Sunday, August 11, 2013

நல்லூர்க் கந்தன் கொடிச்சீலையும் செங்குந்தர் பரம்பரை வரலாறும்

செங்குந்தர் என்ற சொல் குந்தத்திற்கு உரியவர் என பொருள் படுகின்றது. குந்தம் என்பது ஈட்டியைக் குறிக்கும். என கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் “ஈட்டி எழுபது” என்னும் பிரபந்தத்தில் குறிப்பிடுகின்றார். எனினும், இவர்களுக்கு கைத்தோழர் என்ற பெயர் இருந்ததாகவும், காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி கைக்கோளர் எனத் தோற்றம் பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அது மட்டுமல்லாது “எய்தவருக்குச் சிறைச்சோறு மீகுவார் கைக்கோளராகிய செங்குந்தரே ” எனக் குறிப்பிடுகின்றார் ஒட்டக்கூத்தர்.

தானங்களில் சிறந்த தானம் எனச் சொல்லப்படும் வஸ்து தானத்தை (நெசவுத்தொழிலை) பரம்பரை, பரம்பரையாகச் செய்து வரும் இவர்கள் கைக்கோளர் அல்லது செங்குந்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

எனினும், காலம் செல்லச் செல்ல இவர்களது நெசவுத் தொழில் இறக்குமதிப் புடவைகளால் பாதிக்கப்பட்டமையால் இவர்கள் நெசவுத் தொழிலைக் கைவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன போதிலும், சிலர் இன்றும் தமது பரம்பரைத் தொழிலான நெசவுத் தொழிலைச் செய்து வருகின்றனர். முன்னைய காலங்களில் இந்தமக்களால் நெய்யப்பட்ட கொடிச்சீலையே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், காலப்போக்கில் இந்த சீலை நெய்யும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இவர்களே இன்றும் நல்லூரானுக்கு கொடிச்சீலை கொடுத்து வருகிறார்கள்.

கொடிச்சீலைத்தினத்தன்று நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் செங்குந்தர் வீதிக்கு கொடிச்சீலை கொண்டுவர அனுப்பப்படுகிறது.செங்குந்த பரம்பரை எனப்படுபவர்கள் முருகப் பெருமானின் சகோதரர்களாகவும், படைவீரர்களாகவும் உடைய நவவீரருடைய வம்சாவழியினர் என குறிப்பிடுகின்றார்கள்.

“செங்குந்தப் படையர், சேனைத் தலைவர், தத்துவாயர், காருகர், கைக்கோளர்” என சிறப்பித்து கூறுகின்றார் சேந்தன் திவாகரர்.

மற்றைய கோவில்களில் கொடிச்சீலை மிகவும் புனிதமாக தாம்பாளத்தில் வைத்து உபயகாரரால் தலையில் சுமந்து கொண்டு மங்கள வாத்தியம் முழங்க கோவிலைச் சென்றடையும். ஆனால் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்கு கொடுக்கும் கொடிச்சீலை இப்படி சர்வசாதரணமாகக் கொண்டு செல்லப்படுவதில்லை.

இந்தக் கொடிச்சீலையைக் கொடுக்கும் செங்குந்த மரபினர், தம்மால் செய்யப்பட்ட ஒரு சிறு தேரில் கொடிச்சீலையை ஏற்றி கொடியேறும் நாளுக்கு முதல் நாள் காலை மங்கள வாத்தியங்கள் முழங்க தேரில் வைத்து இழுத்துவருவார்கள். கோயிலின் வாயிற்புறத்தை தேர் வந்தடைந்ததும், தேரிலிலிருந்து கொடிச்சீலையை உபயகாரராகிய செங்குந்தப்பெருமகன் தலையில் சுமந்து சென்று கோவில் பிரதம குருக்களிடம் கையளிப்பர். இந்தக் கொடிச்சீலை எடுத்து வரும் தேர் கொன்றலடி வைரவர் கோவிலுக்கு அண்மையிலுள்ள வேல்மடம் முருகன் ஆலயத்திலிருந்தே வருடாவருடம் தேர்ச்சீலையை ஏற்றிக்கொண்டு ஆலயத்திற்குப் புறப்படும்.

