லை"

பாகிஸ்தானை கேந்திரமாக கொண்ட லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு யாழ்ப்பாணத்தில் செயற்படுவதாக வெளியான அறிக்கையை இராணுவம் நிராகரித்துள்ளது. இந்தியாவை தாக்குவதற்காக லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

அமைப்பின் 8 உறுப்பினர்கள் இவ்வாறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மத்திய புலனாய்வு பிரிவு அறிக்கை வெளியிட்டிருந்தது. அவர்கள் இலங்கை மீனவர்களுடன் இந்தியாவுக்கு சென்று ஒத்துபார்ப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்.ர.Pரீ.ஈ இயக்கத்தில் எஞ்சிய பிரிவு லஷ்கர் ஈ தொய்பா மற்றும் தெஹ்ரிக் ஈ தலிபான் ஆகிய பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து இயக்கமொன்றை உருவாக்க முயற்சிப்பதாக டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் குறித்த அனைத்து ஊடக அறிக்கைகளையும் முழுமையாக நிராகரிப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை உண்மைத்தன்மையற்றது. வேறு நோக்கத்திற்காக இவ்வாறான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இன்று இலங்கையில் காணப்படும் சூழலுக்கமைய வடக்கு கிழக்கு உட்பட எந்தவொரு பகுதியிலும் ஆயுத பயிற்சி பெறவோ, குழுக்களாக இயங்கவோ சந்தர்ப்பம் இல்லை. இலங்கையில் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது. எல்ரீரீஈ இயக்கத்துடன் இணைந்த எந்தவொரு ஆயுத குழுவும் இலங்கையிலிருந்து செயற்படவில்லை.

இவ்வாறான பிரிவினைவாத குழுக்கள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற சட்டவிரோத இயக்கங்கள் இயங்குகின்றன. நெடியவன் குழு, விநாயகன் குழு போன்றவையும் இதில் உள்ளடங்கும்.

எனினும் குறித்த எந்தவொரு இயக்கத்திற்கும் இலங்கையில் ஆயுத ரீதியாகவோ ஏனைய விதத்திலோ செயற்படுவதற்கு சொற்பளவேனும் சந்தர்ப்பம் இல்லையென உறுதிப்படுத்துவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com