Saturday, August 10, 2013

எமக்கு சிங்கப்பூரும் வேண்டாம் யப்பானும் வேண்டாம் யாழ்ப்பாணம் தான் வேண்டும்.

ஆயிரம் தலை தாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு ஒரு பகிரங்க மடல்.

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே!

தங்களது நேற்றைய அறிக்கையினை கேட்டு யாழ்ப்பான மக்கள் மட்டுமல்ல வட மாகாண முழு தமிழ் மக்களுமே அதிர்ந்து போயுள்ளனர். உங்களது அறிக்கை தமிழ் மக்கள்மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது 'குட்டக்குட்ட குனிபவனும் மடயன் குனியக்குனிய குட்டுபவனும் மடயன்' இதில் நீங்கள் எந்தரகம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.'ஆலை இல்லா ஊருக்க இலுப்பம் பூ சக்கரை' என்பது போல் இருக்கிறது உங்கள் நடவடிக்கை.

இனி விடயத்துக்கு வருவோம். யாழ்ப்பாணத்தை குட்டி சிங்கப்பூர் ஆக்குவேன் என்று நீங்கள் சொன்ன பகிடிக்கதை தான் மக்களின் கொந்தளிப்புக்கு காரணம். ஏனென்றால் 1977ம் ஆண்டு ஒரு சாத்தான் கூறியது இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று ஆனால் நடந்தது என்ன இலங்கை வியட்னாமாக மாறியது தான் மிச்சம்.

யுத்தம் முடிந்த பிறகு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சாட் ஆமிடேச் சாவகச்சேரியின் அழிவுகளை பார்த்து விட்டு அதிர்ந்து போய் கூறினார் 'வியட்னாம் யுத்தத்தில் கூட தான் இப்படியான அழிவுகளை கண்டதில்லை' என்று இப்படியான அழிவுகளை சந்தித்த மக்களுக்கு சாவகச்சேரி பிரதேச மக்களுக்கு நீங்கள் பகிரங்கமாக சொல்லியிருக்கும் செய்தி என்ன? தமிழ்மக்களுக்கு நீங்கள் வழங்கியுள்ள எச்சரிக்கை என்னவென்று உங்களது சாவகச்சேரி பகுதியில் இருந்து உங்கள் கட்சிக்கு தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் மூலம் தெளிவாக கூறி விட்டீர்கள். கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிபதிக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தவராக மக்களால் அறியப்பட்ட ஒருவரை, தங்கள் கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக பகிரங்கமாக நீங்கள் கூறிய ஒருவரை உங்கள் வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் உங்கள் கொள்கை என்ன உங்கள் குணம் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டீர்கள்.

பத்திரிகையாளர்களின் தொலைபேசி அழைப்புக்களை நிறுத்தச்சொல்லி விட்டு பத்திரிகைகளின் குரல் வளையை நெரிப்பேன் என்று எச்சரித்த உத்தமன் நீங்கள். இரண்டு வாரத்துக்கு முன் அம்பன் பிரதேசத்தில் ஒரு தொழிலாளியை அடிக்கத்துரத்திய தலைவன் நீங்கள். போராட்டம் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை சந்திக்கு இழுத்து நடுத்தெருவில் அலைய விட்ட வழிகாட்டி நீங்கள்.

கடந்த 23 வருடமாக யாழ்ப்பாணத்தை நீங்கள் காஸா ஆக்கினீர்கள், யாழ்ப்பணத்தவர்களை காசில்லாதவர்கள் ஆக்கினீர்கள் புண்ணிய பூமியின் புனிதத்தை கெடுத்தீர்கள்.'கருத்துக்களை கருத்துக்களால் தான்வெல்ல வேண்டும்' என்று உருத்திராக்க பூனை போல் உபதேசம் செய்யாதீர்கள். ஊருக்குபதேசம் உனக்கில்லையடி பெண்னே என்று சர்வாதியாக நடந்தீர்கள். அரச அதிகாரிகளை மிரட்டி பணிய வைத்தீர்கள். மக்கள் பணத்தினை உங்கள் தேவைக்காக செலவிட்டீர்கள். இத்தனையும் போதுமா நான் இன்னும் சொல்ல வேனுமா?

ஐயா போதுமையா உங்கள்சேவை! நேரடியாக தேர்தலில் போட்டியிடக்கூட தைரியம் இல்லை. பின் கதவு வழியாக தமிழ் மக்களுக்கு எந்த தலைமைத்துவமும் தேவையில்லை. தேர்தலில் தோற்றால் அமைச்சர். வென்றால் முதலமைச்சர். ஆனால் எமது மக்கள் எப்பொதும் ஏழை பரதேசியாய் வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதான் விதியா? தமிழ் மக்கள் பாலஸ்தீனத்தையும் (காஸா) பார்த்துவிட்டார்கள் வியட்னாமையும் பார்த்து விட்டார்கள். தமிழனுக்கு இப்போது சிங்கப்பூரும் தேவையில்லை யப்பானும் தேவையில்லை யாழ்ப்பாணம்தான் தேவை.

1920-1930களில் எத்தனை தமிழ் பிள்ளைகள் சிங்கபூரிலும், மலேசியாவிலும் இருந்து யாழ்ப்பானத்துக்கு கல்வி கற்க வந்தார்கள். என்று உங்களுக்கு தெரியுமா? தமிழனின் அரசியல் பாரம்பரியம் என்னவென்று தெரியுமா உமக்கு. அடங்காத்தமிழனின் பரம்பரையை அடகு வைத்தவர் தான் நீங்கள். நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கூறுகிறேன் தமிழனுக்கு தேவை சிங்கப்பூரோ யப்பானோ இல்லை தமிழ் பாரம்பரியத்தின் சின்னமாக யுனேஸ்கோ நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட யாழ் மண்ணே எமக்குத்தேவை! யாழ் மண்ணின் கலாச்சாரமே எமக்குத்தேவை! யாழ் மண்ணின் சுதந்திரமே எமக்குத்தேவை.

தாய் மண்ணுக்கே எம் முதல் வணக்கம்.

நான் ஒன்று தெளிவாக வலியுறுத்தி குறிப்பிடுகிறேன். எமது கட்சி ஆட்சி அமைத்தால் நாட்டில் உருவாகின்ற கோவேறு கழுதைகளையும், சிங்கங்களையும், கரடிகளையும், காட்டிற்கு அனுப்பி ஒரேநாளில் யாழ்ப்பானத்தை யாழ்ப்பாணம் ஆக்குவோம்.

'அச்சமில்லாத பிச்சையில்லாத தமிழ் சமூகத்தை உருவாக்குவோம்.' -

நன்றி- இப்படிக்கு
வி.சகாதேவன் (சகா)
ஜனநாயக ஐக்கிய முன்னணி
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.

1 comments :

Unknown August 11, 2013 at 3:49 AM  

நல்ல போடு போட்டீங்கள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com