செங்குந்தர் வாழும் இடங்கள்

யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு, கரவெட்டி போன்ற இடங்களிலும், வன்னியில் முள்ளியவளையிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, போன்ற மாவட்டங்களிலும், தென் இந்தியாவிலும் இருக்கிறார்கள். இவர்கள் செங்குந்த முதலியார் என அழைக்கப்படுகின்றார்கள்.

இந்தியாவிலிருந்து செங்குந்த பரம்பரையினருக்கு பருத்திநூல் இறக்கியபடியால் பருத்தித்துறை எனப்பட்டது. இதேவேளை, பருத்தித்துறையின் கற்கோவளம் என்ற இடத்தில் இந்தியாவிலிருந்து கைக்கோளர் வந்து குடியேறியதனால் இந்தப் பெயர் உண்டாகியது.இந்தியாவிலிருந்து ஏழுவத்தைகளில் (தோணிகளில்) வந்த மக்கள் குடியேற்றிய இடமே திருநெல்வேலியிலுள்ள எழுவத்தை என்ற இடமாகும்.

அத்துடன், இந்தியாவிலிருந்து வள்ளத்தில் கற்கள் பருத்தித்துறை இறங்கு துறைக்குக் கொண்டு வரப்பட்ட போது அந்தக் கற்களை செங்குந்தா மக்கள் தொடர்ச்சியாக நின்று கைகளால் கற்களை மாறி மாறி கடத்தியே கரவெட்டிக் கிழக்கிலுள்ள யாக்கரை விநாயகர் ஆலயத்தினைக் கட்டி முடித்தார்கள் என இந்தப் பரம்பரையினர் குறிப்பிடுகின்றனர்.

நல்லூர் முருகனை் ஆலயத்தைவிட வடமராட்சி வல்லிபுர ஆழ்வார், வயல்வெளிக்கந்தசுவாமி கோயில், ஒட்டுசுட்டான் சிவன்கோயில், யாக்கரைப் பிள்ளையார் கோயில், நல்லூர் சட்டநாதர் சிவன் கோயில், பருத்தித்துறை பசுபதீஸ்வரர் கோயில், கரவெட்டி நுணாவில் பிள்ளையார் கோயில், மாமங்கேஸ்வரர் கோயில் என்பவற்றுக்கும் இந்தப் பரம்பரையினரே கொடிச்சீலை கொடுத்து வருகின்றனர்.

கொடிச்சீலை கொடுக்க செங்குந்தர் மக்கள் எவ்வாறு வந்தார்கள்?

தில்லையில் கோயில் எனச் சிறப்பித்துக் கூறப்படும் சிதம்பரத்தில் எழுந்தருளி இருக்கும் நடராசப் பெருமானுக்கு பூசை செய்யும் பாக்கியம் சந்தான குரவருள் ஒருவரான உமாமதி சிவாச்சரியாருக்குக் கிடைத்தது.

உமாபதி சிவாச்சாரியார் சிதம்பரத்தில் உச்சிக்காலப் பூசையை நண்பகல் 12 மணிக்கு முடித்துக்கொண்டு தனது உதவியாளர்களுடன் வீடு நோக்கிச் செல்வது வழமை. ஒரு நாள் தில்லை நகரை ஆட்சி செய்யும் மன்னன் திரியம்பகச்சோழன் இதனைக் கண்டான். அன்றிலிருந்து உமாபதி சிவாச்சாரியாரை வெயிலில் செல்ல விடாது சிவிகை, தீவர்த்தி முதலிய விருதுகளைக் கொடுத்துச் சென்றான்.

