Wednesday, July 24, 2013

மருத்துவ பயன் நிறைந்த காளான்!

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளான் கழுவும் முறை: இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் சீக்கிரம் அதிகத் தண்ணீரை உறிஞ்சி விடும். அதனால் கீரையை அலசுவது போல் ஓர் அகல பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சீக்கிரமாக அலசி எடுக்கவும். மேல் பாகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் கறுப்பான சிறிய திட்டுத் திட்டான பகுதி தண்ணீரில் வந்துவிடும்.

இரண்டுமுறை அலசலாம். தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து அலசி எடுத்தால் சீக்கிரம் கறுப்பு நிறமாக மாறாமல் இருக்கும். அலசிய பின் ஒரு துணியின் மீது பரப்பி அதிகப்படியான ஈரம் அதில் உறிஞ்சப்படும்படி சில நிமிடங்கள் வைத்து எடுத்து நறுக்கவும்.

இல்லாவிடில் வதக்கும்போது இதில் உறிஞ்சப்பட்ட தண்ணீர் வெளியே வந்துவிடும். பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்று நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. பாதி அளவு எடுத்து உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் மீதியை உபயோகப்படுத்தலாம்.

ஆனால், கவரை திறந்து அப்படியே வைக்கக்கூடாது. அப்படி செய்தால் காளான் கறுத்து விடும். ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடி வைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம் சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com