அன்றிலிருந்து உமாபதி சிவாச்சரியார் பல்லக்கிலே பூசைக்குச் சென்று வந்தார். இதனைக் கண்ணுற்ற பெண்ணாடகம் மறைஞான சம்பந்த சிவாச்சாரியார் ஒரு நாள் உமாபதி சென்ற வேளை, வழி மறித்த மறைஞான சம்பந்தர் இறந்து பட்ட மரத்தினால் செய்யப்பட்டது. சிவிகை, அதைக்காவும் கொம்புத் தண்டும் இறந்த மரத்தினாலேயே செய்யப்படுகின்றது. பட்டப்பகலில் குருடன் மட்டுமே தீவட்டிகொழுத்திக் கொண்டு போவான் என்ற பொருள்பட “பட்ட கட்டையிற் பகற்குருடன் போகின்றான் பாருங்கள்” எனக் குறிப்பிட்டார்.

உடனே, உமாபதி சிவாச்சாரியர் பல்லக்கை விட்டு இறங்கி மறைஞான சம்பந்தரின் பாதங்களில் வழுந்து வணங்கி அவரை குருவாக ஏற்றுக்கொள்ள எண்ணி பல்லக்கினை விட்டு இறங்கிய போது, தான் அவதூறு பேசியதால் தன்னை அடிப்பதற்காக உமாபதி வருகின்றார் என எண்ணிய மறைஞான சம்பந்தர் முன்னால் ஓட அவரை பின் தொடர்ந்து உமாபதியம் சென்றார். இருவரும் ஒருவர் பின் ஒருவராக நெசவு நெய்யும் தொழிலைச் செய்துவரும் செங்குந்த மக்கள் வாழும் பகுதியினை அடைந்து விட்டனர். அப்போது தாகம் மிக வாட்டியதால் செங்குந்தரை தாகத்திற்கு ஏதாவது தரும்படி மறைஞான சம்பந்தர் கேட்டார். எம்மிடம் பாத்தோயும், கஞ்சிக்கூழுமே இருக்குதெனக் கூறி கஞ்சிக்கூழை அள்ளி வார்க்க மறைஞான சம்பந்தர் அதனை இரு கைகளையும், நீட்டி மண்டைக்கையில் குடித்தார். குருபக்தி கொண்ட உமாபதியார் மறைஞான சம்பந்தரின் கைகளினால் வழிந்த கூழை தன்னுடைய இரண்டு கைகளினாலும் அள்ளிக் குடித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற அந்தணர்கள் மன்னனிடம் முறையிட்டனர். மன்னன் அன்றிலிருந்து நடராசப் பெருமானுக்கு பூசை செய்ய உமாபதிக்கு மறுப்புத் தெரிவித்தான். மன்னனால் அவமானப்படுத்தப்பட்ட மறைஞான சம்பந்தர் செங்குந்தர்கள் வாழும் கொற்றவன் குடிசையில் அன்று முதல் வாழ்ந்து வந்தார். இதனால் அவருக்கு “கொற்றவன் குடி முதலி” என்ற பெயர் வழங்கலாயிற்று.

இவ்வாறிருக்க மார்கழி மாதத்தில் தில்லைவாழ் அந்தணர் திருவிழா ஆரம்பமாகியது. ஆலயத்திற்கு தில்லை வாழ் அந்தணர்களினால் வழங்கப்பட்ட திரைச்சீலை அரைக்கம்பத்தில் அறுந்து விழுந்தது. இதனால் குழப்பம் அடைந்த அந்தணர்களும், அரசனும் நடராஜப் பெருமானிடம் முறையிட “உமாதபி சிவாச்சாரியார் பூசகராகி அவர் பருகிய கூழைக் கொடுத்த செங்குந்தர் நெசவு செய்து அவர்களால் கொடுக்கப்படும் கொடிச்சீலையே நமக்கு பிரீதி” என்று அசரீரி கேட்டது.

இந்த அசரீரியைக் கேட்ட தில்லைவாழ் அந்தணர்களும், அரசணும் உமாபதி சிவாச்சாரியாரிடம் சென்று தம்மை மன்னிக்குமாறு வேண்க்கொண்டனர். உடனே உமாபதியார் “கொடிக்கவி” என்ற பிரபந்தத்தைப் பாட செங்குந்தர் கொடுத்த கொடி வழுவில்லாமல் மேலே ஏறியது. அன்றிலிருந்து செங்குந்தர் கொடுத்த கொடிச்சீலையே தில்லையில் ஏற்றப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com